'சப்வே இந்தியா' நிறுவனத்தை 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' வாங்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் 'தி எகனாமிக் டைம்ஸ்' செய்தி வெளியிட்டிருக்கிறது.
குயிக் சர்வீஸ் ரெஸ்டாரன்ட் பிரிவில் 'சப்வே இந்தியா' நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தை ரூ.1480 கோடி முதல் ரூ.1,860 கோடி வரையிலான மதிப்பில் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரீடெய்ல், ஆன்லைன் பார்மசி, பேஷன், பர்னிச்சர், டிஜிட்டல், ஜூவல்லரி உள்ளிட்ட பல பிரிவுகளில் 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரெஸ்டாரன்ட் பிரிவையும் இணைக்க திட்டமிட்டிருக்கிறது. சர்வதேச அளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 43,600 ஸ்டோர்களை 'சப்வே இந்தியா' நடத்தி வருகிறது.
இந்த இணைப்பு மூலம் இந்தியாவில் செயல்பட்டுவரும் 600-க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் ரிலையன்ஸ் குழுமம் வசம் இணையும். இந்தியாவில் குயிக் சர்வீஸ் ரெஸ்டாரன்ட் பிரிவில் 6 சதவீத சந்தையை (மொத்த சந்தை சுமார் ரூ18,600 கோடி) 'சப்வே இந்தியா' வைத்திருக்கிறது. பீட்ஸாஹட், டொமோனோ பீட்ஸா, பர்கர் கிங், மெக்டொனால்ட், ஸ்டார்ட் பக்ஸ் உள்ளிட்டவை குயிக் சர்வீஸ் ரெஸ்டாரன்ட் பிரிவில் செயல்பட்டுவரும் முக்கியமான நிறுவனங்கள்.
ரிலையன்ஸ் கடந்த சில மாதங்களாகவே நிறுவனங்களை வாங்கும் நடவடிக்கையில் உள்ளது. ஜஸ்ட் டயல், நெட்மெட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை ரிலையன்ஸ் வாங்கி இருக்கிறது. ஆனால், 'சப்வே இந்தியா' இணைப்பு குறித்து சப்வே இந்தியா மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை கருத்து ஏதும் இன்னும் தெரிவிக்கவில்லை.