வணிகம்

எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ தவிர்க்க முடியாது! - ஓலா நிறுவன CEO பவிஷ் அகர்வால்

எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ தவிர்க்க முடியாது! - ஓலா நிறுவன CEO பவிஷ் அகர்வால்

webteam

எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிப்பது என்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. இந்த நிலையில் ஒலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் தீ பிடிப்பது என்பது தவிர்க்க முடியாத நிகழ்வு என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல நாடுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிக்கிறது. ஐசிஇ வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது என பவிஷ் அகர்வால் ட்வீட் செய்திருக்கிறார்.

ஆனால் இந்த ட்வீட்க்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனம் தீ பிடிக்கும் என எளிதாக சொல்லி இருக்கிறார்கள். மக்களின் உயர்களுக்கு மதிப்பு இல்லையா என கேள்வி உருவாகி இருக்கிறது.

சமீபத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் வாகனம் மும்பை அருகே தீ பிடித்தது. இது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதுவரை இரு சக்கர வாகனங்கள் மட்டுமே தீ பிடித்த நிலையில் முதல் முறையாக கார் தீ பிடித்திருக்கிறது.

எங்கள் வாகனத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளன. இருந்தாலும் ஏன் தீ பிடித்தது என்பது குறித்து விசாரிக்க இருக்கிறோம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முதல் இடத்தில் டாடா மோட்டார்ஸ் இருக்கிறது. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் வாகனம் தீ பிடித்திருப்பது சந்தையில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் 30000 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறோம் 10 கோடி கிலோமீட்டருக்கு மேல் எங்கள் வாகனம் பயணம் செய்திருக்கிறது. ஆனால் இந்த விபத்துதான் முதல் விபத்து என டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனம் சில மாதங்களுக்கு முன்பு தீ பிடித்தது. இதனால் ஓலா நிறுவனம் 1441 வாகனங்களை திரும்ப பெற்றது. ஓலா மட்டுமல்லாமல் மேலும் சில நிறுவனங்களும் வாகனங்களை திரும்பபெற்றன.