நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கந்து வட்டி வசூலிக்க முடியாது என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மேலும், கடன் வழங்குதல் மற்றும் அதற்கான கட்டணங்களுக்கும் உச்ச வரம்பை நிர்ணயிக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள வாடிக்கையாளர்கள் நுண்கடன் பெற விரும்பும்போது அவர்களுக்கு நுண்கடன் நிறுவனங்கள் பிணை இல்லாமல் கடன் வழங்குகின்றன. இந்நிலையில், நுண்கடன் நிறுவனங்களுக்கான முதன்மை வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நுண்கடன்களுக்கான வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கு அதிக வட்டி வசூலிக்கக்கூடாது என்றும், இவை தங்களின் மேற்பார்வையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், வாடிக்கையாளர் கடனை தாமதமாக செலுத்த நேரிடும்போது அந்தத் தொகைக்கு மட்டுமே அபராத கட்டணம் விதிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.