வணிகம்

காலை கடும் சரிவு ; மாலை ஏற்றத்துடன் முடிவு - இந்திய பங்குச் சந்தை நிலவரம்

காலை கடும் சரிவு ; மாலை ஏற்றத்துடன் முடிவு - இந்திய பங்குச் சந்தை நிலவரம்

webteam

இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் சரிவைச் சந்தித்து, பின்னர் மாலையில் ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

கொரோனா வைரஸ் அச்சம் உலகமெங்கும் பரவியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர். இதனால் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சுமார் 10 சதவிகிதம் வரை கீழே சென்றதால் வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்‌டது. அப்போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 3,380 புள்ளிகள் சரிந்து 29,397 புள்ளிகளாகவும், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 1,036 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,553 புள்ளிகளாகவும் வீழ்ச்சி கண்டன.

பின்னர் வர்த்தகம் தொடங்கிய நிலையில், சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் வேகமாக 1,325 புள்ளிகள் உயர்ந்து, 34,103 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது. நிஃப்டி, 365 புள்ளிகள் அதிகரித்து, 9,955 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

2020ஆம் ஆண்டு தொடங்கியது முதல் சென்செக்ஸ் சுமார் 30 சதவிகிதம் சரிந்து ஓரளவு மீண்டுள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 41,306 புள்ளிகளில் வணிகமாகியிருந்தது. தொடர்ச்சியாக, ஜனவரி 20ஆம் தேதி இதுவரை இல்லாத அளவாக சென்செக்ஸ் 42,273 புள்ளிகளில் உச்சம் கண்டது. அந்தநேரத்தில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதால் பிப்ரவரி மாதம் முதல் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தன. படிப்படியாக குறைந்து இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 29,278 என்ற குறைந்தபட்ச புள்ளிகளைத் தொட்டு மீண்டது.