பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது. "ரெப்போ ரேட்" என அழைக்கப்படும் குறுகிய கால வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் அறிவித்துள்ளார்.
இதனால் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் வாகனங்கள், ஏசி மற்றும் கணினி போன்ற பொருட்கள், மற்றும் வீடுகள் ஆகியவற்றை வாங்குவதற்கான கடன்களுக்கான வட்டி விகிதம் அரை சதவிகிதம்வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சில வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்துவரும் நிலையில், வாடிக்கையாளர்கள் கடனுக்கு கொடுக்கவேண்டிய வட்டி வரும் மாதங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த CRR 50 புள்ளிகள் அதிகரிக்கப்படுவதாக சக்திகாந்தா தாஸ் அறிவித்தார். வங்கிகள் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்கும்போது ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைக்க வேண்டிய இருப்பு நிதி CRR அல்லது "கேஷ் ரிசர்வ் ரேஷியோ" என அழைக்கப்படுகிறது. CRR அதிகரிப்பால் பணப்புழக்கம் 87,000 கோடி ரூபாய் குறையும் என வங்கி அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். CRR 4.5 சதவிகிதமாக அதிகரிக்கப்படுகிறது எனவும் இது மே 21 முதல் அமலுக்கு வரும் எனவும் சக்திகந்தா தாஸ் விளக்கினார்.
"ரெப்போ ரேட்" என்பது ரிசர்வ் வங்கி எந்த வட்டி விகிதத்தில் வங்கிகளுக்கு கடன் அளிக்கும் என்பதை குறிப்பதாகும். இந்த வட்டி விகிதம் உயர்ந்தால், வங்கிகளிடம் கடன் பெறுவதற்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்பது நடைமுறை. இந்த முக்கிய வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்டது. அமெரிக்காவிலும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சென்செக்ஸ் 1,306 புள்ளிகளும் மற்றும் நிஃப்டி 391 புள்ளிகளும் சரிந்தன. எல்.ஐ.சி. பங்குகளை வாங்க பிற பங்குகளை முதலீட்டு நிறுவனங்கள் விற்பதாகவும் கருதப்படுகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் விளக்கினார். இதுவரை ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் 4 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது அது 4.40 சதவிகிதமாக அதிகரிக்கப்படுகிறது என அவர் மும்பை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் அறிவித்தார்.
மூலபொருட்கள் விலை உயர்வு மற்றும் விநியோக சிக்கல்கள் கவலை அளிப்பதாக ஆளுநர் சக்திகாந்தா தாஸ் வலியுறுத்தினார். பணவீக்கம் கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி உச்சவரம்பான 6 சதவிகிதத்தை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்திய பொருளாதாரம் எதிர்வரும் சோதனைகளை சந்திக்க வலுவாக இருப்பதாக சக்திகாந்தா தாஸ் தெரிவித்தார்.
சர்வதேச பொருளாதார பிரச்சினைகள் குறித்து ரிசர்வ் வங்கியின் நிபுணர்கள் குழு ஆலோசனை நடத்தி வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்ததாக சக்திகாந்தா தாஸ் தெரிவித்தார். உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பது கவலையாக உள்ளது எனவும் அவர் கூறினார்.
- கணபதி