வணிகம்

பி.பீ.ஓ துறையில் இந்தியாவுடன் போட்டிபோடுகிறதா வியட்நாம்?

பி.பீ.ஓ துறையில் இந்தியாவுடன் போட்டிபோடுகிறதா வியட்நாம்?

webteam

பி.பீ.ஓ என்றால் என்ன?

வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியமே அதிகமாக இருக்கும். அத்தகைய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பணத்தை சேமிப்பதற்காக தொழிளாலர் உதியம் குறைவாக இருக்கும் பிற நாடுகளுக்கு தங்கள் வேலைகளை அனுப்பி வைக்கின்றன. அவற்றில் ஆவணங்கள், தரவுகள், தொலைபேசி அழைப்பு மையங்கள் தொடர்பான பணிகள் பிரதானமாக இடம் பெற்றுள்ளன. இந்தப் பணிகள் ‘வணிக செயல்முறைக்கான சந்தைப்படுத்தல்’(Business Process Outsourcing - BPO) என்று அழைக்கப்படுகிறது.

பி.பீ.ஓ துறை வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்று வியட்நாம். தற்போது இந்தியா இந்தத் துறையில் மிகப்பெரிய நாடு என்றால், சீனா, பிலிப்பைன்ஸ் ஆகியவை அடுத்தெடுத்த இடங்களில் உள்ளன. ஆண்டொன்றுக்கு 300 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலக வர்த்தகத்தை கொண்டுள்ளது பி.பீ.ஓ துறை. குறைந்த செலவு கொண்ட நாடுகளுக்கு இத்தகைய வேலைகளை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பி.பீ.ஓ துறை வேலைகளில் சுமார் 65 % இந்தியாவிற்குதான் கிடைக்கிறது. இந்தியாவிற்கு ஆண்டுதோறும் சுமார் 30 பில்லியன் டாலர் பி.பீ.ஓ துறை வேலைகள் கிடைக்கின்றன. சீனாவுக்கு 24 பில்லியன் டாலர்கள் என்றால், தற்போது வியட்னாமில் இந்தத் தொழிலானது இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது.

இந்தியாவில் இருந்து மிகவும் தொலைவில் தற்போது வியட்நாம் இருந்த போதிலும், இரண்டு காரணங்களுக்காக வியட்நாமை நிபுணர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். காரணம்; வியட்நாமின் பி.பீ.ஓ துறை, இந்தியாவில் இருந்து வேறுபட்டது. இந்தியாவில் தொலைபேசி அழைப்பு தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகம். வியட்நாமில் ஆவணங்கள் தொடர்பான வேலைகள் அதிகம். வியட்நாமில் தொழில் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 20 % என்பது முதல் காரணம் என்றால், சமீப காலமாக பிரத்யேகமாக ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து தனித்துவமான விதத்தில் இந்தத் துறையை சந்தைப்படுத்துகிறது வியட்நாம் என்பது இரண்டாவது காரணம்.

பி.பீ.ஓ தொழிற்துறையில் உலகின் விருப்பமான நாடு இந்தியா என்பதற்கு காரணங்கள் அனைத்தும் வியட்நாமுக்கும் பொருந்துகின்றன. அங்கும் அரசியல் நிலைத்தன்மை உள்ளது, தனியார் நிறுவனங்கள் தொழில்துறையில் முன்னேற எல்லா வகையிலும் வியட்நாம் அரசு உதவுகிறது. இத்தனைக்கும் இந்தியாவை விட குறைவாகப் பணம் வழங்கினால் போதும். அது தவிர இந்தியாவை விட சிறந்த கட்டமைப்பு வசதிகள் வியட்நாமில் உள்ளது.

இந்தத்துறையில் வியட்நாம் வேகமாக வளர்ந்து வருவது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா ? 

இந்தக் கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. இந்திய பி.பீ.ஓக்கள் வியட்நாமை அச்சத்தோடுதான் பார்க்கின்றன. ஆனால், இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் போட்டி இல்லை என்றால் இரு நாடுகளும் இணைந்தும் பணியாற்றலாம் என்ற கனவு பலிக்குமா ? காலம்தான் பதில் கூற வேண்டும்.