உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜை தலைமையகமாகக் கொண்ட 'பிசிக்ஸ்வாலா' நிறுவனம், 100 மில்லியன் டாலர் நிதி திரட்டி யூனிகார்ன் அந்தஸ்து பெற்றுள்ளது.
இந்தியாவில் 101வது யூனிகார்ன் நிறுவனத்துக்கான கவுண்ட்-டவுன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில், கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான 'பிசிக்ஸ்வாலா' 101-வது யூனிகார்ன் நிறுவனமாக மாறி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் அலக் பாண்டே என்பவரால் 2016ஆம் ஆண்டில் ஒரு யூடியூப் சேனலாக தொடங்கப்பட்டதுதான் 'பிசிக்ஸ்வாலா'.
இது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது. இந்த சேனலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்டு அனாகாடமி நிறுவனம் ஆசிரியர் அலக் பாண்டேவை ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் ஊதியம் வழங்கி பணியில் அமர்த்த முன்வந்தது. ஆனால் அந்த வேலைவாய்ப்பை நிராகரித்தார் ஆசிரியர் அலக் பாண்டே.
தற்போது சீரியஸ் ஏ முதலீட்டை திரட்டி இருக்கும் பிசிக்ஸ்வாலா, சில நாட்களுக்கு முன்பு 100 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. இதன் மூலம் 1.1 பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனமாக பிசிக்ஸ்வாலா மாறி இருக்கிறது.
இதையும் படிக்கலாம்: ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் நீக்கப்படுகிறதா? - ரிசர்வ் வங்கி விளக்கம்