வணிகம்

இரு நாட்டு எல்லையில் பதட்டம்: இந்திய பங்குச்சந்தையில் வீழ்ச்சி

இரு நாட்டு எல்லையில் பதட்டம்: இந்திய பங்குச்சந்தையில் வீழ்ச்சி

webteam

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதட்டம் உருவாகியுள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.

காஷ்மீரில் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படையின் தாக்குதலில் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின், கட்டுப்பாட்டு அறை முற்றிலும் சிதைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி தனது இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் இந்தியாவின் முப்படைகளும் உஷார்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் பதட்டம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இரு நாட்டு எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் குறைந்து 35923 புள்ளிகளாக உள்ளது,  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 80 புள்ளிகள் சரிவடைந்து 10799 புள்ளிகளாக உள்ளது. மேலும்  டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 71.065 என்ற அளவில் உள்ளது.

இரு நாட்டு எல்லைப் பதட்டம் நீடித்தால் பங்குச்சந்தை வீழ்ச்சி நாளையும் தொடர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.