வணிகம்

வால்ஸ்டீரீட் 'பிஸ்தா'க்களுக்கு 'சாமானியர்கள்' தந்த ஷாக்! - 'கேம்ஸ்டாப்' விவகார பின்புலம்

webteam

ஒட்டுமொத்த அமெரிக்காவும் கொஞ்சம் ஆடிப்போயிருக்கிறது. குறிப்பாக, பங்குச்சந்தை ஜாம்பவான்கள் கொதித்துப் போயிருக்கின்றன. அதேநேரத்தில் இணையம் கொண்டாட்டம் கலந்த ஆவேசத்தில் இருக்கிறது... - எல்லாம் கேம்ஸ்டாப் (GameStop) நிறுவன பங்கு விவகாரம்தான். இப்போது இணையவாசிகளாலும், பங்குச்சந்தை ஆர்வலர்களாலும் சூடாக விவாதிக்கப்படும் இந்த விவகாரத்தின் பின்னணியை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

கேம்ஸ்டாப் என்பது வீடியோ கேம்களை விற்பனை செய்யும் ஓர் அமெரிக்க நிறுவனம். பழைய கால வீடியோ கேசட் கடைகள் போல, இந்த இணைய யுகத்திலும் வீடியோகேம்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை நடத்தி வரும் நிறுவனம் இது.

அமெரிக்காவுக்கு வெளியே இந்த நிறுவனத்தை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பது மட்டும் அல்ல, அந்நாட்டிலேயே கூட இந்நிறுவனம் தள்ளாட்டத்தில் இருந்தது. வீடியோகேம்களை நேரில் வந்து வாங்குபவர்கள் குறைந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு வேறு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வேட்டு வைத்தது. பொதுமுடக்கம், சமூக இடைவெளி காரணமாக கேம்ஸ்டாப் நிறுவன கடைகளுக்கு நேரில் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சி அடைந்து, நிறுவன எதிர்காலமே கேள்விக்குறியானது.

இப்படி தள்ளாடிக்கொண்டிருந்த கேம்ஸ்டாப் நிறுவனம்தான், அமெரிக்க பங்குச்சந்தையான வாட்ஸ்டிரீட்டையே இன்று பதறவைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. சில மாதங்கள் முன்பு வரை 400 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக கருதப்பட்ட நிறுவனம், அண்மையில் 10 பில்லியன் டாலர் மதிப்பை தொட்டது. வெறும் 20 டாலராக இருந்த அதன் பங்குகள் விலை, 347 டாலர் எனும் உச்சம் தொட்டு பின்னர் இறங்கியுள்ளது.

இந்த ஏற்ற இறக்கத்தில், பங்குச்சந்தை ஜாம்பவான் நிறுவனங்கள் எக்கச்சக்கமான நஷ்டத்தை சந்தித்து திணறிப் போயின. இந்த நிறுவனங்கள் திவாலாகிப்போவதை தவிர்க்க, கேம்ஸ்டாப் நிறுவன பங்குகள் பரிவர்த்தனையில் கட்டுப்பாடு விதித்து காப்பாற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டுப்பாடுகளை பார்த்து, சிறுமுதலீட்டாளர்கள் எங்களுக்கு வந்தால், தக்காளி சாஸ், உங்களுக்கு வந்தால் ரத்தமா என பொங்கி கொண்டிருக்கின்றனர்.

கேம்ஸ்டாப் நிறுவன மதிப்பும், பங்குகளும் இப்படி திடீரென உயர என்ன காரணம்? இந்த உயர்வால் ஏன் பங்குச்சந்தை நிறுவனங்கள் பாதிக்கப்பட வேண்டும்? இந்த விவகாரத்தில் சிறு முதலீட்டாளர்கள் ஏன் ஆவேசம் கொள்ள வேண்டும்?

- இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில், இணையத்தின் ஆற்றலில் இருக்கிறது.

ஆம், பங்குச்சந்தை விளையாட்டில் எப்போதும் வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருக்கும் சிறு முதலீட்டாளர்கள் இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி, பெரும் பங்கு நிறுவனங்களுக்கு பழக்கப்பட்ட ஆட்டத்தை அவற்றுக்கே ஆடிக்காட்டியிருக்கின்றனர். அதன் விளைவுதான் கேம்ஸ்டாப் பங்குகளின் ஏற்ற இறக்கம்.

பொதுவாக, பங்குச்சந்தை என்பது பரமபத விளையாட்டு போன்றது. பங்குகளின் ஏற்ற இறக்கத்திற்கு, ஆய்வு சார்ந்த பல காரணங்களை கூறலாம் என்றாலும், பல நேரங்களில், விலை போக்கின் பின்னே கண்ணுக்குத் தெரியாத பல விளையாட்டுகள் அரங்கேறுவது உண்டு. பங்குச்சந்தை தொடர்புடைய பெரு நிறுவனங்களும், செல்வாக்கு மிக்க நபர்களும், பலவித தந்திரங்களை கையாண்டு, பங்குகள் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி சந்தையை பதறச்செய்வது உண்டு.

இந்த விவகாரங்களின் பின்னே நடந்தது பெரும்பாலும் புரியாத புதிராக இருக்கும் என்பது மட்டும் அல்ல, இவற்றால் லாபம் அடைவது குறிப்பிட்ட சில பங்கு நிறுவனங்களாகவும், நஷ்டமடைவது அப்பாவி சிறு முதலீட்டாளர்களாகவும் இருக்கும். அமெரிக்கா முதல், ஷர்ஷத் மேத்தா புகழ் இந்தியா வரை இதுதான் நிதர்சனம்.

இதுவரை வாயில்லா பூச்சிகளாக கருதப்பட்ட சிறு முதலீட்டாளர்கள், கேம்ஸ்டாப் விவகாரத்தில் முதல் முறையாக இந்த விளையாட்டை கொஞ்சம் மாற்றி விளையாடி காண்பித்திருக்கின்றனர். அதாவது, கேம்ஸ்டாப் பங்குகள் திட்டமிட்டு உயர்த்தி, பெரும் பங்கு நிறுவனங்களை கதறவிட்டிருக்கின்றனர்.

எப்படி இது சாத்தியமானது?

பங்கு வர்த்தகத்தில் ஷார்ட் செல்லிங் எனும் ஓர் உத்தி இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு எதிர்காலம் மோசம் என தெரிந்து, அதன் பங்குகள் விலை சரியும் என தெரிந்தால், அந்நிறுவன பங்குகளை ஷார்ட் செல்லிங் உத்திக்கு உள்ளாக்குவார்கள். அதாவது, அதன் பங்குகளை கடன் வாங்கி, மீண்டும் வாங்கி கொள்கிறேன் எனும் வாக்குறுதியுடன் சந்தையில் விற்பார்கள்.

இவ்வாறு விற்றபின், நிறுவன பங்குகள் விலை சரியும்போது, அவற்றை குறைந்த விலைக்கு வாங்கி, ஏற்கெனவே கடன் வாங்கிய நிறுவனத்திடம் விற்றுவிடுவார்கள். குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பதால், நல்ல லாபம் கிடைக்கும்.

எப்படி இருக்கிறது பாருங்கள். ஒரு நிறுவனத்திற்கு தொடர்பே இல்லாத ஒரு பங்கு நிறுவனம், அதன் நிலையை வைத்து விளையாடி லாபம் பார்த்து விடுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் பாதிப்பு, இந்த விளையாட்டுக்கு வெளியே இருக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கும் பாதிப்பு.

கேம்ஸ்டாப் நிறுவன பங்குகளையும் இதே முறையில் கையாள மெல்வின் கேபிடல் எனும் பங்கு நிறுவனம் தீர்மானித்தது. ஹெட்ஜ் பண்ட் எனும் ரகத்தைச் சேர்ந்த இந்நிறுவனம், கேம்ஸ்டாப் நிறுவனத்தின் எதிர்காலம் திண்டாட்டம் என்பதை தெரிந்துகொண்டு, அதன் பங்குகளை கடன் வாங்கி, சந்தையில் விற்று, பின்னர் திரும்பி வாங்கி லாபம் பார்க்க திட்டமிட்டது.

இதுவரை வழக்கமான திரைக்கதைதான் என்றாலும், இந்த இடத்தில்தான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. கேம்ஸ்டாப் பங்குகள், ஷார்ட் செல்லிங் செய்யப்படலாம் என்பதை தெரிந்துகொண்ட அமெரிக்க சிறுமுதலீட்டாளர்கள் களத்தில் இறங்கினர். எத்தனை நாள் தான் இத்தகைய விளையாட்டை வேடிக்கை பார்ப்பது என ஆவேசம் கொண்டவர்கள், இந்த முறை நாம் சற்று விளையாடிப் பார்ப்போம் என தீர்மானித்தனர்.

இதன்படி, சிறுமுதலீட்டாளர்கள் ஒன்று சேர்ந்து கேம்ஸ்டாப் பங்குகளை வாங்கி குவித்தனர். இணைய விவாத மேடை தளங்களில் ஒன்றான ரெட்டிட் தளத்தில் இதுபற்றி விவாதித்து செயலில் இறங்கினர். குறிப்பாக பங்குச்சந்தை விவாதத்திற்கான மேடையாக இருந்த, வால்ஸ் டிரீட் பெட் (Wall Street Bets ) எனும் குழு இதில் முதன்மையாக செயல்பட்டது.

பங்குகளை திட்டமிட்டு வாங்கும்போது என்னாகும்? அவற்றின் விலை உயரும் அல்லவா? கேம்ஸ்டாப் பங்குகளும் இப்படித்தான் உயர்ந்தது. இந்த பதில் விளையாட்டின் அருமை இப்போது புரிந்திருக்குமே.

கேம்ஸ்டாப் பங்குகள் சரியும் என்றுதான், பங்கு நிறுவனம் அதன் பங்குகளை கடன் வாங்கி விற்றது. ஆனால், சிறு முதலீட்டாளர்கள் இடையே புகுந்து அதன் விலையை உச்சத்திற்கு கொண்டு சென்றனர். விளைவு, பங்கு நிறுவனம் நஷ்டத்தில் பங்குகளை வாங்க வேண்டிய நிலை.

அது மட்டும் அல்ல, ஷார்ட் செல்லிங் செய்யப்பட்ட பங்குகள், எதிர்பாராமல் விலை ஏறும்போது, மேலும் நஷ்டத்தை தவிர்க்க அவற்றை அதிக விலைக்கு வாங்க முற்படும்போது, அதன் விலை இன்னும் ஏறும். இது மேலும் நஷ்டத்தை உண்டாக்கும். இந்த நிலைதான் அமெரிக்க பங்குச்சந்தையான வால்ஸ்டீரீட்டில் ஏற்பட்டது.

இதனிடையே, சிறுமுதலீட்டாளர்களின் இந்தக் கலகக் குரலுக்கு மேலும் பலரும் ஆதரவு தெரிவிக்க, கேம்ப்ஸ்டாப் பங்குகள் விலை ஏறுமுகமானது. இந்த தலைகீழ் போக்கால், பங்கு வர்த்தக நிறுவனங்கள் பல மேலும் நஷ்டத்திற்கு உள்ளாகின.

இந்த விளையாட்டு தொடர்ந்தால், பங்கு நிறுவனங்களால் தாங்க முடியாது என, கேம்ப்ஸ்டாப் பங்கு வர்த்தகத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் நிலை உண்டானது. பங்கு வர்த்தகத்திற்கான ராபின்ஹுட் செயலியும் இந்தக் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.

இந்த தலையீட்டால், பங்கு நிறுவனங்கள் சற்று ஆசுவாசம் அடைந்தாலும், தங்கள் லாப உத்தியை சிறுமுதலீட்டாளர்கள் தங்களுக்கே ஆடி காண்பித்தது கண்டு ஆடிப்போயிருக்கின்றனர்.

சிறுமுதலீட்டாளர்களோ, நீங்கள் உண்டாக்கிய 2008 உலக நிதி நெருக்கடி நினைவில் உள்ளதா, அதற்கான பாடம் இது கெத்து காட்டுகின்றனர். அதேநேரத்தில், பங்கு வர்த்தகத்தில் தலையீடு செய்யப்பட்டிருப்பதையும் வண்மையாக கண்டித்துள்ளனர். ட்விட்டரிலும், இணையத்திலும் இது தொடர்பான விவாதம் பொங்கி கொண்டிருக்கிறது.

பங்குச்சந்தை நிறுவனங்களின் உத்தி, ஆட்டம், அப்பாவி சிறு முதலீட்டாளர்களின் நிலை, கட்டுப்பாடு அமைப்புகளின் பாரபட்சம் என்றெல்லாம் விவாதம் அனல் பறக்கிறது.

சாமானியர்கள் இணையம் மூலம் ஒன்று திரண்டால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கான இன்னொரு உதாரணமாக கேம்ஸ்டாப் விவகாரம் அமைந்துள்ளது.

- சைபர்சிம்மன்