வணிகம்

21ஆயிரம் போலி கணக்குகள் - மோசடி புகாரில் சிக்கிய பிஎம்சி வங்கி 

21ஆயிரம் போலி கணக்குகள் - மோசடி புகாரில் சிக்கிய பிஎம்சி வங்கி 

webteam

பிஎம்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி புகாரில் சிக்கியுள்ளது. 

தாங்கள் கொடுத்த கடன்களை மறைப்பதற்காக 21ஆயிரம் போலியானக் கணக்குகளை பிஎம்சி உருவாக்கியுள்ளது எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பை காவல்நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். 

21ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக (616 மில்லியன் டாலர்கள்) இந்திய ரூபாய் மதிப்பில் 4355 கோடி மறைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தனி நிறுவத்துக்கு மட்டும் 44 வங்கி கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியின் உண்மையான நிதி நிலை மறைக்கப்பட்டுள்ளது என்றும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

21 ஆயிரம் கணக்குகள் மூலம் கொடுக்கப்பட்ட கடன் விவரங்கள் எதுவும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றும், கணினி கணக்குகளிலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மோசடிப் புகாரில் வங்கியின் தலைவர் வர்யாம் சிங் மற்றும் இயக்குநர் ஜாய் தாமஸ் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நிதி மோசடி, ஆவணங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி மீது கடந்த ஆண்டு மோசடி புகார் எழுந்தது. அந்தப் புகாருக்கே இன்னமும் தீர்வு காணப்படாத நிலையில் தற்போது பிஎம்சி வங்கி மீது மோசடி புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்