வணிகம்

தாவர இறைச்சியை தயாரிக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் கோலி - அனுஷ்கா தம்பதி முதலீடு!

EllusamyKarthik

“முட்டை சைவமா? அசைவமா?” என்ற விவாதம் நடந்து பார்த்திருப்போம். இந்த நிலையில் இப்போது பிரபலமாகி வருகிறது தாவரம் சார்ந்த இறைச்சி. இதனை சைவ இறைச்சி என்றும் சொல்கின்றனர். முழுவதும் தாவரங்களை அடிப்படையாக கொண்ட புரதங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. சர்வதேச அளவில் இது உணவு சார்ந்த தொழில்துறையில் கவனத்தை பெற்றுள்ளது. 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியர் தாவரம் சார்ந்த இறைச்சியை உருவாக்கும் மும்பையைச் சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘Blue Tribe Foods’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

“எதிர்கால சந்ததியினருக்கு பூமியை வாழ சிறந்த இடமாக மாற்றுவது குறித்து நானும், விராட்டும் அதிகம் பேசிக் கொள்வோம். அதில் ஒரு பார்வையாக நாங்கள் இருவரும் எங்கள் வாழ்வில் தாவரம் சார்ந்த உணவு முறையை ஏற்றுக் கொண்டுள்ளோம். இருந்தாலும் உணவு பிரியர்களான நாங்கள் இறைச்சியை மிஸ் செய்வதும் உண்டு” என சொல்லியுள்ளார் அனுஷ்கா. 

பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா தம்பதியரும் தாவரம் சார்ந்த இறைச்சியில் கடந்த ஆண்டு முதலீடு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.