வணிகம்

கொரோனாவால் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வீழ்ச்சி : இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத சரிவு

கொரோனாவால் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வீழ்ச்சி : இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத சரிவு

webteam

கொரோனா எதிரொலியால் இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை இன்று சந்தித்துள்ளன.

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 3,934.72 புள்ளிகள் சரிந்து 25,981.24 புள்ளிகளுடன் நிறைவடைந்தன. இதேபோன்று தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 1,135.20 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 7,610.25 புள்ளிகளுடன் முடிந்தது. இது இந்திய பங்கு சந்தைகள் காணாத வரலாற்று சரிவாகும்.

இன்றைய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 4,305.13 புள்ளிகள் அல்லது 13.49% சரிந்து 25,880.83 என்ற குறைந்தபட்ச நிலையை அடைந்தது. நிஃப்டி 1,161.85 புள்ளிகள் அல்லது 13.29% வீழ்ச்சியடைந்து 7,583.60 புள்ளிகள் என்ற நிலைக்கு சென்றது. இன்றைய பங்கு சந்தையில் ஆக்ஸிஸ் வங்கி அதிகபட்சமாக 28% வீழ்ச்சி அடைந்தது. அதைத்தொடர்ந்து பஜாஜ் ஃபைனாஸ் 23.57 மற்றும் இண்டஸ்லண்ட் வங்கி 23.5% சரிவை சந்தித்தன.

கொரோனா எதிரொலியால் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, இந்திய பங்கு சந்தைகளில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து ரூ.75ஐ தாண்டியது.