வணிகம்

ஜூன் மாதம் முதல் பறக்கிறது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் 'ஆகாசா ஏர்'!

ஜூன் மாதம் முதல் பறக்கிறது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் 'ஆகாசா ஏர்'!

webteam

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்திருக்கும் ஆகாசா விமான நிறுவனம் வரும் ஜூன் மாதம் செயல்பாட்டை தொடங்க இருக்கிறது. செயல்பாட்டை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருதாக தலைமைச் செயல் அதிகாரி வினய் தூபே தெரிவித்திருக்கிறார்.

இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் இணைந்திருக்கிறார்கள். செயல்பட தொடங்கிய 12 மாதத்தில் 18 விமானங்களை கொண்டுவர இருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் விமானங்களின் எண்ணிக்கையை 72 ஆக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் உள்நாட்டில் மட்டுமே செயல்படும் என்றாலும் எந்தெந்த நகரங்களுக்கு சேவை அளிக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

வரியை குறைக்க வேண்டும்

விமான நிறுவனங்கள் சார்பாக விங்க்ஸ் என்னும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் விமான எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும் என விமான நிறுவனங்களின் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். விமான போக்குவரத்து துறை வளர வேண்டும் என்றால் ஜிஎஸ்டி வரியை குறைத்தாக வேண்டும். நீண்ட காலமாக இந்த துறை சிக்கலில் இருப்பதற்கு வரிதான் காரணம். நிறுவனங்களின் வருமானத்தில் 21 சதவீதம் அளவுக்கு வரி மூலமாக மத்திய அரசுக்கு செல்கிறது.

இந்த நிலையில் தற்போதைய கச்சா எண்ணெய் விலை உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். சர்வதேச அளவில் முக்கியமான விமானபோக்குவரத்து மையமாக இருக்க வேண்டும் என அரசு திட்டமிடுகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக சூழல் இருக்கிறது. இது மிகவும் கடினமாக காலகட்டமாகும். அதேசமயத்தில் வங்கிகளும் விமான நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க முன்வரவில்லை. எதிர்காலம் மாறும் என்னும் நம்பிக்கையில் மட்டுமே நாங்கள் செயல்பட்டுவருகிறோம் என தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் விமானபோக்குவரத்து செயலாளர் சத்யேந்திர மிஸ்ரா விமான நிறுவனங்களின் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். 2013-14ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது வரிகள் மிகவும் குறைவு. விமான போக்குவரத்து துறையில் உள்ள சிக்கல்களை அரசு புரிந்து வைத்திருக்கிறது. அரசு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்துவருகிறது என தெரிவித்திருக்கிறார்.