ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஃபபர் பங்குகளில் கத்தார் நாட்டை சேர்ந்த முதலீட்டு நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோவின் பங்குகளை கடந்த சில மாதங்களாக விற்பனை செய்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது பிராட் பேண்ட் சேவை மூலம் இணையதளம் வழங்கும் ஜியோ ஃபைபரின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக முதலீட்டு நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் கத்தார் நாட்டின் முதலீடு நிறுவனம் ஒன்று ஜியோ ஃபைபர் பங்குகளை வாங்குவது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதன்படி, ஜியோ ஃபைபர் பங்குகளில் அந்நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் (ரூ.11,200 கோடி) முதல் 2 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தபோது பெரும் நஷ்டம் அடைந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, தனது ஜியோ பங்குகளை ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு விற்றதன் மூலம் பெரும் முதலீடுகளை பெற்றிருந்தார். இதனால் அவரது சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் ஜியோ ஃபைபர் பங்குகளை விற்பனை செய்யவுள்ளதால், அவரது சொத்து மதிப்பு மேலும் உயரவுள்ளது.