வணிகம்

தமிழகத்தில் உயர்கிறது மின் கட்டணம்! எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்? முழு விபரம் இதோ!

தமிழகத்தில் உயர்கிறது மின் கட்டணம்! எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்? முழு விபரம் இதோ!

ச. முத்துகிருஷ்ணன்

தமிழகத்தில் மின் துறையில் கடன் உயர்ந்துள்ள காரணத்தாலும், மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு வலியுறுத்தியதாலும் மின்கட்டணங்களை உயர்த்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 10 வருடங்களில் மின்சாரத்துறையில் 12,647 கோடி ரூபாயாக கடன் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணங்களை மாற்றம் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசும் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக 28 முறை கடிதங்கள் வந்துள்ளன. மேலும் மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரியை தனியாரிடம் வாங்க வேண்டியது உள்ளது. இதனால் மின்கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. 42 % வீடு மற்றும் குடிசை மொத்த கட்டணத்தில் கட்டண மாற்றமில்லை 100 யூனிட் இலவச மின்சார திட்டத்திலும் மாற்றம் இல்லை. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும்.

200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும். 201-300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.155 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்

601 யூனிட் முதல் 700 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.275 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 701 யூனிட் முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.395 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 801 யூனிட் முதல் 900 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.565 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு கொண்டு வரும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டமும் அறிமுகமாகிறது. மின் கட்டணம் குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துகளை கேட்டு அதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறினார்.