வணிகம்

10 எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டர்ஸ் திட்டம்

நிவேதா ஜெகராஜா

இதுவரை மின் வாகனங்கள் குறித்து பெரிதாக எந்த திட்டத்தையும் அறிவிக்காத டாடா மோட்டார்ஸ் நிறுவனம், முதன்முறையாக எலெக்ட்ரிக் வாகங்களுக்கான திட்டத்தை அறிவித்திருக்கிறது.

அத்திட்டத்தின்படி, அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். நிறுவனத்தின் 76-வது ஆண்டு அறிக்கையில் இதனை அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், “இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனச் சந்தை சீராக உயர்ந்து வருகிறது. தற்போது மொத்த வாகன விற்பனையில் 2 சதவீதம் அளவுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு உள்ளது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். அதனால் அதற்கு ஏற்ப திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும். அதனால் 2025-ம் ஆண்டுக்குள் 10 புதிய எலெட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

அதேபோல, சார்ஜ் ஏற்றும் மையங்களை நாடு முழுவதும் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம். மேலும் பேட்டரி உற்பத்தியில் டாடாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நிறுவனங்களையும் நாங்கள் பரிசீலனை செய்வதுவருகிறோம்.

இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பேட்டரி தயாரிப்பில் கவனம் செலுத்த இருக்கிறோம். அதேபோல ஆட்டோமொபைல் சாப்ட்வேர் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவை அமைக்கவும் திட்டமிட்டுவருகிறோம்” என தெரிவித்திருக்கிறார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வசம் தற்போது இரு எலெட்ரிக் வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களின் விற்பனையும் சீராக உயரந்து வருகிறது. நெக்ஸான் இவி மற்றும் டிகார் இவி ஆகிய இரு மாடல் கார்கள் உள்ளன. அட்ராஸ் மாடலில் எலெக்ட்ரிக் கார் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் பிரிவில் நெக்ஸான் இவி கடந்த ஆண்டு ஜனவரில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறது. எலெக்ட்ரிக் கார் பிரிவில் `பெஸ்ட் செல்லிங்’ கார் இதுவாகும்.