வணிகம்

பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?

பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?

webteam

தென் அமெரிக்காவில், கெளதிமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய நாடுதான் எல் சல்வதார். காபி, பருத்தி, சோளம், கரும்புக்கு பேர் போன இந்த நாடுதான், உலக அரங்கில் முதல்முறையாக, பிட்காயினை ஒரு அதிகாரபூர்வ பணப்பரிவர்த்தனை சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ள சட்டம் இயற்றியது.

கடந்த ஜூன் 2021-ல், பிட்காயினை அதிகாரபூர்வமான பணப்பரிவர்த்தனை சாதனமாக மாற்ற சட்டம் இயற்றுவதாகக் கூறியபோது, பல பொருளாதார வல்லுநர்களும் நம்பவில்லை. 2021 செப்டம்பரில் அதை செயல்படுத்திய போது, பன்னாட்டு நிதியம் உட்பட பலரும் அதிர்ந்து போயினர். சகட்டு மேனிக்கு விலை ஏற்ற இறக்கம் காண்பது, யார் அச்சிடுகிறார், பிட்காயினில் ஒரு பிரச்னை வந்தால், அதை யாரிடம் சென்று முறையிட்டு வாதிடுவது என எதுவும் தெரியாது.

அமெரிக்க டாலர் என்றால், அது அமெரிக்க அரசாங்கத்தின் மதிப்பையும், அமெரிக்க பொருளாதாரத்தின் வலிமையையும் பிரதிபலிக்கும், அது போல எந்த வித நடைமுறை சொத்துக்களையும் பிட்காயின் பிரதிபலிக்காதது, முழுக்க முழுக்க டிஜிட்டலிலேயே இயங்குவது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பொருளாதார வல்லுநர்கள் பிட்காயினை ஒரு சட்ட ரீதியில் அனுமதிக்கப்பட்ட பணப் பரிமாற்ற சாதனமாக அங்கீகரிக்க வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் எல் சல்வதார் தன் நாட்டில் பிட்காயினை ஒரு அதிகாரபூர்வ கரன்சியாக அறிவித்ததோடு மட்டுமின்றி, தொடர்ந்து பொதுமக்கள் பணத்தில் பல மில்லியன் டாலரைச் செலவழித்து சுமார் 2,301 பிட்காயினை வாங்கிக் குவித்துள்ளார் எல் சல்வதாரின் அதிபர் நயிப் புக்லே (Nayib Bukele).

ஏற்றுக் கொள்ளாத மக்கள்: சரி, ஒருநாட்டின் அரசாங்கமே கூறிவிட்டது என்பதற்காக, பிட்காயினை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்களா? என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில். பிட்காயின் பரிமாற்றங்களை ஊக்குவிக்க எல் சல்வதார் 'சிவோ' (Chivo) என்கிற செயலியைக் கொண்டு வந்தது. அச்செயலில் இணைவோருக்கு 30 அமெரிக்க டாலருக்கு நிகரான பிட்காயின்கள் பதிவிறக்கச் சலுகையாகக் கொடுக்கப்பட்டது. 65 லட்சம் பேரில் சுமார் 40 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ததாக பல்வேறுத் தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சிவோ பதிவிறக்கம் செய்தவர்களில் சுமார் 20% பேர் மட்டுமே, சலுகைக்குப் பிறகும் அச்செயலியைப் பயன்படுத்துவதாக அமெரிக்காவின் நேஷனல் பீரோ ஆஃப் எகனாமிக் ரிசர்ச் என்கிற அமைப்பின் கருத்துக் கணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது போக சிவோ செயலியில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாகவும் ப்ளூம்பெர்க் தளத்தில் கூறப்பட்டுள்ளது. எல் சான்டே (El Zonte) என்கிற கடற்கரை நகரத்தில் ஓரளவுக்கு பிட்காயினை அதிகம் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், சான் சல்வதாரிலேயே பெரும்பாலான மக்கள் தொடர்ந்து ரொக்கத்தில் தான் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சி என் பி சி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிட்காயினுக்குப் பிறகு எல் சல்வதார் பொருளாதாரத்துக்கு என்ன ஆனது?

பிட்காயினை அறிமுகப்படுத்திய பிறகு, எல் சல்வதாரில் சுற்றுலா பயணிகளின் வரவு சுமார் 30% அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜிடிபி வளர்ச்சியில் பெரிய மாற்றம் இல்லை. கடந்த 2020ஆம் ஆண்டு -8.6 சதவீதமாக இருந்த எல் சல்வதாரின் ஜிடிபி வளர்ச்சி, 2021ஆம் ஆண்டில் 10.7 சதவீதமாக அதிகரித்தது. 2022ஆம் ஆண்டில் 2.9 சதவீதமாகவும், 2023-ல் 1.9 சதவீதமாகவும் இருக்கலாம் என உலக வங்கி கணித்துள்ளது.

நிலையற்ற பொருளாதாரம்: கடந்த 2001ஆம் ஆண்டிலேயே எல் சல்வதார் தன் நாட்டின் சொந்த கரன்சியை விடுத்து, அமெரிக்க டாலரை தன் கரன்சியாக ஏற்றுக் கொண்டது. எல்சல்வதார் தொடர்ந்து பிட்காயினில் முதலீடு செய்து வருவதால், அமெரிக்க டாலர் போன்ற வலுவான கரன்சியை பிட்காயினாக மாற்றி வருகிறது. இது ஒட்டுமொத்தமாக அந்நாட்டின் கரன்சி கையிருப்பையும், நாட்டின் பொருளாதார மதிப்பையுமே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பிட்காயின் கடந்த நவம்பர் 2021-ல் 68,500 டாலரில் இருந்து தற்போது சுமார் 21,500 டாலரில் வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 69 சதவீத சரிவு. இந்த சரிவு, எல்சல்வதாரின் பொருளாதாரத்தில் பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

சரிந்த ரேட்டிங்ஸ்:

ஒரு தனிநபர் கடன் வாங்கும் போது, அவர் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவாரா என்பதைத் தெரிந்து கொள்ள நிதி நிறுவனங்கள் அந்த நபரின் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கும். அது போல ஒரு நிறுவனம் அல்லது நாடுகளுக்கு பல்வேறு ரேட்டிங் நிறுவனங்கள் கொடுக்கும் மதிப்பீட்டை வைத்துதான் பன்னாட்டு நிதியம், உலக வங்கி, பெரிய நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கும். எல் சல்வதாருக்கு ஃபிட்ச் நிறுவனம் கடந்த ஏப்ரல் 2020-ல் B- ரேட்டிங் வழங்கி இருந்தது. கடந்த பிப்ரவரி 2022-ல் அது CCC என குறைக்கப்பட்டது. எஸ் & பி ரேட்டிங் நிறுவனம் கடந்த அக்டோபர் 2021-ல் B- வழங்கி இருந்தது, ஜூன் 2022-ல் CCC+ ஆக தரத்தைக் குறைத்தது. மூடீஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி 2021-ல் B3 என வழங்கி இருந்தது மே 2022-ல் Caa3 என குறைத்தது.

கடன் இல்லை

இதனால் சர்வதேச அளவில் கடன் வாங்க முடியாத சூழல் அதிகரித்துள்ளது. அப்படியே நிதி நிறுவனங்கள் கடன் கொடுத்தாலும், அதற்கான வட்டி மிக அதிகமாக இருக்கும். சமீபத்தில், வால்கெனோ பாண்ட் என்கிற பெயரில் பிட்காயினை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கடன் பத்திரங்களை வெளியிட இருந்தது எல்சல்வதார். ஆனால் இந்த கடன் மதிப்பீடுகள் சரிவு மற்றும் பிட்காயின் சரிவு எல்லாம் ஒன்றாக சேர்ந்ததால், தற்போது அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பன்னாட்டு நிதியத்திடம் $1.3 பில்லியன் கடன் கேட்டிருந்தது எல் சல்வதார். ஆனால், பிட்காயினை அதிகாரபூர்வ பணமாக அறிவித்த காரணத்தால் அக்கடனைத் தர ஐ எம் எஃப் கிட்டத்தட்ட மறுத்துவிட்டது எனலாம். அதே போல அமெரிக்காவின் ஒரு சில அமைப்புகளிடமிருந்து எல் சல்வதாருக்குக் கிடைத்துக் கொண்டிருந்த சில உதவித் தொகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கடன் கிடைக்கவில்லை என்ற பின், குறைந்தபட்சம் தன் செலவீனங்களையாவது குறைத்துக் கொள்ளலாம். வரியை உயர்த்தி வருவாயை அதிகரிக்கலாம். அதையும் எல் சல்வதார் செய்வதாகத் தெரியவில்லை. மாறாக, பொதுமக்கள் பணத்தை பிட்காயினில் முதலீடு செய்து வருவதாக சி என் பி சியின் கட்டுரை ஒன்றில் எல் சல்வதார் விமர்சிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு நாட்டில் பொருளாதாரப் பிரச்சனை வரும் போது பணத்தை அச்சிடுவது, நிதிச் சிக்கலைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய ஆப்ஷனாக இருக்கும். எல் சல்வதார் அமெரிக்க டாலரை தன் கரன்சியாக ஏற்றுக் கொண்டதால், பணத்தை அச்சிட முடியாது.

கடனை அடைக்குமா: எல் சல்வதார் நாடு ஏற்கனவே தன் மொத்த ஜிடிபியில் ஏறத்தாழ 90% கடன் வாங்கியுள்ளது. அந்த கடனுக்கு வட்டியாக மட்டும் சுமார் $320 மில்லியன் செலுத்த வேண்டும். அது போக, வரும் ஜனவரியில் சுமார் $800 மில்லியன் மதிப்பிலான கடன் பத்திரங்கள் முதிர்ச்சி அடைய உள்ளன. இந்த கடன் சிக்கலை தீர்க்கவே எல் சல்வதாரிடம் போதுமான பணம் இல்லாமல் திணறுவதாகவும், அந்நாடு கடன் தொகையைச் செலுத்தாமல் தன் பொறுப்பை தட்டிக் கழிக்க வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தளங்களில் செய்தி வெளியாகியுள்ளன. எல்சல்வதார் ஒரு நிலையற்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என ஜே பி மார்கன் ஸ்டான்லி நிறுவனம் மற்றும் சர்வதேச பன்னாட்டு நிதியம் எச்சரித்துள்ளது.

எல் சல்வதார் ஒரு கடன் குழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் எந்த ஒரு பொருளாதார பிரச்சனையையும் பிட்காயின் தீர்க்கவில்லை என தென் அமெரிக்க நாடுகளுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்கி வரும் ஃப்ராங்க் முகி (Frank Muci) என்பவர் எச்சரித்துள்ளார்.

- கெளதம்