வணிகம்

வோடபோன் - ஐடியாவின் நஷ்டம் ரூ.7,312 கோடி; மொத்த கடன் ரூ.1.92 லட்சம் கோடியாக அதிகரிப்பு

வோடபோன் - ஐடியாவின் நஷ்டம் ரூ.7,312 கோடி; மொத்த கடன் ரூ.1.92 லட்சம் கோடியாக அதிகரிப்பு

JustinDurai
நடப்பு நிதி ஆண்டில் வோடபோன் ஐடியாவின் நஷ்டம் ரூ.7312 கோடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 12வது காலாண்டாக இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
கடந்த காலாண்டில் ரூ.6,985 கோடியாக இருந்த வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நஷ்டம் தற்போது ரூ.7312 கோடியாக அதிகரித்திருக்கிறது. வட்டி அதிகரித்திருப்பது மற்றும் சப்ஸ்கிரைபர்கள் குறைந்திருப்பதால் (வருமானமும் 14 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது) நஷ்டம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.1.92 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 5.95 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட தற்போது 65 சதவீதம் அளவுக்கு கடன் அதிகரித்திருக்கிறது.
நிறுவனத்தை தொடரந்து நடத்துவதற்கு தேவையான் உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேவையான நிதியை திரட்ட முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறோம் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்தர் தாகர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் வருமானமும் (ஏஆர்பியூ) குறைந்திருக்கிறது. கடந்த காலாண்டில் ஒரு வாடிக்கையாளர் மூலம் ரூ.107 வருமானம் கிடைத்த நிலையில் தற்போது ரூ.104 மட்டுமே கிடைக்கிறது.
போட்டி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெலில் ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம். பார்தி ஏர்டெல் ஒரு வாடிக்கையாளர் மூலம் ரூ.146 வருமானம் ஈட்டுகிறது. ஜியோ ஒரு வாடிக்கையாளர் மூலம் ரூ.138 வருமானம் ஈட்டுகிறது.