வணிகம்

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்தது எஸ்.பி.ஐ!

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்தது எஸ்.பி.ஐ!

நிவேதா ஜெகராஜா

வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மீண்டும் குறைத்திருக்கிறது. மே மாதம் 1-ம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக வங்கி அறிவித்திருக்கிறது.

30 லட்ச ரூபாய் வரையிலான கடன்களுக்கு 6.70 சதவீத வட்டியை எஸ்.பி.ஐ நிர்ணயம் செய்திருக்கிறது. ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு 6.95 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.75 லட்ச ரூபாய்க்கு மேலான வீட்டுக்கடனுக்கு 7.05 சதவீத வட்டியை எஸ்.பி.ஐ நிர்ணயம் செய்திருக்கிறது.

இவை தவிர பெண்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பெயரில் வாங்கும் வீட்டுக்கடனுக்கு 0.05 சதவீதம் கூடுதல் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல எஸ்.பி.ஐ வங்கியின் யோனோ செயலி மூலம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் 0.05 சதவீதம் சலுகை தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மார்ச் மாதம் 31-ம் தேதி வரை 6.70 சதவீத வட்டியில் வீட்டுக்கடனை வழங்கியது எஸ்.பி.ஐ. ஆனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 0.25 சதவீதம் அளவுக்கு வட்டியை உயர்த்தியது. ஏப்ரல் மாதத்தில் 6.95 சதவீதமாக வட்டி இருந்தது. தற்போது மீண்டும் வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடன் வாங்கும் அளவை பொறுத்து வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும் என வங்கி அறிவித்திருக்கிறது.

வீட்டுக்கடன் பிரிவில் எஸ்.பி.ஐ பெரிய அளவிலான சந்தையை வைத்திருக்கிறது. இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள வீட்டுக்கடனில் 34 சதவீதம் அளவுக்கு எஸ்.பி.ஐ மூலமாகவே வழங்கப்பட்டிருக்கிறது.