வணிகம்

PT Web Explainer: உயரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம்... என்ன செய்யலாம்?

PT Web Explainer: உயரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம்... என்ன செய்யலாம்?

webteam

ஏப்ரல் 1-ம் தேதி முதல் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் சுமார் 15 சதவீதம் வரை உயர்த்த சில காப்பீட்டு நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தியா ஃபர்ஸ்ட், டாடா ஏஐஜி, ஏகன் லைஃப் உள்ளிட்ட சில நிறுவனங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்த திட்டமிட்டிருக்கின்றன. அதேநேரத்தில், எல்.ஐ.சி. மற்றும் ஹெச்டிஎப்சி லைஃப் ஆகிய நிறுவனங்கள் ப்ரீமியத்தை உயர்த்தபோவதில்லை என அறிவித்திருக்கின்றன. ப்ரீமியம் உயர்வுக்கு காரணத்தை தெரிந்துகொள்வதற்கு முன்பு டேர்ம் இன்ஷூரன்ஸ் என்றால் என்பது குறித்து பார்ப்போம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்?

பல வகையான காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் டேர்ம் இன்ஷூரன்ஸ். இதில் முக்கியமான விஷயம் முதிர்வு என எதுவும் கிடையாது. பாலிசிதாரின் உயிருக்கு எதாவது அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் பாலிசி தொகை கிடைக்கும். ஒருவேளை ஒருவரின் பாலிசி காலம் முழுவதும் அவருக்கு எதுவும் நடக்கவில்லை என்றால், எதுவும் கிடைக்காது. இதுதான் டேர்ம் இன்ஷூரன்ஸ். இதன் காரணமாகவே பலரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதில்லை. ஆனால், மோட்டார்ஸ் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது முதிர்வு தொகை என்ன கிடைக்கிறது என நாம் பார்ப்பதில்லை.

முதிர்வு தொகை கிடைக்கும் பாலிசிகளில் கிடைக்கும் பாலிசி தொகை என்பது குறைவாகவே இருக்கும். உதாரணத்துக்கு சில லட்சங்களில் இருக்கும். ஆனால், ஒருவர் மறைந்த பிறகு அந்தக் குடும்பத்துக்கு எப்படி சில லட்சங்கள் போதுமானதாக இருக்கும்? அதனால், அதிக தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும். நிதி ஆலோசகர்களின் கருத்துபடி ஒருவரின் ஆண்டு சம்பளத்தில் குறைந்தபட்சம் 10 மடங்குக்காவது பாலிசி தொகை இருக்க வேண்டும். அப்போதுதான் பாலிசிதாரரின் மறைவுக்கு பிறகு கிடைக்கும் தொகையை வைத்து அந்த குடும்பம் பாதுகாப்பான வாழ்க்கை வாழ முடியும். அதனால் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம்.

அதிக க்ளைம்கள்!

ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனங்கள் சராசரி எவ்வளவு மரணங்கள் நடக்கும் என்பதை தோராயமாக கணக்கீட்டு வைத்திருக்கும். இதற்கு ஏற்பவே ப்ரீமியம் தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால், கோவிட் காலத்தில் எதிர்பார்த்தை விட அதிக மரணங்களும், அதற்கு ஏற்ப க்ளைமும் கொடுத்திருக்கின்றன. நாம் எப்படி காப்பீடு செய்கிறோமோ அதேபோல காப்பீட்டு நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களிடம் ரீஇன்ஷூரன்ஸ் (Reinsurance) செய்வார்கள். தற்போது க்ளைம் அதிகரித்திருப்பதால் ரீஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ப்ரீமியத்தை உயர்த்த முடிவெடுத்திருகிறார்கள். அதனால் காப்பீட்டு நிறுவனங்களும் அதற்கு ஏற்ப, பிரீமியத்தை உயர்த்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதற்காக காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் பல நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கின்றன. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய ப்ரீமிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன.

என்ன செய்யலாம்?

டேர்ம் இன்ஷூரன்ஸ் மிக அவசியம். அதற்காக இன்னும் சில நாட்களில் ப்ரீமியம் உயரபோகிறது என்பதற்காக அவசரகதியில் புதிய பாலிசியை எடுகக் வேண்டாம். ஆண்டு வருமானம் எவ்வளவு, எவ்வளவு கடன்கள் இருக்கிறது. எவ்வளவு காப்பீட்டு தொகை தேவை, நமக்கு ஏற்ற அல்லது குறைந்த பிரீமியத்தில் எந்த நிறுவனம் பாலிசியை வழங்குகிறது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை ஆராய்ந்தபிறகே புதிய பாலிசியை வாங்க வேண்டும். ஒருவேளை ஏற்கெனவே திட்டமிட்டு, தற்போது உடனடியாக வாங்கலாம்.

அதேபோல பாலிசி பிரீமியம் உயர்ந்துவிட்டது, அதனால், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்னும் அலட்சியமும் வேண்டாம். ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதுபோலதான் டேர்ம் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருப்பதும்.

இளைய வயதில்!

வேலைக்கு சேர்ந்த உடன் செய்ய வேண்டிய கடமைகளில் முக்கியமானது டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது. 25 வயது நபர் ஒரு கோடி ரூபாய்க்கு (35 ஆண்டு காலம்) பாலிசி எடுத்தால் சுமார் 9,000 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். ஒருவேளை 35 வயது நபர் எடுத்தால் ஒரு கோடி ரூபாய்க்கு 17,000 ரூபாயாக இருக்கும். அதனால், டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை மிக குறைந்த வயதில் எடுப்பது நல்லது.

'எனக்கு எதுவும் ஆகவில்லை என்றால்?' என்னும் கேள்வி இயல்பானதே. ஒரு கோடி ரூபாய்க்கு இதர மணிபேக் அல்லது எண்டோமெண்ட் பாலிசிகளில் பிரீமியம் தொகை கேட்டால் டேர்ம் இன்ஷூரன்ஸ் அவசியம் புரியும். இதர பாலிசில்களில் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்க வேண்டும் என்றால் ப்ரீமியம் சில லட்சங்களில் இருக்கும்.

இளம் வயதிலே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது நிச்சமற்ற சூழலை தவிர்க்க முடியும். தவிர செலுத்தப்படும் பிரீமியத்துக்கு வரிச்சலுகையும் பெற்றுக்கொள்ள முடியும்.

காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் தொகையை உயர்த்துகின்றன என்பதற்காக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் இருக்க கூடாது. சில விஷயங்கள் நமக்காக செய்வோம். சிலவற்றை குடும்பத்துக்காக செய்வோம். டேர்ம் இன்ஷூரன்ஸின் தேவையை பாலிசிதாரர் பயன்படுத்தவே முடியாது. டேர்ம் இன்ஷூரன்ஸ் குடும்பத்துக்கானது.

- வாசு கார்த்தி