வணிகம்

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு

webteam

தென் மாவட்டங்களில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பல நாடுகள் வர விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தொழில் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் சம்பத், வாகன, ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் முதல் 10 இடத்தில் உள்ளதாகவும், ஆண்டுக்கு 16 லட்சம் கார்கள் உறபத்தி செய்வதாகவும் குறிப்பிட்டார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ள முதலீட்டாளர்களுக்கு  பல சலுகைகள் ஜி.எஸ்.டி. மூலம் அளிக்க  தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

11 துறைகள் ஒன்றிணைப்பு மூலம் 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கும் வகையில் ஒற்றை சாளர முறை, சட்டம் ஒழுங்கு, அபரிமிதமான மின்சாரம், மனிதவளம் என தொழில் துவங்குவதற்கான சாதகமான சூழல் தமிழகத்தில் உள்ளதாக அவர் கூறினார். பின் எம்.எஸ்.எம்.இ. துறையில் 3 மாதத்தில் 200 பேரில் 137 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய பொருளாதார ஆய்வு நிறுவனம் போன்ற பல ஆய்வுகளின் படி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். உலக அளவில் தொலைப்பேசி உபகரணங்கள் உற்பத்தியில் 70% பங்கு வகிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு 52 ஏக்கர் கொடுத்துள்ளதாவும்,  10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தென் மாவட்டங்களில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் தொழில்களை ஈர்க்க நடவடிக்கையாக, அங்கு தொழில் துவங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.