சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள மாநிலங்களுக்கான ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
ஏற்றுமதி செய்யும் மாநிலங்களின் ஏற்றுமதி பொருட்கள், சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம், உட்கட்டமைப்புகள், வணிகச்சூழல், வர்த்தக ஆதரவு,ஏற்றுமதி பலவகைப்படுத்துதல், மற்றும் வளர்ச்சி நோக்குநிலை உள்ளிட்டவற்றை வைத்து மாநிலங்களுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை 2020 நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. அந்த தரவரிசைப் பட்டியலில்தான் குஜராத், மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
’ஆட்டோ மொபைல் துறையில் தமிழகம் 45 சதவீத பங்களிப்பையும், ஜவுளி ஏற்றுமதியில் 19 சதவீதமும், மின்னணு ஏற்றுமதியில் 19 சதவீத பங்களிப்பையும் செய்துள்ளது’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திறமையான நிர்வாகம், திறமையான தொழிலாளர்கள், அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள், சிறந்த வளங்கள், 5 பெரிய மற்றும் 22 சிறிய துறைமுகங்கள், இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் உள்ளூர் விமான நிலையங்கள் ஆகியவற்றின் காரணமாகத்தான் தமிழகம் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்று கூறப்படுகிறது