வணிகம்

பிக்பாஸ்கட் நிறுவனத்தை வாங்குகிறது டாடா குழுமம்?

பிக்பாஸ்கட் நிறுவனத்தை வாங்குகிறது டாடா குழுமம்?

நிவேதா ஜெகராஜா

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா டிஜிட்டல் நிறுவனம், ஆன்லைன் மளிகை பொருள் விற்பனை நிறுவனமாக பிக்பாஸ்கட் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டிருந்தது. அந்த திட்டமிடுதலின் முடிவாக, பிக்பாஸ்கட் நிறுவனத்தின் 64 சதவீத பங்குகளை வாங்குவதற்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த இணைப்பின் மதிப்பு 120 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் டாடா குழுமமோ, பிக்பாஸ்கட் நிறுவனமோ இதுகுறித்து அதிகாரபூர்வமாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆகவே இப்போதைக்கு பிக்பாஸ்கட் நிறுவனம் தனி நிறுவனமாக செயல்படும் என்றே தெரிகிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியாக ஹரி மேனன் செயல்பட்டுவருகிறார். இணைப்புக்கு பிறகும் இவரே தொடருவார் என தெரிகிறது.

பிக்பாஸ்கட் நிறுவனத்தில் ஏற்கெனவே பல முதலீட்டாளர்கள் உள்ளனர். அவர்களில் அலிபாபா குழுமம் மற்றும் அப்ராஜ் குழுமம் வெளியேற இருப்பதாகவும், அந்த பங்குகளை டாடா வாங்க இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல பிக்பாஸ்கட் நிறுவனம் 2023-ம் நிதி ஆண்டில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டிருக்கிறது.

பிக்பாஸ்கட் போன்ற தொடக்க நிலையிலுள்ள ஒரு நிறுவனத்தை, டாடா குழுமம் போன்ற பாரம்பரிய பெரிய குழுமம் வாங்குவது, வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. இனி இந்தியாவின் ஸ்டார்ட் அப்களில் (தொடக்க நிலை நிறுவனங்களில்), பெரிய குழுமம் முதலீடு செய்ய தொடங்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

டாடா குழுமம், ஏற்கெனவே சூப்பர் ஆப் என்னும் புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது. அதில், டாடா குழுமத்தில் நுகர்வோருக்கு தேவையான பல விஷயங்கள் இருக்கும். உதாரணத்துக்கு, வாட்ச், காப்பீடு, விமான டிக்கெட், ஓட்டல், ஏசி, கார் என பல பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளன. இதில் மளிகை சேவையும் இணைத்து சூப்பர் ஆப் செயலியினை கொண்டுவருவதற்கான முயற்சிதான், இந்த பிக்பாஸ்கட் இணைப்பு என சொல்லப்படுகிறது.