வணிகம்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய விமான எரிபொருளின் விலை: உயருமா விமான பயணக்கட்டணம்?

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய விமான எரிபொருளின் விலை: உயருமா விமான பயணக்கட்டணம்?

EllusamyKarthik

பைக்குக்கு பெட்ரோல். காருக்கு டீசல் அல்லது பெட்ரோல். லாரி மாதிரியான கனரக வாகனங்களுக்கு டீசல் என ஒவ்வொரு வாகனத்திற்குமான எரிபொருள் மாறுபடும். அது போல விமான இயக்கத்திற்கு ஜெட் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை என மாதத்தில் 1 மற்றும் 16-ஆம் தேதி வாக்கில் சர்வதேச நிலையை பொறுத்து ஜெட் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படும். 

அந்த வகையில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஜெட் எரிபொருள் விலை 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைநகர் டெல்லியில் தற்போது 1 கிலோ லிட்டர் ஜெட் எரிபொருளின் விலை ரூ.1,10,666.29 என உயர்ந்துள்ளதாம். கடந்த முறையை ஒப்பிட்டு பார்த்தால் சுமார் 17,135.63 ரூபாய் அதிகரித்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகின்ற காரணத்தால் சர்வதேச அளவில் எண்ணெய் விலை கடந்த வாரம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஜெட் விமான எரிபொருளின் விலை 1,14,133.73 என தெரிகிறது. 

விமான இயக்கத்தின் மூலம் கிடைக்கும் தொகையில் 40 சதவிகிதம் எரிபொருளுக்காக விமான நிறுவனங்கள் செலவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அதற்கான எரிபொருளின் விலை உயர்வு விமான பயண கட்டணத்தை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.