வணிகம்

பெட்ரோல், டீசல் விலையேற்றம் ! சரிந்தது கார், பைக் விற்பனை

webteam

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரண‌மாக ‌வாகன விற்பனை சரிவடைந்திருப்பதாக மோட்டார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி,கச்சா எண்ணெய் விலை உயர்வு,விலையை எண்ணெய் நிதுவனங்களே நிர்ணயிக்கும் நிலை என பல்வேறு காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 3 கோடியே 22 லட்சம் லிட்டர் அளவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் விலை உயர்வு காரணமாக கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கார்களின் விற்பனையும் சந்தையில் சரிவை சந்தித்து வருகிறது. ஜூலை மாத இறுதியில் 78 ரூபாய்க்கு விற்பனையான பெட்ரோல் தற்போது 87 ரூபாயாகவும், டீசல் 71 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதனால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கார் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இந்தியாவில் பைக், கார் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து 3 ஆவது மாதமாக சரிந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 5.61% குறைந்ததாக வாகன உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் செப்டம்பரில் கார், பைக், ஸ்கூட்டர் பிரிவுகளில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியலை வாகன உற்பத்தியாளர்கள் சங்கமான சியாம் வெளியிட்டுள்ளது. அதில்

டாப் 3 கார், பைக்,ஸ்கூட்டர் விற்பனை 

கார்  மாருதிசுசுகி - 1,51,512  ஹுண்டாய்- 47,781  மகிந்திரா - 14,820 
பைக் ஹீரோ  - 6,71,466  ஹோண்டா - 1,70,978 பஜாஜ்-2,73,029 
ஸ்கூட்டர்  ஹோண்டா - 3,49,422 டிவிஎஸ் - 1,37,154   ஹீரோ  - 77,069

கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மாதத்திற்கு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகும். ஆனால் பெட்ரோல் டீசலின் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதுகின்றனர் விற்பனையாளர்கள். பெட்ரோலை விட விலை குறைந்ததாக இருந்த டீசலின் பயன்பாடு கொண்ட கார்களே நடுத்தரக் குடும்பத்தின் தேர்வாக இருந்தது. தற்போது, டீசல் விலையேற்றத்தால் டீசல் காரின் மவுசும் வாடிக்கையாளர் மத்தியில் சரிந்துள்ளது.

பெட்ரோல் விலை 100 ரூபாயை கடக்கும் என துறை சார்ந்தவர்கள் கணித்து வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக, பட்ஜெட் கார்களில் 61 சதவீதம்  பெட்ரோல் கார்களும், 39 சதவிகித டீசல் கார்களுமே விற்பனையாவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரண‌மாக ‌20 சதவிதம் வாகன விற்பனை சரிவடைந்தது.