வணிகம்

5 வாரங்களாக தொடர் சரிவு கண்ட தங்கம் விலை - இறங்கு முகத்திற்கு என்ன காரணம்?

5 வாரங்களாக தொடர் சரிவு கண்ட தங்கம் விலை - இறங்கு முகத்திற்கு என்ன காரணம்?

webteam

சென்னையில் ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 560 ரூபாய் விலை சரிந்துள்ளது. இந்த நாட்களில் தங்கம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 70 ரூபாய் விலை குறைந்து 5 ஆயிரத்து 165 ரூபாய்க்கும், ஒரு சவரன் 560 ரூபாய் விலை இறங்கி 41 ஆயிரத்து 320ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 2 ரூபாய் 50 காசுகள் விலை குறைந்து 67 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 5 வாரங்களில் தங்கம் சவரனுக்கு 2 ஆயிரத்து 720 ரூபாய் விலை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த நாட்களில் தங்கம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். தொடர் ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அவர் கூறிய அடுத்த நாளே தங்கம் வரலாறு காணாத விலையேற்றம் கண்டது.

ஆனால், அதன் பிறகான நாட்களில் தங்கத்தின் விலை இறங்கு முகத்திலேயே காணப்படுகிறது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதன் விளைவாக முதலீடுகள் கடன் பத்திரங்களை நோக்கிச் செல்வதாக கூறப்படுவதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

நடப்பு ஆண்டின் பிப்ரவரி ஒன்றாம் தேதி தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மறு நாளில் அதன் விலை இதுவரை இல்லாத அளவாக 44 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பிப்ரவரி 16, 25ஆம் தேதிகளில் தங்கம் விலை முறையே 42 ஆயிரத்து 240 மற்றும் 41 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையானது. மார்ச் ஒன்றாம் தேதி தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், மார்ச் 8ஆம் தேதியான இன்று 41 ஆயிரத்து 320 ரூபாயாக விலை குறைந்துள்ளது. 5 வாரங்களில் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 720 ரூபாய் விலை குறைந்துள்ளது.