வணிகம்

டாஸ்மாக்: ஆட்சி மாறினாலும் காட்சி மாறாததற்கு காரணம் என்ன? - ஒரு பார்வை

டாஸ்மாக்: ஆட்சி மாறினாலும் காட்சி மாறாததற்கு காரணம் என்ன? - ஒரு பார்வை

Sinekadhara

'ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு?' என எதிர்கட்சியாக இருந்தபோது போர்க்கொடி உயர்த்திய திமுக, தற்போது ஊரடங்கில் டாஸ்மாக் திறந்திருப்பதை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆட்சி மாறினாலும் டாஸ்மாக் விவகாரத்தில் காட்சிகள் மாறாமல் இருப்பதற்கான காரணத்தை காண்போம்.

வருவாயில் 60 சதவிதம்:

தமிழக அரசின் வருவாயில் கிட்டத்தட்ட 60 சதவீதம் வருமானம் டாஸ்மாக் மற்றும் எரிபொருள் விற்பனையிலிருந்து கிடைப்பதாக கூறப்படுகிறது. தற்போது வருவாய் பற்றாக்குறை நிலவும் சூழலில், வேறுவழியின்றி டாஸ்மாக்கை திறக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதாக கூறப்படுகிறது. எரிபொருள் மற்றும் மதுபான விற்பனையே முக்கிய வருவாய் ஆதாரமாக இருப்பதாகவும், மற்ற கடைகளைப் போலவே மதுபானக் கடைகளையும் மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

மதுபானம் மற்றும் எரிபொருட்கள் ஜிஎஸ்டி வரியின் கீழ் இல்லாததால் அவற்றின் மீதான விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் கலால் வரியிலிருந்து தமிழக அரசுக்கு வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் சொந்த வரி வருவாயில் விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி மூலம் கிடைக்கும் பங்கு சராசரியை விட அதிகமாக உள்ளதாக பி.ஆர்.எஸ் ஆய்வு கூறுகிறது.

ஜிஎஸ்டி அல்லாத வருவாயை சார்ந்திருக்கும் மாநிலங்கள்:

ஜிஎஸ்டி அல்லாத வருவாயை சார்ந்திருக்கும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவுக்கு நன்மைகளும் அதே நேரத்தில் குறைபாடுகளும் இருப்பதாக தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் பேராசிரியர் என்.ஆர்.பானுமூர்த்தி தெரிவித்துள்ளார். சில மாநிலங்கள் மது விலக்கு குறித்து பரிசீலித்து வருவது கலால் வரி மூலம் கிடைக்கும் வரி வருவாயை இழக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது. உதாரணமாக பீகாரில் கடந்த 2016 முதல் மது விற்பனை தடை செய்யப்பட்டது.

இதனால் 2015-16 ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் சொந்த வரிவருவாயில் 12.3 சதவீதம் கலால் வரியின் பங்கு இருந்தது. மது விற்பனை தடைக்கு பின்னர் அடுத்த ஆண்டிலேயே அந்த வரி சதவீதம் பூஜ்ஜியமானதாக ஆய்வுத் தகவல் கூறுகிறது. எனவே மாநிலத்தின் சொந்த வருவாயில் மது விற்பனை முக்கிய பங்கு வகிப்பதால் காட்சிகள் தொடர்கின்றன.