இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு இது சாதகமான அம்சம் என்பதால் அவர்கள் இந்த சரிவை உற்சாகத்துடன் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் 80 சதவிகிதம் திருப்பூரில் நடக்கிறது. இந்த ஆடைகளுக்கான விலை அன்னிய பணத்தின் மதிப்பின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் வர்த்தகம் சூடு பிடித்துள்ளது.
டாலர் மதிப்பில் ஆடை ஒன்றுக்கு 5 சதவீதமும், யூரோவில் பெறும் ஆர்டர்களுக்கு 8 சதவீதமும், பவுண்ட்டில் நிர்ணயிக்கும்போது 10 சதவீதம் வரை கூடுதல் விலை கிடைக்கும் என ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 26 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த பின்னலாடை ஏற்றுமதி, பல்வேறு இடர்பாடுகளால் இந்தாண்டு 24 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்தது. இந்நிலையில் டாலரின் மதிப்பு தற்போதைய நிலையில் தொடர்ந்தால் திருப்பூர் பின்னலாடைத் துறையினரின் இலக்கான 2020 இல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடைய முடியும் என்கிறார்கள் ஏற்றுமதியாளர்கள்.
அடுத்த ஓராண்டுக்கு அன்னிய பணம் மதிப்பின் உயர்வு நிலை தொடரும் என பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளதாகவும், இதனால் ஏற்றுமதி துறை வளர்ச்சி அடையும் எனவும் தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.