வணிகம்

மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,02,709 கோடி! தொடர்ந்து 8ஆவது மாதமாக அதிகரிப்பு

மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,02,709 கோடி! தொடர்ந்து 8ஆவது மாதமாக அதிகரிப்பு

நிவேதா ஜெகராஜா

2021 மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல் ரூ.1,02,709 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.17,592 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூ.22,653 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ரூ.53,199 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ₹ 26,002 கோடியாகவும் சேர்த்து) மற்றும் செஸ் ரூ.9,265 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.868 கோடியாகவும் சேர்த்து) உள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக 2021 மே மாதத்திற்கான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான தாமத கட்டண தள்ளுபடி/வட்டி குறைப்பு (15 நாட்களுக்கு) உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4 வரை உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வசூலான ஜிஎஸ்டி வருவாய் இதுவாகும்.

ஐஜிஎஸ்டியில் இருந்து செய்யப்படும் வழக்கமான பைசலான சிஜிஎஸ்டிக்கு ரூ.15,014 கோடியையும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.11,653 கோடியையும் இந்த மாதத்தின்போது அரசு வழங்கியது.

கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜிஎஸ்டி வருவாய் இந்தாண்டு 65 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, சரக்கு இறக்குமதி மூலம் வசூலான வருவாய் 56 சதவீதம் அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் வசூலான வருவாய் 69 சதவீதம் அதிகமாகவும் உள்ளது. தொடர்ந்து எட்டாவது மாதமாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.