வணிகம்

வரலாறு காணாத உச்சத்தில் பெட்ரோல் விலை

வரலாறு காணாத உச்சத்தில் பெட்ரோல் விலை

Rasus

4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து பெட்ரோலுக்கான சுங்க வரியைக் குறைக்க உதவுமாறு நிதி அமைச்சகத்தை பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்த நடைமுறை ஜூன் மாதம் கைவிடப்பட்டது. இதனையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 38 காசுகளுக்கும், டீசல் விலை 63 ரூபாய் 20 காசுகளுக்கும் விற்கப்படுகின்றன. கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நிகழ்ந்துள்ள அதிகப்பட்டச விலை உயர்வு இதுவாகும்.

மும்பையை பொறுத்தவரை உள்ளூர் வரி உள்பட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 80ஐ நெருங்கியுள்ளது. மும்பையில் தான் நாட்டில் அதிகப்பட்ச விலைக்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய் 67.30 ஆகும். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மட்டும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் 86 காசுகள் இங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், மற்றும் டீசலுக்கான சுங்க வரியை குறைக்க உதவுமாறு மத்திய நிதியமைச்சகத்தை பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19 ரூபாய் 48 காசுகளும், ஒரு லிட்டர் டீசலுக்கு 15 ரூபாய் 33 காசுகளும் சுங்க வரியாக விதிக்கிறது. 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 9 முறை சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் கடந்த 2017 ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் ஒரே ஒரு முறை சுங்க வரியை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்திருந்தது.