காருக்குள் குழந்தைகள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டெஸ்லா முடிவு செய்துள்ளது
காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு என்ற செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம். முழுவதும் கார்
அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் கதவும் ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகிக் கொள்வதால் உள்ளே சிக்கிய குழந்தைகள் மூச்சுத்திணறல்
ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். அவர்கள் அலறினாலும் சத்தம் வெளியே கேட்பதில்லை.
இந்த தொடர் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க டெஸ்லா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. காற்று புகாத வெப்பநிலை அதிகமாக உள்ள ஒரு காருக்குள் குழந்தைகள் சிக்கி இருந்தால் சென்சார் மூலம் தெரியப்படுத்தும் வசதியை உருவாக்கி அதற்காக FCC (Federal Communications Commission) அனுமதிக்காக காத்திருக்கிறது.
உள்ளே குழந்தைகள் சிக்கி இருந்தால் அதனை தெரிவிக்கும் வகையில் இந்த சென்சார் இருக்குமென்றும், அதனால் இது பொருட்களையும்
குழந்தைகளையும் வித்தியாசம் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருக்கைகளில் சென்சார்
பொருத்தப்படுவதால் இது உருவம், எடை உள்ளிட்ட சில விதிகளின் அடிப்படையில் குழந்தைகளை அடையாளம் காணும் வகையில்
உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவின் கோரிக்கையை ஏற்றுள்ள FCC மக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளது. பொதுமக்கள் ஆதரவு அளித்தால் விரைவில் இந்த வசதி டெஸ்லா கார்களில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.