வணிகம்

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம்... புதுச்சேரி ஆராய்ச்சி மேற்படிப்பு மாணவரின் விபரீத முடிவு

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம்... புதுச்சேரி ஆராய்ச்சி மேற்படிப்பு மாணவரின் விபரீத முடிவு

நிவேதா ஜெகராஜா

பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் புதுச்சேரியில் பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுகோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவருக்கு இரண்டு மகன்கள், இவரது இரண்டாவது மகன் பிரவின் டேனியல் (வயது 31), புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பட்ட ஆராய்ச்சி மேற் படிப்பு படித்து வருகிறார், கூடுதலாக பங்கு சந்தை முதலீட்டு தொழிலும் செய்து வந்துள்ளார் இந்நிலையில், நேற்று மாலை பிரவின் பிள்ளைசாவடியில் தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காலாபட்டு போலிசார் பிரவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் பங்கு சந்தை தொழிலில் 10 லட்ச ரூபாய்க்கு மேலாக அவர் நஷ்டம் அடைந்துள்ளதால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, மேலும் அவர் தற்கொலைக்கு வேறேதும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

********** 

தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல.

தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், உடனடியாக அதற்கான உதவி எண்களை நாட தயங்க வேண்டாம் - மாநில சுகாதாரத் துறை தற்கொலை உதவி எண் - 104.