தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா ஒரு முகம் தெரியாத யோகியின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டதாக எழுந்த புகாரில் அடுத்தடுத்து வெளியாகி வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
தேசிய பங்குச் சந்தையில் பல ஊழல்கள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி நடத்திய விசாரணையில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை பற்றிய பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. தேசிய பங்குச் சந்தையை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை அடையாளம் தெரியாத ஒரு மர்ம யோகி உடன் சித்ரா ராமகிருஷ்ணா தொடர்ந்து ஆலோசித்து வந்ததும், மின்னஞ்சல் மூலம் அந்த மர்ம நபர் அளித்த அனைத்து ஆலோசனைகளையும் நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டதும் தெரியவந்திருக்கிறது. அந்த மர்ம நபர் யார் என்பதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அந்த யோகியின் ஆலோசனைப்படி வருடத்துக்கு 15 லட்ச ரூபாய் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த ஒருவரை 1.68 கோடி ரூபாய் சம்பளத்துக்கு நியமித்து, தொடர் ஊதிய உயர்வுகள் மூலம் அவருக்கு வருடத்துக்கு 4 கோடி ரூபாய் அளித்ததை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது விந்தைதானே. அதுவும் ஆனந்த் சுப்பிரமணியன் என்கிற அந்த நபர் வாரத்துக்கு நான்கு நாட்கள் பணி செய்தால் போதும் என தனது சொந்த ராஜாங்கம் போல உத்தரவிட்டுள்ளார் சித்ரா ராமகிருஷ்ணா. இதை தேசிய பங்குச்சந்தையின் இயக்குனர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
மத்திய நிதி அமைச்சகமும் அந்த சமயத்தில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பல புகார்களுக்கு பிறகு பிரச்சனை பெரிதாக வெடித்த பின்னரும், சித்ரா ராமகிருஷ்ணா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர் ராஜினாமா செய்து சத்தமின்றி வெளியேற அனுமதிக்கப்பட்டிருக்கிறார். யாருடைய உத்தரவுப்படி இப்படி நடந்தது என்பதும் மர்மமாகவே இருக்கிறது. சித்ரா ராமகிருஷ்ணா என்கிற நபருக்கு வருடத்துக்கு 10 கோடி ரூபாய் ஊதியம் மற்றும் வானளாவிய அதிகாரத்தை அளித்தது யார்? என்ற கேள்விக்கு பதிலே இல்லாதது வினோத்தின் உச்சம். ஆதாரம் இருக்கக்கூடாது என்பதற்காக சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியம் பயன்படுத்திய கணினிகள் குப்பையில் தூக்கி எறியபட்டதாக கணக்கில் காட்டப்பட்டு அழிக்கபட்டுள்ளது.
பட்டய கணக்காளர்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையிலும் ஆனந்த் சுப்ரமணியன்தான் இந்த முறைகேட்டுக்கு காரணம் என்றும் மர்மயோகியாக செயல்பட்டது அவர்தான் என்றும் சித்ரா ராமகிருஷ்ணா மீது பழி வராமல் திசைதிருப்பப் பட்டுள்ளது. செபி நடத்திய விசாரணையின் இறுதியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாயும், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு 2 கோடி ரூபாயும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்ட 2.8 கோடி ரூபாய் போனஸ் தொகையை நிலுவையில் வைக்கும்படியும், அவருக்கு மிச்சமிருந்த விடுமுறைக்காக அளிக்கப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் திரும்பப்பெறும்படியும் செபி உத்தரவிட்டுள்ளது. இருந்தும் இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் தொடர்ந்து புரியாத புதிராகவே இருந்து வருகின்றன.