இறையாண்மை, வெளிநாட்டு உறவுகள் மற்றும் ராணுவத்தை கட்டியெழுப்புதல் போன்ற விஷயங்களில் வரலாற்று நெடுங்கிலும் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பெரும் மோதல்களாக இருந்துவந்துள்ளன. ஆனால், தற்போது இரு நாட்டு உறவுகளுக்கிடையே அன்னாசிப்பழம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 1-ம் தேதி தைவானிலிருந்து அன்னாசிப்பழத்தை இறக்குமதி செய்வதை சீனா தடை செய்தது. இது உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், தனது சொந்த நாட்டு விவசாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் சீனா குற்றம்சாட்டியது.
சீனாவின் இந்தக் குற்றச்சாட்டால் கடுப்பானது தைவான். அப்போதிருந்து, கோபமடைந்த தைவான் இறக்குமதி செய்யப்பட்ட அன்னாசிபழங்களில் பூச்சிகள் காணப்படுவதாக சீனாவின் கூற்றை மறுத்தது. மேலும், இந்த நடவடிக்கை தைவான் மீது அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தைவான் குறிப்பிட்டது.
தைவான் அதிபர் சாய் இங்-வென் தனது ட்விட்டர் பக்கத்தில் , "ஆஸ்திரேலிய ஒயினுக்குப் பிறகு, நியாயமற்ற சீன வர்த்தக நடைமுறைகள் இப்போது தைவானிய அன்னாசிப்பழங்களை குறிவைக்கின்றன. ஆனால், அவர்களின் இந்த நோக்கம் பலிக்காது. ஒரு கேக் வெட்டப்பட்டு தட்டில் வைக்கப்படும்போது, அந்த இடத்தில் எங்கள் அன்னாசிப்பழத்தின் சாரம்சம் இருக்கும். எங்கள் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், சுவையான தைவானிய பழங்களை அனுபவிக்கவும்!" என்று பதிவிட்டுள்ளார்.
அன்னாசிப்பழத்துக்கு சண்டை!
சீனாவிற்கும் தைவானுக்கும் இடையிலான உறவுகள், சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், வலுவான வர்த்தக தொடர்புகள் காரணமாக ஆதரிக்கப்படுகிறது. வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் (Council on Foreign Relations -CFR)-ன் படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2018-ல் 150.5 பில்லியன் டாலராக இருந்தது. இது 1999-ல் 35 பில்லியன் டாலராக இருந்தது. சீனா, தைவானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகும். விவசாயப் பொருள்கள் உள்பட மொத்த வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 30% தைவானின் வர்த்தகம் சீனாவால் நடைபெறுகிறது.
எனவே, தைவானில் இருந்து அன்னாசி இறக்குமதியை நிறுத்துவதாக சீனா கூறிய பின்னர், இந்தத் தடை தைவானில் விளைபொருட்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதன் விலை வீழ்ச்சியடையக் கூடும் என்றும் தைவான் அச்சப்படுகிறது.
தைவானின் வேளாண் கவுன்சிலின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு 420,000 டன் அன்னாசிப்பழத்தில் 10 சதவீதத்தை ஏற்றுமதி செய்தது. தைவானின் பெரும்பாலான ஏற்றுமதிகள் சீனாவுக்குச் செல்கின்றன. தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 99.97 சதவீத அன்னாசிப்பழங்களை சீனா ஆய்வுக்குட்படுத்தியது. இதையறிந்த தைவான் சீனாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவுடனான அதன் வர்த்தகப் போரின் முந்தைய உதாரணத்தை மேற்கோள் காட்டி, வரிவிதிப்பின் மூலம் சீனா தனது பொருளாதாரத்தை உயர்த்த முயற்சிக்கிறது என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆஸ்திரேலிய ஒயின் மற்றும் மாட்டிறைச்சி இறக்குமதிக்கு சீனா வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.
தைவானின் 'அன்னாசி சவால்'!
இதைத் தொடர்ந்து, தைவானிய ஜனாதிபதி சாய் இங்-வென் சமூக ஊடகங்களில் 'அன்னாசி சவாலை (Pineapple challenge) முன்னிறுத்தினார். அதன்மூலம் அவர் தைவானிய நுகர்வோர்கள் பழங்களை வாங்குவதை வலியுறுத்தினார். மேலும், இதன்மூலம் சீனாவின் நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்.
சாய் இங்-வென் ஜனநாயக முற்போக்குக் கட்சியைச் சேர்ந்தவர். இக்கட்சி சீனாவுடன் சேருவதை வெளிப்படையாக எதிர்க்கிறது.
தைவானின் வெளியுறவு அமைச்சர், "உலகெங்கிலும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்கள் #தைவானுடன் நிற்கவும் & #FreedomPineapple-க்கு பின்னால் அணிவகுக்கவும்" வலியுறுத்தினார்.
தைவானில் இருப்பவர்கள் அன்னாசிப்பழங்களை நேசிப்பதாக சமூக ஊடகங்களில் படங்களை பதிவிட்டு வைரலாக்கினர். அமெரிக்க அலுவலகம் #pineapplesolidarity என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தியது.
இந்த சமூக ஊடக பிரசாரமானது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிபிசி அறிக்கையின்படி, இந்த பிரசாரம் மூலம் தைவானுக்கு ஜப்பானில் இருந்து 5,000 டன் பழங்களுக்கான ஆர்டர்களைப் பெற உதவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர், #FreedomPineapple பிரசாரத்தைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தைவான் அரசாங்கம் சீனத் தடையால் ஏற்படக்கூடிய இழப்பை ஈடுசெய்ய போதுமான ஆர்டர்களை பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.