வரும் ஜனவரி முதல் கார்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது டொயோட்டா நிறுவனம். இதனை இந்தியாவில் டொயோட்டா கார்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வரும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் கிளான்ஸா, அர்பன் Cruiser, இன்னோவா கிரிஸ்டா, ஃபார்ச்சூனர், Camry மற்றும் Vellfire மாதிரியான மாடல்களின் விலை உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. இந்த விலையேற்றம் மாடலுக்கு, மாடல் வித்தியாசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் உற்பத்திக்கான செலவுகள் கூடி இருப்பதால் இந்த விலை ஏற்றத்தை செய்ய வேண்டி உள்ளதாக டொயோட்டா விளக்கம் கொடுத்துள்ளது. குறிப்பாக மூலப்பொருட்களின் விலை உயர்வினால் இதனை தவிர்க்க முடியவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மாருதி சுஸுகி, டாடா, ஹோண்டா கார்ஸ் உட்பட சில நிறுவனங்கள் வரும் ஜனவரி முதல் விலை உயர்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் நிலவி வரும் செமி-கண்டக்டர் சிப் தட்டுப்பாடு காரணமாக இந்த விலையேற்றம் இருக்கலாம் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.