வணிகம்

டிராப்பிகானாவை விற்கிறது பெப்சி நிறுவனம்: பின்புலம் என்ன?

டிராப்பிகானாவை விற்கிறது பெப்சி நிறுவனம்: பின்புலம் என்ன?

நிவேதா ஜெகராஜா

பெப்சி நிறுவனத்தில் பல பிராண்ட்கள் உள்ளன. அதில் டிராப்பிகானா உள்ளிட்ட ஜூஸ் பிராண்டுகள் பிரபலமானவை. இந்தப் பிரிவுகளை பெப்சிகோ நிறுவனம் விற்க முடிவெடுத்திருக்கிறது.

பிரான்ஸை சேர்ந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான பாய் பார்னர்ஸ் (PAI) நிறுவனத்திடம் இந்தப் பிரிவை 330 கோடி டாலருக்கு விற்கிறது பெப்சி. இதற்கு பதிலாக இரு நிறுவனங்களும் புதிதாக உருவாக்கும் நிறுவனத்தில் 39 சதவீத பங்குகள் பெப்சிகோவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த இணைப்பு முழுமையடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸைச் சேர்ந்த இந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் உணவு சார்ந்த பிரிவுகளில் மட்டுமே முதலீடு செய்யும். ஏற்கெனவே நெஸ்லேவுடன் இணைந்து ஐஸ்கிரீம் பிரிவில் முதலீடு செய்திருக்கிறது.

அதிக சர்க்கரை இருக்கும் பானங்களில் இருந்து வெளியேறி, குறைந்த கலோரி பானங்களில் கவனம் செலுத்த இருப்பதாக பெப்சி தெரிவித்திருக்கிறது.

டிராப்பிகானாவை விற்றிருந்தாலும் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விற்பனை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு மட்டுமே பொருந்தும் என பெப்சிகோ இந்தியா தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' குறிப்பிட்டிருக்கிறது.