மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட்டில் அரசு துறைகள், தனியாருக்கு மாற்றப்படுவது குறித்து பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு அரங்கங்கள் விரைவில் நீண்ட காலத்திற்கு தனியார் துறைக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பெயர் கூற விரும்பாத இரண்டு நிதி அமைச்சக அதிகாரிகள் 'தி பிரின்ட்' தளத்துக்கு அளித்த பேட்டியின் கூற்றுப்படி, ``நன்கு அறியப்பட்ட ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் மற்றும் தேசிய தலைநகரில் உள்ள சில அரங்கங்கள் முதன்முதலில் குத்தகைக்கு விடப்படலாம். இதுபோன்ற அரசு சொத்துக்களிலிருந்து அதிக வருவாயைப் பெறுவதற்கான திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாகத் தொடங்க உள்ளது. செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தின் மூலம் அரங்கங்களை தனியார் துறைக்கு குத்தகைக்கு விடலாம். இது 30 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தமாக இருக்கலாம்" என்று ஓர் அதிகாரி கூறியிருக்கிறார்.
மற்றொரு அதிகாரி பேசுகையில், ``அரங்கங்களை குத்தகைக்கு எடுக்க தனியார் நிறுவனம் முன்பணம் செலுத்த வேண்டும்; பின்னர் அரங்கங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு பயனர் கட்டணங்களை வசூலிப்பதன் மூலம் வருவாயைப் பெற முடியும். தற்போது, இந்த அரங்கங்கள் ஆண்டின் பெரும்பகுதிக்கு காலியாக உள்ளன. அரங்கங்கள் தவறாமல் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய ஒரு மாவட்ட விளையாட்டு அதிகாரி எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக, விளையாட்டு அமைச்சகம் டெல்லியில் உள்ள அரங்கங்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்த முடியும் என்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது. 2016-இல் ஆண்டு முழுவதும் இந்த அரங்கங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பரிந்துரைக்கக் கூடிய ஆலோசகர்களை வரவேற்கப்படுவார்கள் என்றும் அரசாங்கம் கூறியிருந்தது. அதன்படி தற்போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், குத்தகைக்கு விடப்படும் விளையாட்டு அரங்கங்களில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கான வசதி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக அரசு சார்பில் பிரதிநிதி நியமிக்கப்படலாம். இதற்காக தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களில் அரசாங்கத்திற்கு உட்பிரிவுகள் சேர்க்கப்படலாம்" என்று கூறியிருக்கிறார்.
விளையாட்டு அரங்கங்களை குத்தகைக்கு எடுக்க பல தனியார் விளையாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கக்கூடும் என்பது அரசாங்கத்தின் கருத்து. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் தவிர, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் வரும் அரங்கங்களில் இந்திரா காந்தி விளையாட்டு வளாகம், மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கம், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி நீச்சல் குளம் வளாகம் மற்றும் டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கிச் சுடுதல் அரங்கம் ஆகியவை முதல்கட்டமாக குத்தகைக்கு விடப்படலாம் என்று கருத்தப்படுகிறது. இதில் அரசு எதிர்பார்க்கும் வருவாய் கிடைக்கும் பட்சத்தில் நாடு முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான மைதானங்கள், விளையாட்டு அரங்கங்கள் இதே முறையில் குத்தகைக்கு விடப்படலாம்.
இந்த அதிகாரிகளின் தகவலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஏற்கெனவே, பிப்ரவரி 1 ம் தேதி தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொது உள்கட்டமைப்பு தொடர்பாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ``பொது உள்கட்டமைப்பு சொத்துக்களைப் பணமாக்குவது புதிய உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கான ஒரு முக்கியமான நிதி விருப்பமாகும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பேசியுள்ள மத்திய அரசு அதிகாரி ஒருவர், ``தனியார் துறைக்கு குத்தகைக்கு விட்டு அரசு சொத்துகளில் பணம் திரட்டுவது அரசின் விருப்பங்களில் ஒன்றாகும், ஆனால் பல்வேறு அரசாங்கத் துறைகள் பரந்த
அரசாங்க இருப்புக்களை மேம்படுத்துவதற்கான பிற வழிகளை ஆராய்ந்து வருகின்றன.
சாலை மற்றும் மின் நிறுவனங்களின் சொத்துக்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் பவர் கிரிட் கார்ப் ஆப் இந்தியா லிமிடெட் மூலம் பணம் திரட்ட பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ரயில்வே சொத்துக்கள், விமான நிலையங்கள், சுங்கச்சாவடிகள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் இணைப்புகள் மற்றும் மத்திய கிடங்கு கார்ப்பரேஷன் போன்ற கிடங்கு சொத்துக்கள் மூலம் பணம் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது" என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
- மலையரசு
தகவல் உறுதுணை: The Print