டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) கடந்த 2004-ம் ஆண்டு நடந்தது. அப்போது முதல் இதுவரை சுமார் 3000 சதவீதம் அளவுக்கு இந்த பங்கு உயர்ந்திருப்பதாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு (ஏஜிஎம்) கூட்டத்தில் இதனை தெரிவித்திருக்கிறார்.
ஐபிஓ சமயத்தில் சுமார் 850 ரூபாய் முதலீடு செய்து ஒரு பங்கினை பெற்றிருந்தால் தற்போது அந்தப் பங்கின் மதிப்பு தற்போது ரூ.28000 ஆக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு ஆரம்ப கால தலைவரான எப்.சி. கோலியே முக்கிய காரணம் என்றும் சந்திரசேகரன் நினைவுகூர்ந்தார். நிறுவனத்துக்கென பிரத்யேக கலாசாரத்தை உருவாக்கியதில் எப்.சி. கோலீன் பங்கு முக்கியமானது. எப்.சி. கோலி தலைமையில் டிசிஎஸ் நிறுவனம் 27 ஆண்டுகள் செயல்பட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 8.6 சதவீத வளர்ச்சியை டிசிஎஸ் பெற்றதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்தார்.
மேலும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பணியாளர்கள் முக்கியம். தற்போது 4.88 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். வரும் காலத்திலும் பணியாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் தெரிவித்தார்.
கோவிட் சார்ந்த மீட்பு பணிகளுக்கு ரூ.273 கோடியை செலவு செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.