லாக்டவுன் தீவிரமாக இருந்த இரு மாதங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோது, நாட்டில் உள்ள பெட்ரோலிய சேமிப்புக் கிடங்குகளில் முழு கொள்ளளவுக்கு கச்சா எண்ணெய்கள் வாங்கி நிரப்பப்பட்டதால் சுமார் ரூ.5000 கோடி சேமிப்பு ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் வெளியிட்ட தகவல்கள்:
> இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் சமையல் எரிவாயு (எல்பிஜி) நுகர்வோரின் மொத்த எண்ணிக்கை 28.90 கோடி. இது தவிர 70.75 லட்சம் நுகர்வோர் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். தற்போது, தேசிய எல்பிஜி விநியோக அளவு 99.5 சதவீதமாக உள்ளது.
> உயிரி எரிபொருள் தேசிய கொள்கை திட்டத்தின்படி, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை அரசு ஊக்குவித்து வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலந்து விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கரும்பு மற்றும் உணவு தானியங்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளது.
எத்தனால் தயாரிப்பு விலைகள், கச்சா பொருட்கள் மற்றும் வடி ஆலைகள், இதர காரணங்களால் மாறுபடும் என உணவு மற்றும் பொது விநியோகத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கரும்பிலிருந்து பெறப்படும் எத்தனால், சேதமடைந்த மற்றும் கூடுதலாக உள்ள அரிசிகளில் இருந்து பெறப்படும் எத்தனால் போன்றவற்றுக்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-20ம் ஆண்டில், 173.03 கோடி லிட்டர் எத்தனால், பெட்ரோலுடன் கலப்பதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
> இந்திய பெட்ரோலிய பொருட்கள் சேமிப்பு நிறுவனம் (Indian Strategic Petroleum Reserve Limited), 5.33 மில்லியன் மெட்ரிக் டன்கள் சேமிப்பு திறனுள்ள சேமிப்புக் கிடங்குகளை விசாகப்பட்டினம், மங்களூரு மற்றும் பாதூரில் வைத்துள்ளன. இங்கு 9.5 நாள்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு வைக்க முடியும்.
மேலும், நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் 64.5 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை சேமிக்கும் அளவுக்கு கிடங்குகளை வைத்துள்ளன. நாட்டில் தற்போதுள்ள மொத்த சேமிப்புக் கிடங்குகள் மூலம் 74 நாள்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு வைக்க முடியும்.
கடந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோது, நாட்டில் உள்ள பெட்ரோலிய சேமிப்புக் கிடங்குகளில் முழு கொள்ளளவுக்கு கச்சா எண்ணெய்கள் வாங்கி நிரப்பப்பட்டன. இதன்மூலம் சுமார் ரூ.5000 கோடி சேமிப்பு ஏற்பட்டது.