இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு சவரன் 55,960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்திருக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் தங்கம் விலை உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் சரி பெரிதாக சந்தோஷமோ வருத்தமோ படமுடிவதில்லை. ஏனெனில், பங்குச்சந்தை போல் தினமும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறது தங்கம்.
‘இதுதான் குறைவான விலை’ என நம்பி தங்கத்தை கடைகளில் சென்று வாங்க மனம் மறுக்கின்றது. ஏனெனில் அடுத்தநாளே நாம் வாங்கிய விலையைவிட தங்கத்தின் விலை குறைந்துவிடுகிறது. தங்கத்தின் விலையில் இருக்கும் இந்த ஏற்ற இறக்கம் இன்னும் எத்தனை நாள்களுக்கு தொடரும்?
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கிக்குவித்தன; இஸ்ரேல் போர், ரஷ்யா - உக்ரைன் போரும் இந்த விலை ஏற்றத்துக்கு மறைமுகமாக உதவின. இதேபோல டாலரின் மதிப்பு குறித்த கேள்வியும் தங்கத்தை உச்சத்தை நோக்கி நகர்த்தியது. இந்தியாவில் இம்போர்ட் வரியை குறைத்ததால் தங்கத்தின் விலையில் சில வாரங்கள் வீழ்ச்சி காணப்பட்டது. ஆனால், அந்த விலையில் இருந்து வெகு விரைவாகவே உச்சத்தை தொட்டது. அமெரிக்காவில் ஃபெட் ரேட் கட் செய்ய, தங்கம் விலை மேலும் அதிகரித்தது. இப்படி பல காரணங்களால்தான் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். ட்ரம்ப் ஆட்சியைக் கைப்பற்றியதும், அமெரிக்க பங்குச்சந்தைகள் ஏற்றத்தைக் கண்டன. தங்கத்தில் முதலீடு செய்வதைவிட பங்குச்சந்தைகள் லாபம் அதிகம் தரும் என்பதால் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. டிரம்ப் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் டாலரின் விலையும் உயர்ந்து கொண்டு இருக்கிறது. அதுவும் தங்கத்தை சேதாரமாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாகவே சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்குவதை நிறுத்திவிட்டன. தங்கத்திற்கான டிமாண்டு குறைந்திருப்பதாலும், டாலர், டிராம்ப் போன்ற காரணங்களாலும்தான் தங்கத்தின் விலையில் இந்த இறக்கம் தொடர்கிறது. இது தற்காலிகமானதுதான்.
அதே சமயம், இந்த ஏற்ற இறக்கம் பிப்ரவரி வரை தொடரும் என உறுதியாகச் சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஒரு அவுன்ஸ் தங்கம் அமெரிக்காவில் 2590 டாலருக்கு தற்போது வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் 2000 டாலருக்குத்தான் தங்கம் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.
தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்கள் குறைந்தாலும், அதை சேமிப்பதற்கான வாய்ப்பாகவே பார்க்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பின்னர், தங்கத்தின் விலை மீண்டும் பழைய உச்சத்தை கடந்து ஜொலிக்க ஆரம்பித்துவிடும் என உறுதியாக நம்பப்படுகிறது.