வணிகம்

எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களின் OTP சேவையில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு

எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களின் OTP சேவையில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு

webteam

எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் அடுத்த ஆறு நாட்களில் தாங்களின் ஓடிபி (OTP) சேவையில் சிக்கலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதற்கான காரணத்தை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

வங்கிகள் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை, மார்ச் 30 ஆம் தேதியை தவிர்த்து அடுத்தடுத்து ஏழு நாட்களுக்கு செயல்படாது. இந்த நாட்களில் மேற்குறிப்பிட்ட வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் ஓடிபியில் சிக்கலைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் என்ன?

வாடிக்கையாளர்களை மோசடி எஸ்.எம்.எஸ் களில் இருந்து பாதுகாக்கவும், வணிகச் செய்திகளை கட்டுப்படுத்தவும், ஒரு செயல்முறையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கியுள்ளது. அந்த செயல்முறையின் படி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வங்கிகளை, அதன் வாடிக்கையாளர்களை அடைய எஸ்.எம்.எஸ் முறையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது.

ஆனால் பல வங்கிகள் இந்த கோரிக்கையை உதாசினப்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் ஆணையம் தங்களின் வழிமுறையை பின்பற்றாத 40 நிறுவனங்களின் பட்டியலை அறிவித்தது. அதில் எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் இடம்பெற்றிருந்தன.

அதனைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆணையத்தின் வழிமுறைகளை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து நிறுவனங்கள் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் ஒடிபியில் சிக்கலை சந்திப்பர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகையால் எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஒடிபியை பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடலாம் எனத் தெரியவருகிறது.