இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிலையைப் பார்த்தாமல் ரத்தக் கண்ணீர் வருகிறது.
இந்தியாவில் மொத்தம் 60,000-க்கு மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பதாகவும், உலகிலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் நிலவும் 3ஆவது பெரிய நாடு இந்தியாதான் என பல செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் படிக்கும்போது எத்தனை பெருமிதங்கள் நமக்குள் மின்னுகின்றன, நாடி நரம்புகள் புடைக்கின்றனவோ, அவை எதுவும் எதார்த்தத்தில் இல்லை. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிலையைப் பார்த்தாமல் ரத்தக் கண்ணீர் வருகிறது.
மூடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வியாபாரங்கள்
Udayy என்கிற இந்திய கல்வித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஆன்லைனில் வகுப்பெடுத்து கொஞ்சம் காசு பார்த்து வந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வியாபாரம் புதிய பாய்ச்சலைக் கண்டது. கொரோனாவுக்குப் பிறகு பள்ளிகள் வழக்கம்போல செயல்படத் தொடங்கிய நாள் முதல், உதய் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வறண்டு போகத் தொடங்கியது. ஏப்ரல் 2022-ல் உதய் நிறுவனத்தின் நிறுவனர்களான மஹக் கார்க், கரண் வர்ஷ்னே, செளம்யா யாதவ் தங்கள் கனவைக் கலைத்துக் கொண்டனர். ஒட்டுமொத்த ஊழியர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். மீதமிருந்து பணம் முதலீட்டாளர்களிடமே கொடுத்தனர்.
Yojak என்கிற கட்டுமான பொருட்கள் வியாபாரத்தில் செயல்பட்டு வந்த ஸ்ட்டார்ட் அப் நிறுவனம், 2022 ஏப்ரல் - மே மாத காலத்தில் தன் இந்திய வியாபாரத்தை மொத்தமாக மூடிவிட்டது. MPL தன் ஸ்ட்ரிமிங் சேவையை நிறுத்திக் கொண்டது. இப்படி இந்த ஆண்டில் காணாமல் போன, நிறுத்தப்பட்ட ஸ்டார்ட் அப் சோகக் கதைகள் அதிகம்.
சரமாரி ஃபயரிங்கை எதிர்கொள்ளும் ஸ்டார்ட் அப் ஊழியர்கள்
Ola, Yaari, M-Fine, Unacademy, Cars24, Meesho, Byjus, Furlenco, Trell, Lido... என பல ஸ்ட்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளன. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் இதுவரை 12,000க்கும் மேற்பட்டோர் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என மணி கன்ட்ரோல் வலைதளம் கூறுகிறது. 2022-ஆம் ஆண்டில் மட்டும் இந்த எண்ணிக்கை 60,000த்தைத் தொடலாம் என பிசினஸ் இன்சைடர் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தரை தட்டிய ஸ்டார்ட் அப் கம்பெனி பங்குகளின் விலை:
இந்தியாவில் கடந்த ஓராண்டு காலத்தில் பட்டியலிடப்பட்ட முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்குகள் படுமோசமான சரிவைக் கண்டுள்ளன. அப்பங்குகளின் வாழ்நாள் உச்ச விலையிலிருந்து எத்தனை சதவீதம் சரிந்துள்ளது என்கிற விவங்களைக் கீழே பார்க்கலாம்.
பேடிஎம் - உச்ச விலை 1,955 - 29 ஜூலை 2022 விலை 705 - சரிவு 64%
பாலிசி பசார் - உச்ச விலை 1,470 - 29 ஜூலை 2022 விலை 468 - சரிவு 68%
நைகா - உச்ச விலை 2,573 - 29 ஜூலை 2022 விலை 1,396 - சரிவு 45%
சொமேட்டோ - உச்ச விலை 169 - 29 ஜூலை 2022 விலை 46 - சரிவு 72%
ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம் மற்றும் ஆன்ட் ஃபைனான்ஷியல்ஸ் ஆகிய நிறுவனங்கள் பேடிஎம் மால் ஸ்டார்ட் அப் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின், அந்நிறுவனத்தின் மதிப்பீடு சுமார் 3 பில்லியன் டாலரிலிருந்து, சட்டென வெறும் 13 மில்லியனுக்கு சரிந்துவிட்டதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரை ஒன்று கூறுகிறது. கிட்டத்தட்ட 99 சதவீத சரிவு இது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் இந்த சரிவுகளுக்கு என்ன காரணம்..?
ஐடியாவை நம்பி முதலீடு
இன்றைய தேதியில் பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முழுமையாக தங்களைத் தயார் செய்து கொண்டு ஒரு நல்ல பொருள் அல்லது சேவையோடு (Product Market Fit) களத்தில் இறங்குவதில்லை. என்னிடம் இப்படி ஒரு யோசனை இருக்கிறது, அதை மேற்கொள்ளப் பணம் வேண்டும், முதலீடு செய்கிறீர்களா? அதற்கு பகரமாக இத்தனை சதவீதம் ஈக்விட்டி பங்குகளைக் கொடுக்கிறேன் என நிறுவனம் முழுமையாகச் செயல்படுவதற்கு முன்பே ஈக்விட்டி பங்குகளை விற்றுவிடுகிறார்கள்.
ஒரு சினிமாவை வெறும் கதையாக மட்டுமே கேட்டு, அது ஹிட் அடிக்குமா இல்லை காசைக் கரைக்குமா என எப்படி முடிவு செய்ய முடியும். அதே பஞ்சாயத்து தான் இங்கும். வெறும் யோசனையை மட்டும் நம்பி முதலீடு செய்யப்படும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்கள் யோசனையை சரியாக அமல்படுத்த முடியாமலோ, யோசனையை மோசமாக அமல்படுத்தியோ மூடுவிழா காண்கின்றன.
காசு கொடுத்து வாங்குவானா?
ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் வழங்கும் பொருள் அல்லது சேவையை வாடிக்கையாளர்கள் காசு கொடுத்து வாங்குவார்களா..? மாமா எர்த் - அழகுசாதனப் பொருட்களில் ஒரு பிரத்யேகத்தன்மையை பிரதிபலிக்கிறது ... மக்கள் காசு கொடுத்து வாங்குகிறார்கள். சிரோதா - நடுத்தர மக்களுக்கு மற்ற எந்த தரகு நிறுவனத்தை விடவும் குறைந்த தரகுக் கட்டணத்தை வசூலிக்கிறது... அங்கு டீமேட் கணக்கைத் தொடங்குகிறார்கள். ஃப்ரெஷ்வொர்க்ஸ் - மற்ற எந்த ஒரு வாடிக்கையாளர் சேவை மென்பொருளை விடவும் எளிதாகவும், விரைவாகவும் பல வேலைகளைச் செய்ய முடிகிறது, காசு கொடுத்து மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள்.
இதுவே, அமேசானைப் போலவே ஒரு இ-காமர்ஸ் தளத்தை நடத்தும் நிறுவனம், அமேசான் ஃப்ளிப்கார்டில் பொருளை ஆர்டர் செய்வதற்கு பதிலாக குட்டுபையா.காமில் பொருளை ஆர்டர் செய்தால் ஊதுபத்தி இலவசம், சமஸ்கிருதத்தில் சமையல் சேனல்... போன்ற காப்பிகேட் யோசனைகள் மற்றும் எதார்த்தத்தில் ஒத்துவராத வியாபாரத்தில் யார் பணம் கொடுத்து வாங்குவார்கள் அல்லது சப்ஸ்கிரைப் செய்வார்கள். அப்படி சில பொருந்தாத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பதை நீங்களே கூட கடந்து வந்திருக்கலாம்.
வெறுமனே ஒரு வலைதளம், செயலியை வைத்திருக்கும் நிறுவனம் ஸ்டார்ட் அப் நிறுவனமல்ல, எதார்த்தத்தில் ஏதோ ஒரு பிரச்சனைக்கு அசைக்க முடியாத தீர்வை கொடுப்பதே ஒரு நல்ல ஸ்டார்ட் அப் நிறுவனம். அதில் ஒரு எக்ஸ் ஃபேக்டர், மற்றவர்கள் எளிதில் செய்ய முடியாத ஒரு விஷயம் அதில் இருக்க வேண்டும்.
தவறான பொருள் அல்லது சேவை
Unacademy போன்ற பல கல்வித் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கொரோனா காலத்தில் தொட்டதெல்லாம் தங்கமாக மின்னியது. கொரோனாவுக்குப் பிறகு கடந்த 2022 ஏப்ரலில் தன் கே - 12 துறையையே மூடியது. அந்நிறுவனத்தின் கே - 12 சேவை சந்தையில் பொருந்தாச் சேவையாக (Product Misfit) தொக்கி நின்றதால், இன்று அச்சேவையையே மூடிவிட்டது.
தவறான பாதையில் பெரிய பணமுள்ள நிறுவனங்கள் பயணித்தால் அவர்கள் செய்த தவறை சரி செய்ய போதுமான பணம் கையில் இருக்கும். ஆனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தவறு செய்வதற்கான வாய்ப்பு இருக்காது. அப்படியே இருந்தாலும், அதை தொடக்க காலத்தில் செய்துவிட்டால் நிறுவனம் எழுந்திருக்கவே முடியாமல் போகலாம்.
கேஷ் பர்னிங்
கோடான கோடி ரூபாயை தள்ளுபடி, சலுகை என்கிற பெயரில் வாரி இரைத்தால் மட்டுமே வியாபாரம் செழித்து வளரும் என்றால், அதை ஒரு நிலையான வியாபாரம் என்றே கூற முடியாது.
உதாரணத்துக்கு மீஷோ நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 40 - 45 மில்லியன் டாலரை தள்ளுபடி, சலுகை போன்ற பெயர்களில் கேஷ் பர்ன் செய்து தன் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதை மாதத்துக்கு 25 மில்லியன் டாலராக குறைக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இதனால் அந்நிறுவனத்தின் வியாபாரம் சுமார் 25 - 30 சதவீதம் வரை குறையலாம் என எகனாமிக் டைம்ஸ் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கேஷ் பர்ன் கட்டத்தைத் தாண்டி பல நிறுவனங்கள் வளர முடியாமல் தவிப்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
சகட்டுமேனிக்கு செலவுகள்
அதிக ஊழியர்களை வேலைக்கு எடுப்பது, தலைகால் புரியாமல் இஷ்டத்துக்கு விரிவாக்கம் செய்வது, விளம்பரத்துக்கு ஷாரூ கான், சல்மான் கானை நடிக்க வைப்பது... எதிர்பார்த்த ஃபண்டிங் கிடைக்கவில்லை என்ற பின் வேலைக்கு எடுத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் வெகு எளிதாகப் பார்க்கலாம்.
பொருந்தாச் செலவு Vs வருமானம்
ஒரு வாடிக்கையாளரைப் பிடிக்க (Customer Acquisition Cost) 1,000 ரூபாய் செலவு செய்துவிட்டு, அந்த வாடிக்கையாளர் வெறும் 500 ரூபாய்க்கு பொருள் அல்லது சேவையை வாங்கினால் (Customer Spent Amount) கம்பெனிக்கு எப்படி கட்டுப்படி ஆகும். பேடிஎம் தொடங்கி பல இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதே பிரச்சனையை அல்லது இது போன்ற பிரச்சனையை எதிர்கொள்வதாக பல முன்னணிப் பொருளாதாரப் பத்திரிகைச் செய்திகளில் பார்க்க முடிகிறது.
அடுத்து என்ன செய்வது? தெளிவற்ற இலக்கு
எந்த பக்கம் செல்ல வேண்டும் என்பதில் தெளிவின்றி பல இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. உதாரணத்துக்கு சொமேட்டோ நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த ஏப்ரல் 2020 காலத்தில் மளிகை சாமான் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரி வியாபாரத்தில் குதித்தது சொமேட்டோ. ஜூன் 2020 காலத்திலேயே அதிலிருந்து வெளியேறியது. மீண்டும் ஜூலை 2021 காலத்தில் மளிகை சாமான்களை கையில் எடுத்து, செப்டம்பர் 2021 காலத்தில் வெளியேறியது. கடந்த மே 2020 காலத்தில் இந்தியாவின் சில மாநிலங்களில் மதுபானங்களை டெலிவரி செய்யும் வியாபாரத்தை கையில் எடுத்து ஏப்ரல் 2021 காலத்தில் மூடியது.
சமீபத்தில், சொமேட்டோ நிறுவன பங்குகளைக் கொடுத்து 'பிளிங்க் இட்' மளிகை சாமான் டெலிவரி செய்யும் குவிக் காமர்ஸ் நிறுவனத்தை முழுமையாக வாங்கியுள்ளது.
வங்கி அல்லாத நிதி நிறுவன உரிமத்துக்கு சொமேட்டோ விண்ணப்பித்திருக்கிறது. ஆனால் அது குறித்து சில முதலீட்டாளர்கள் மற்றும் பட்டையக் கணக்காளர்கள் கேள்வி எழுப்பிய போது சொமேட்டோ தரப்பிலிருந்து சரியான பதில் வரவில்லை. சொமேட்டோவுக்கும் நிதி நிறுவன உரிமத்துக்கும் என்ன தொடர்பு..? நல்ல யோசனை என்றால் கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்காமல் புறக்கணிப்பது ஏன்? இதுபோன்ற விஷயங்கள் சொமேட்டோ கப்பலின் கேப்டன் குழப்பத்தில் இருக்கிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சொமேட்டோ நிறுவனப் பங்குகள் சரிவது ஏன் என்பதை விரிவாக இங்கே படிக்கலாம்
அடிப்படை தவறு - லாப நோக்கம் எங்கே?
நீங்கள் என்னதான் பிரமாதமான வியாபாரம் செய்பவராக இருந்தாலும், எத்தனை கோடி மக்களின் தரவுகள் உங்கள் தளத்தில் இருந்தாலும், கடைசியில் என்ன லாபம் பார்த்தீர்கள் என்பது தான் கேள்வி. அக்கேள்வியை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சமீபத்தில்தான் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன.
இந்தியாவில் உறுதியாக 100 யுனிகார்ன் ($1 பில்லியனுக்கு மேல் மதிப்பீடு கொண்ட நிறுவனங்கள்) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் 23 ஸ்டார்ட் அப் யுனிகார்கள் மட்டுமே லாபம் ஈட்டுவதாக Tracxn Technologies என்கிற தரவு பகுப்பாய்வு நிறுவனம் கூறுகிறது. வெறுமனே பயனர்களின் தரவுகளை அதிகரிப்பதால் நிறுவனத்தை நடத்திவிட முடியாது, லாபம் தான் நிறுவனத்தை நிலைத்து நிற்கச் செய்யும் என ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும், நிறுவனர்களும் தாமதமாகப் புரிந்து கொண்டுள்ளனர். இந்த ஒரு காரணத்தால் தான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, வாரன் பஃபெட் போன்ற பங்குச் சந்தை பிதாமகர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவில்லை.
Value Creation Vs Valuation
பாரம்பரிய வியாபாரங்களில், அந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் வழி மதிப்பை உருவாக்கினர் (Value Creation). ஆனால் இன்று நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் பார்வையில் மதிப்பீட்டை (Valuation) அதிகரிக்கத் தேவையான எல்லா பணிகளையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பார்க்கின்றன. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதல் இலக்கு தங்கள் நிறுவனத்தின் Valuationஐ அதிகரிக்கச் செய்வது மட்டுமே.
பேடிஎம், சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு சரமாரியாக சரிந்த பிறகுதான், ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தங்கள் வியாபாரத்தில் வேல்யுவேஷனை விட லாபம் சம்பாதிப்பதும், வியாபார மதிப்பை உருவாக்குவதும் முக்கியம் என்கிற படிப்பினையைக் கற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.
முதலீட்டாளர்களின் அழுத்தம்
ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பங்குகளின் மதிப்பீட்டை அதிகரிக்க, ஒவ்வொரு ஃப்ண்டிங் சுற்றுக்குப் பிறகும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என அப்கிராட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் முதலீட்டாளர் மற்றும் யூ டிவி நிறுவனத்தின் தலைவர் ரோனி ஸ்க்ருவாலா சமீபத்தில் ஒரு பத்திகையிடம் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் மைய வியாபாரத்துக்கு தொடர்பில்லாத துறைகளில் கால்பதிக்க முதலீட்டாளர்களும் காரணமாக இருப்பதாக ரோனி ஸ்க்ருவாலா அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 9 - 18 மாதங்கள் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அத்தனை எளிதாக ஃபண்டிங் கிடைக்காது என பல சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த இக்கட்டான சூழலை எத்தனை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தாக்குபிடித்து நிற்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
-கெளதம்
இதையும் படிக்க: அதளபாதாளத்தில் Zomato பங்குகள்? உணவு டெலிவரித்துறையின் செல்லக்குட்டி செம அடிவாங்குவது ஏன்?