தொழில்நுட்ப சிக்கலால் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஹெச்டிஎஃப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இந்த தடையை செவ்வாய்க்கிழமை நீக்கியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
கடந்த டிசம்பர் மாதம் புதிய கிரெடிட் கார்டுகள் மட்டுமல்லாமல், புதிய டிஜிட்டல் நடவடிக்கைகளுக்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்ததிருந்தது. அந்த தடை தற்போதும் தொடரும் நிலையில், புதிய கிரெடிட் கார்டு விநியோகம் செய்வதற்கான தடையை மட்டும் நீக்கியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
கிரெடிட் கார்டு சந்தையில் 24 சதவீத சந்தையை வைத்திருக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு இது பெரும் பாதிப்பாக இருந்தது. தொழில்நுட்ப கோளாறுகளால் ஹெச்டிஎஃப்சி வங்கியின் தளத்தை பயன்படுத்துவதில் சில முறை சிக்கல் உருவானது. அதனால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்த நிலையில், விதிமுறைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப பலத்தை மேம்படுத்துவோம் என ஹெச்டிஎஃப்சி வங்கியின் இயக்குநர் குழு கடிதம் வழங்கியதை அடுத்து, தடையில் தளர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த தளர்வால் இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சம் 3.4 சதவீதம் அளவுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கின் விலை உயரந்து வர்த்தகமானது. இதனால் முதன்முறையாக சென்செக்ஸ் 56,000 புள்ளிகளை கடந்தது. இதில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஏற்றம் முக்கியமானது.