இந்திய இளைஞர்களின் பலரின் கனவுத் துறை என்றால் அது தகவல் தொழில் நுட்பத் துறைதான். அத்துறையில் 2019ல் எதிர்பார்க்க கூடிய மாற்றங்கள் என்ன?
ஆர்ட்டிஃபிஷியல் இன்ட்டலிஜன்ஸ் (Artificial Inteligence) ஆட்டோமேஷன் (Automation) ரோபோட்டிக்ஸ் (Robatics) ஆகியவை தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தாண்டு அதிகம் பேசப்பட்ட விஷயங்கள் ஆகும். இயந்திரங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தருவதுடன் பணிகளை தானியங்கி மயமாக்கும் தொழில்நுட்பங்கள் ஐடி துறையில் அதிகளவில் உட்புகுந்து விட்டன. புதிதாக புகும் இந்த தொழில்நுட்பங்கள் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என அச்ச உணர்வு இருந்தாலும் ஐடி துறையின் அடுத்த பாய்ச்சலுக்கு இது உதவும் என்ற நம்பிக்கையும் தருகிறார் மைக்ரோசாஃப்ட் இந்தியா தலைவர் ஆனந்த் மகேஸ்வரி.
ஐடி துறையில் புதிய வாய்ப்புகள் என்ற வெளிச்சக் கீற்றுகள் தெரிந்த போதும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், வெளிநாட்டவருக்கு வேலை வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தன. இதனால் இந்திய ஐடி துறையில் இருளில் தள்ளிவிடுமோ என்ற புதிய அச்சங்களும் எழுந்துள்ளது. எனினும் இந்த தடைகளை தாண்டி இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் சாதனை பயணம் தொடரும் என்பதே உள்நாட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.
(FILE Image)
இந்திய ஐ.டி துறையில் 2019ம் ஆண்டில் இரண்டரை லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என்கிறது டீம்லீஸ் என்ற சந்தை ஆய்வு நிறுவனம். ஆர்ட்டிஃபிஷியல் இன்ட்டலிஜன்ஸ், Big Data Analytics, Machine Learning போன்ற நுட்பங்களை அறிந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் அமோகமான ஆண்டாக 2019 அமையும் எனவும் டீம் லீஸ் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. எனினும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்புகள் என்பதும் கவனிக்க வேண்டிவை என்பது குறிப்பிடத்தக்கது.