office model image - freepik
வணிகம்

ஒரு வணிகனின் கதை 6 | ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்வது சரி? கடினமாகவா, மென்மையாகவோ?

ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? கடினமாகவா, அல்லது மென்மையாகவா? எது சரி? அல்லது சரியான நிலை என்பது எது?

ஆதிமூலகிருஷ்ணன்

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!


தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 6 - ஒத்துழைப்பு

சண்முகநாதனிடமிருந்து அவசரமாகப் போன் வந்தது. உடனடியாகத் திருநெல்வேலி பிஆர்டி நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். ஒரு முக்கியமான கெஸ்ட், ஹோட்டலில் 3 நாட்களுக்கு மேலாக தங்கவிருக்கிறார் எனவும், அது குறித்த மீட்டிங்கில் நாம் கலந்துகொள்ள வேண்டும் என்றும், கூடவே பிஆர்டியில் நிரந்தரமாக பகல்நேரப் பணியில் இருக்கும் நமது ஊழியர் சுந்தர் இரண்டு நாட்களாகப் போனை எடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

phone call

அங்கு போய் அந்த மீட்டிங்கில் உட்கார்ந்த பிறகுதான் அவர்களது சிக்கலை முழுமையாக உணர்ந்தேன். சுந்தர் மூன்று நாட்களாகப் பணிக்கு வரவில்லை எனவும், நாளையிலிருந்து, சொந்த வேலையாக திருநெல்வேலி வரவிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா, ஹோட்டலில் 3 நாட்கள் தங்கவிருக்கிறார் எனவும் தெரியவந்தது. மீட்டிங்கில் என்ன மாதிரியான ஆட்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற கடுமையான திட்டும் எனக்குக் கிடைத்தது. எதிர்பார்த்ததுதான். சண்முகநாதனுக்குக் கிடைக்கவேண்டியது, நான் வாங்கிக் கொண்டேன்.

சண்முகநாதன் எனது நண்பர். திருச்சியை மையமாகக் கொண்ட ஒரு பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதிலுமிருந்து சில குறிப்பிடத்தகுந்த நிறுவனங்களுக்கு பெஸ்ட் கண்ட்ரோல் சேவையை வழங்கி வருகிறார். நான் நமது கடையைத் தொடங்குவதற்கு முன்பாக, அவரது நிறுவனத்துக்காகப் பகுதி நேரப் பணி செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மேலாளராக கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருக்காகப் பணிபுரிந்தேன். அப்போது நடந்த சம்பவம்தான் இது.

மீட்டிங் அறை

மீட்டிங் அறையிலிருந்து வெளியே வந்ததும், சுந்தரை போனில் அழைக்க முயற்சித்தேன். போன் ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது. அவனுக்கு என்ன பிரச்சினையோ? நல்ல பையன், என்னிடம் மிக நன்றாகப் பழகுவான்.

அடுத்து சண்முகநாதனை அழைத்து விஷயத்தின் சீரியஸ்னஸை விளக்கினேன். எங்களுக்குத் தூத்துக்குடியில் இரண்டு பேர், நெல்லையில் சுந்தரோடு சேர்த்து மூன்று பேர் என ஐந்து ஊழியர்கள் இருந்தாலும், சுந்தரைத் தவிர மற்ற நால்வரும் இந்த முக்கிய வேலைக்கு சரிப்பட்டு வருவார்கள் என்று தோன்றவில்லை. அதோடு, நான்கு நாட்கள் அவர்களை, அவர்களது ரொட்டீன் வேலையிலிருந்து பிரித்து எடுக்கவும் முடியாது. உடனடியாக நல்ல அனுபவமும், ஒழுக்கமும் மிக்க ஒரு பணியாளரை மதுரைக் கிளையிலிருந்து அனுப்பி வைக்கச் சொன்னேன்.

இளையராஜா தங்கவிருக்கும் அறையில் ஒரு கொசுவோ, குளியலறையில் ஒரு கரப்பான்பூச்சியோ கண்ணில் பட்டால் என்னவாகும் என்று நினைத்துப் பார்த்தேன். திருநெல்வேலி பிஆர்டி என்றில்லை, தமிழகம் முழுதும் உள்ள அத்தனை பிஆர்டி கிளைகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சண்முகநாதனுடைய காண்ட்ராக்ட் கிழிந்து போய்விடும்!

இளையராஜா

இளையராஜா தங்கவிருக்கும் அறையை நோட்டமிட்டு, திரைச்சீலைகளுக்கு பின்னால், கட்டிலுக்கு அடியில், கப்போர்டுகளுக்கு உட்புறம், பாத்ரூமின் மூலைமுடுக்குகள் என எல்லா இடத்தையும் சோதித்து, ஏதாவது பூச்சிகளுக்கான அறிகுறிகள் தெரிகிறதா என்று என்னால் இயன்றவரைப் உற்றுப் பார்த்துவிட்டு, சண்முகநாதனுக்கு அப்டேட் செய்தேன். மதுரையிலிருந்து ஆள் வரும்வரை, அடுத்த ஐந்து மணி நேரம் அங்கேயே காத்திருந்தேன். ஒரு பையன் வந்தான். பெயர் மணிகண்டன். அவனை அதுவரை நான் பார்த்தது கூட இல்லை. ஆனால், தெளிவாக ஷூக்கள், சீருடை, ஐடி கார்டு எல்லாம் அணிந்திருந்தான்.

“வேலைக்குச் சேர்ந்து எவ்வளவு நாட்களாகின்றன மணிகண்டன்?”

“மூணு மாசம் இருக்கும் சார்!”

“மூணு மாசமா? யாரையாச்சும் சீனியரைத்தானே வரச்சொன்னேன், ஆறுமுகசாமி, வேல்பாண்டி யாருமில்லையா?”

”ஆறுமுகசாமியண்ணன் ஸ்டேட்பேங்க் ரிவ்யூ மீட்டிங் இருக்குனு வரமுடியலைன்னுட்டார். வேல்பாண்டினு யாருமில்லையே சார்?”

“வேல்பாண்டி தெரியாதா? சரி மத்தவங்க?”

“மத்தவங்க எல்லோரும் எனக்கப்புறம் வந்தவங்கதான் சார்!”

pest control

சண்முகநாதனைக் கேட்டால், இந்தப் பையன் நல்லா பண்ணுவான் சார், இவனை வைச்சுச் சமாளிங்க, வேல்பாண்டி வேலையை விட்டுப் போய் நாலு மாசமாச்சு என்றார். பிறகு மணிகண்டனிடம் கெமிக்கல் விபரங்களெல்லாம் தெரியுமா என்று கேட்டு அவனது அறிவைச் சோதித்துப் பார்த்தேன். பரவாயில்லை. உண்மையில், எனக்கே கொசுவுக்கு என்ன கெமிக்கல் அடிக்க வேண்டும்? எவ்வளவு அடிக்க வேண்டும்? எந்தக் கால இடைவெளியில் அடிக்க வேண்டுமென்பது தெரியாது. இருப்பினும், சண்முகநாதனைக் கேட்டு ஒரு அட்டவணை போட்டு வைத்திருந்தது இது போன்ற ஆபத்துகளில் உதவுகிறது. பிறகு, மணிகண்டனுக்குத் தெளிவாக நிலைமையை எடுத்துச்சொல்லிப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

அன்றிரவு, நான் படுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த சுமார் பத்து மணிக்கு சுந்தரிடமிருந்து போன் வந்தது. முதலில் எனக்கு கோபம்தான் வந்தது.

“என்ன சுந்தர்? இப்படிப் பண்ணிட்டே? அட்லீஸ்ட், வரமுடியலைன்னா என்னிடம் முன்னதாகவே சொல்லியிருக்கலாமில்லையா?” என்று கடிந்துகொண்டேன்.

”சார், சாரி சார். ஒரு பர்சனல் சிக்கல்! அதான் சொல்ல முடியலை!”

“என்ன பிரச்சினையா இருந்தாலும் போன் பண்றதுக்கென்ன? நாளை வந்துடுவியா?”

“சார், நான் ஒரு பொண்ணை லவ் பண்ணினேன் சார். அவ வேற காஸ்ட் சார். அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சி போய் திடீர்னு அவளுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் பண்ணிட்டாங்க சார். அதான் வேற வழியில்லாமல் ஓடிப்போயிட்டோம் சார். அவ வீட்டுக்காரங்க 3 நாளா எங்களை சுத்து போட்டுத் தேடிகிட்டிருந்தாங்க சார். அதான் போனை ஆஃப் பண்ணிட்டோம். இப்ப, நாங்க சென்னையில் இருக்கோம் சார்”

love

“அடப்பாவி, உனக்கு என்ன வயசாவுது?”

“26 ஆவுது சார்”

”அந்தப் பொண்ணுக்கு?”

”23 ஆவுது சார்”

“படிச்சிருக்கா?”

“பிஎஸ்ஸி படிச்சிருக்கா சார்”

“அப்ப சரி, நல்லாயிருங்க! நெல்லை வந்ததும் எனக்குச் சொல்லு, பார்க்க வர்றேன், என்ன?”

நிஜமாகவே அதற்குள்ளாகவே எனக்கு கோபம் போய், அவன் மீது ஒரு மரியாதையும், அன்பும் தோன்றிவிட்டது.

“அப்ப வேலைக்கு வரமுடியாதில்ல”

“இல்ல சார், இன்னும் ஒரு வாரத்துல வந்துடுவேன். இங்க நாங்க நினைச்ச மாதிரி ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்ல, எங்க ரெண்டு வீட்டுக்காரங்களும் கூடிப்பேசி சமாதானமாயிட்டாங்களாம். இன்னும் ரெண்டு நாள்ல அங்க வந்துடுவேன்”

lovers

“ஏய், ஏதாச்சும் பொய்கிய் சொல்லியிருக்கப் போறானுக, பாத்து ஜாக்கிரதை!”

”அந்தளவுக்குல்லாம் எங்க வீட்டுக்காரங்களுக்கு விவரம் பத்தாது சார், அதோடு எங்க மாமா ஒருத்தரை உண்மையான நிலவரம் தெரிஞ்சிக்க ஏற்பாடு பண்ணிட்டுதான் வந்தேன்.”

“அப்ப சரிப்பா! வாழ்த்துகள்ப்பா!”

“சார், இது எதையும் சண்முகநாதன் சாருக்கு சொல்லிடாதீங்க சார், அவர் காச்சுமூச்சுனு கத்துவாரு. அவர்கிட்டலாம் மனுசன் வேலை செய்யமுடியாது சார். ஏற்கனவே நான் வேற வேலை தேடிகிட்டுதான் இருக்கேன். கிடைக்கிறவரை இங்க இருக்கணும்”

“சரிப்பா, நான் பார்த்துக்குறேன்”

என்று சொல்லிவிட்டு வைத்தேன்.

சுந்தர் சொல்வது சரிதான், சண்முகநாதன் ஊழியர்களிடம் மிகக்கடுமையாக நடந்துகொள்பவர். திருச்சி அலுவலத்திலேயே பார்த்திருக்கிறேன். அவரிடம் பேசவே பயப்படுவார்கள். போனில் ஊழியர்களிடம் பேசினால் கெட்டவார்த்தையெல்லாம் சரளமாக வரும். ஏதாவது கஸ்டமரிடமிருந்து ஒரு கம்ப்ளைண்ட் வந்துவிட்டால் போதும். ரணகளப் படுத்திவிடுவார்.

rude boss

நானே அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்,

“நாதன், இவ்வளவு கடுமையாக நடந்துக்காதீங்க, ரீடெயின் பண்றது கஷ்டம். சரியில்லாத ஆட்களை வெளியேற்றலாம். ஆனால், நல்ல ஊழியர்கள் வெளியேறினால் நமக்குத்தான் சிரமம்.”

“உங்க அனுபவத்துல பேசாதீங்க சார். நீங்க பெரிய கம்பெனிகள்ல வேலை பார்த்துட்டு வந்திருக்கீங்க, எல்லாம் நிறைய படிச்சவங்களா இருப்பாங்க. அவங்ககிட்ட நடந்துக்குற மாதிரி இவங்ககிட்ட நடந்துகிட்டோம்னா, தலை மேல ஏறி டான்ஸ் ஆடிருவாங்க சார். நாம ஒவ்வொரு கம்பெனியிலயும் ஆர்டர் எடுக்க என்னா நாய்ப்பாடு படுறோம்.

rude boss

இவனுகளை போய் மருந்தடிக்கச்சொன்னா, எங்காவது மூலை முடுக்குல போய் ஒளிஞ்சிகிட்டு டைம் பாஸ் பண்ணிட்டு வர்றானுக சார். அன்னிக்கு ஒருத்தன் மதுரை கேட்வேல பின்னாடி ஸ்டோர் ரூம்கிட்ட போய் சிகரெட் பிடிச்சிருக்கான் சார். அது எவ்வளவு பெரிய ஹோட்டல், அங்க எவ்வளவு பெரிய ஆட்கள்லாம் வருவாங்க. ரஜினிகாந்தே வந்தாலும் டெஸிக்னேடட் ஏரியாவிலதான் சிகரெட் பிடிக்கமுடியும். நாமல்லாம் எந்த மூலைக்கு? சிசிடிவியில பாத்துட்டு எனக்கு கம்ப்ளைண்ட் வருது. நேர்ல போனா, அவன் என் மூஞ்சியில காறித்துப்புறான். நீங்க என்னடான்னா இவங்களுக்கு சப்போர்ட் பண்ணிகிட்டு வர்றீங்க!”

கொஞ்சமாக சிரித்து, அவர் கூல் டவுன் ஆனதும் சொன்னேன்,

“நீங்க சொல்றதும் சரிதான். ஆனால், அதே கண்ணோட்டத்தோடு எல்லா ஊழியர்களையும் நாம நடத்துறது சரியா இருக்காது, யோசிங்க!”

“பண்ணுறேன்”

discussion

ம்ஹூம், அது என் கருத்தை ஏற்றுக்கொண்டு சொல்லும் வார்த்தையாக எனக்குத் தெரியவில்லை. அதன் பின்விளைவுகளைத்தான் அவர் அடிக்கடி அனுபவித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 ஊழியர்கள் அவருக்கு. அதில் ஒரு ஐந்து பேராவது நிரந்தரமாக இருப்பார்களா என்பது சந்தேகமே! மற்றவர்களெல்லாம் ஐந்தாறு மாதங்களைத் தாண்டுவதே சிரமம்தான். இவரும் புதிய ஆட்களுக்கான பயிற்சி, சீருடை, ஐடி கார்டு என்று மல்லுக்கட்டிக்கொண்டே இருப்பார். அவர்கள் வேலையில் அடிப்படையைக் கற்றுக்கொண்டு முக்கிய நிறுவனக்களுக்குப் பணிக்குப் போக எத்தனை நாட்களாகும்? அப்படியே போனாலும், அவர்களின் அனுபவமின்மையால் எத்தனைச் சிரமங்கள் ஏற்படும்? அதையெல்லாம் சமாளிக்கவே சண்முகநாதனுக்கு நேரம் போதாது. பிறகெப்படி தொழில் வளர்ச்சி, புதிய கஸ்டமர்கள் சாத்தியமாகும்?

இருப்பதைத் தக்க வைப்பதற்கே முழு சக்தியுடன் அவர் போராட வேண்டியதிருக்கும். இந்த ஊழியர்களில் முக்கால்வாசிப் பேராவது ஓரளவு அவரோடு வருடக்கணக்கில் பயணித்தால் அவருக்கு விளையும் நன்மைகள் எவ்வளவு என்பதை யோசித்தாலே பிரமிப்பாக இருக்கிறது. ஆனால், அது அவருக்குப் புரியப்போவதில்லை!

discussion

எனது இப்போதைய, இரண்டு ஊழியர்களை நினைத்துப் பார்க்கிறேன். முத்து இரண்டு வருடங்களுக்கு மேலாக என்னுடன் இருக்கிறான். கதிர் வந்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது. ஒரு முறை கூட கடிந்துகொண்டதில்லை. தவறுகள் நடக்கும் போது கூட, ‘இது எப்படி, எதனால் நடந்தது? அதனால் நமக்கு இழப்பென்ன? இனி எப்படி கவனமாக இருப்பது’ என்பது போலத்தான் எனது செயல்பாடுகள் இருக்கும்!

நான் கடையில் இல்லாவிட்டால் கூட எல்லா விஷயங்களும் நானிருந்து நடப்பதற்குச் சமமாகவே நடக்கிறது! அதுதான் அடிப்படைத் தேவை! அப்படியுமே சில விஷயங்களைத் நம்மால் தடுக்க முடியாது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் கார்த்திக், வேலையை விட்டுப் போகும்போது என்னால் தடுக்க முடியவில்லை. கார்த்திக், முத்துவை விட படித்தவன், திறமைசாலி. அவனால் முடிந்தவரை வெளிமார்க்கெட்டிங் வேலைகளைச் செய்து எனது கடையில் பெயரை மார்க்கெட் முழுவதும் அறியச் செய்ததிருந்தான். ஆனால், அவன் அவனது சொந்த வளர்ச்சிக்காக, நல்வாய்ப்புக் கிடைத்துப் போகும் போது வாழ்த்தி வழியனுப்பத்தானே வேண்டும், இல்லையா?!

friendly boss

*

சண்முகநாதன் அளவுக்கு கடினமாகவோ, அல்லது என்னளவுக்கு மென்மையாகவோ இருப்பதில் எது சரி? அல்லது சரியான நிலை என்பது எங்கள் இருவருக்கும் நடுவில் இருக்கிறதா? உங்கள் கருத்தை எழுதுங்கள். இன்னொரு டாபிக்கோடு அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கிறேன்.