ஒரு வணிகனின் கதை - நட்பு freepik
வணிகம்

ஒரு வணிகனின் கதை 2 | தொழிலும் நட்பும்! “கடன் கொடுப்பதால்தான் நல்ல நட்பு கிடைக்குமென இல்லை; ஆனால்...”

பெண்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதில் கவனம் செலுத்துவதை விடவும், தேவையற்ற விஷயங்களில்தான் அதிக கவனம் செலுத்துவர். ஒரு சேலையை எடுப்பதற்குள், ஓராயிரம் சேலைகளை கலைத்துப் போட்டுவிடுவார்கள். அவர்களின் ஸ்பெசிபிகேஷன்ஸ் மிக அதிகமாக இருக்கும்.

ஆதிமூலகிருஷ்ணன்

முன்குறிப்பு:

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை தொடர்

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முதல் அத்தியாத்தை இங்கே வாசிக்கலாம்:

இனி இரண்டாவது அத்தியாத்தை பார்ப்போம்

*

2. நட்பு

இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் கடைக்குள் நுழைந்தனர்.

பெண் வாடிக்கையாளர்களைக் கண்டாலே ஒரு சின்ன உதறல் எடுக்கும் எனக்கு. இந்த சமயங்களில் எல்லாம் என்னை விடவும், பெண்களை நம்பியே நடத்தியாக வேண்டிய, ஜவுளி மற்றும் தங்கநகைக் கடை போன்ற தொழில்காரர்களை நினைத்துக்கொள்வேன். கோவில் கட்டிக் கும்பிடலாம் அவர்களுக்கு!

பெண்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதில் கவனம் செலுத்துவதை விடவும், தேவையற்ற விஷயங்களில்தான் அதிக கவனம் செலுத்துவர். ஒரு சேலையை எடுப்பதற்குள், ஓராயிரம் சேலைகளை கலைத்துப் போட்டுவிடுவார்கள். அவர்களின் ஸ்பெசிபிகேஷன்ஸ் மிக அதிகமாக இருக்கும். கலர் பிடித்திருக்க வேண்டும், டிசைன் பிடித்திருக்க வேண்டும், அளவு பிடித்திருக்க வேண்டும், தரமானதாக இருக்க வேண்டும், விலையும் குறைவாக இருக்க வேண்டும்.

அந்தப் பெண் கேட்டார்,

“இதோ இந்தப் பூ போட்ட டிசைன் இருக்கில்ல, இந்த டிசைன்ல, அதோ இருக்கு பாருங்க டார்க் பிரவுன் கலர், அந்தக் கலர்ல டைல்ஸ் வேணும்”

நல்ல வேளை இதோடு விட்டார் இவர். முன்பொரு தடவை இன்னொரு பெண், இந்தக் கலரில், அந்த டிசைனில், வேறு சைஸில் வேண்டும் என்று கேட்டு, என்னை மயக்கமடைய வைத்த சம்பவமெல்லாம் நடந்திருந்த அனுபவத்தில் இப்போதெல்லாம் அத்தனை எளிதில் மயக்கம் போடாத அளவுக்கு எனக்கு தெம்பு கூடியிருந்தது.

“அப்படி இல்லை மேடம்!”

“கேட்டலாக் இருக்கா? அதைப் பார்த்து செலக்ட் பண்ற மாதிரி?”

“இல்லிங்க, அதெல்லாம் டைல்ஸுக்குக் வராது”

சிம்பிளாக முடித்தேன். இதனால், பக்கத்திலிருக்கும் கணவர் எனும் உயிரினத்தை நம்பி, அவர்கள் ’வேறு கடைக்குப் போய்ப் பார்க்கலாம்ங்க’ என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அப்படி எளிதாக விட்டுவிட முடியாது, இயன்ற வரை முயற்சிக்க வேண்டும்.

“டைல்ஸைப் பொறுத்தவரைக்கும், தயாரிக்கிற கம்பெனியில ஆயிரம் டிசைன் இருக்கும், ஒரு கம்பெனி மாதிரி இன்னொரு கம்பெனியில் இருக்காது. இப்ப எங்களை மாதிரி கடைக்காரங்களே அதிலிருந்து ஒரு லோடுக்கு 4 டிசைன்தான் செலக்ட் பண்ண முடியும். சிமெண்ட், கம்பி, செங்கல் மாதிரி டைல்ஸ் இங்க எங்கயும் பக்கத்துல தயாரிக்கிற பொருள் இல்லை. எல்லாமே வடக்க குஜராத்ல இருந்துதான் வருது. நாங்க மாசத்துக்கு ஒருக்க ஆர்டர் போட்டுதான் வரவைப்போம். அது கப்பல்ல தூத்துக்குடிக்கு வந்து எங்களுக்கு வந்து சேரவே 20- 25 நாளு ஆயிடும்.

சிட்டிக்கு பெரிய கடைக்குப் போனாலும் இதேதான் நிலைமை. இருக்குறதிலிருந்துதான் ஏதாவது ஒண்ணை செலக்ட் பண்ணவேண்டியிருக்கும். மத்தபடி உங்களுக்கு வண்டி செலவு அதிகமாகும். ரேட்டும் அதிகமா இருக்கும். நம்மாளுக கரெக்டா அளவும் சொல்லமாட்டானுக. ஒட்ட ஆரமிச்சப்புறம் ஒரு பாக்ஸ் குறையுதும்பான். அதை வாங்க திரும்ப சிட்டிக்கு ஓடணும். இவ்வளவு சிக்கல் இருக்கு”

இயன்றவரை அவரை டைவர்ட் செய்ய, தேவையற்ற தகவல்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்தப் பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கும் போதே கூட வந்த ஆண்கள் இருவரும் என் மேஜைக்கு எதிரே போடப்பட்டிருந்த சேரில் போய் உட்கார்ந்துகொண்டு கதை பேச ஆரம்பித்திருந்தார்கள். அந்தப் பெண் குழப்பத்திலிருந்தார். விடக்கூடாது.

“மேடம், உங்க வீடு நல்ல வெளிச்சமா, நிறைய ஜன்னலோட இருக்குமா? இல்ல, கொஞ்சம் டார்க்காதான் இருக்குமா?”

“ரெண்டு பக்கமும் நெருக்கமா வீடு இருக்குது. அவ்வளவு வெளிச்சம்னு சொல்ல முடியாது.”

“அப்ப, நீங்க பார்க்குற மாதிரி டார்க்கா பார்த்தா வீடு இன்னும் டார்க்காயிடும். நல்ல லைட் கலர் பார்த்தீங்கனு வைங்க, வெளிச்சத்தை கொஞ்சம் அதிகரிச்சுக் கொடுக்கும். இந்த லைட் கிரீன் பூ டிசைன் புடிச்சிருக்கானு பாருங்க”

அதை அவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே,

“தம்பி, இதோட ஜோடியா வரக்கூடிய தரை டைல்ஸை எடுத்து வந்து காமி”

கதிர் அதன் தரை டைலை எடுத்து வர, அதைக் கையில் கொடுத்து,

“தொட்டுப்பாருங்க, அதே டிசைன்தான். ஆனா அது மாதிரி வழுவழுப்பா இல்லாம எப்படி ரஃப்பா இருக்குதுனு. பாத்ரூம் தரை. தண்ணி படுற இடம், வழுக்கிவிடக்கூடாதில்லையா? அதான் கம்பெனியிலயே இப்படித் தயாரிக்கிறாங்க”

அவர் அதை தடவிப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, “வீட்டுக்குள் எந்த மாதிரி டைல்ஸ் வேண்டும்? மூன்று, நான்கு வகையாக டைல்ஸ் இருக்கிறது. அதோ இருக்கு பாருங்க” என்ற அழைத்துப் போனேன். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, “பூஜை ரூம் இருக்கா? அதுக்கு வேற மாதிரி போடணும். இதோ பாருங்க” என்று டைவர்ட் செய்ய முயன்றேன்.

“போஸ்டர் டைல்ஸ்னு நல்ல ஹைகுவாலிடி போட்டோ மாதிரி சாமி படங்கள் போட்ட டைல்ஸ் இருக்கு, பார்க்குறீங்களா?” என்று கேட்டேன். அடுத்த பரபரப்பான பதினைந்து நிமிடங்களில் எனது முயற்சியில் நான் ஓரளவு வெற்றி பெற்றிருந்தேன்.

அந்த ஆண்களுக்கு அருகில் வந்து, நான் எனது இருக்கையில் அமர, அவரும் இன்னொரு இருக்கையில் அமர்ந்தார்.

”செலக்ட் பண்ணியாச்சா?”

என்று அவரது கணவர் போலிருந்த நபர் அவரைப் பார்த்துக் கேட்க, நான் முந்திக்கொண்டு,

“எல்லாம் பண்ணியாச்சு சார், நீங்கள் அளவு சொல்லுங்க!”

”இல்லீங்க, பாத்ரூம் மட்டும் பார்க்கலை, நீங்க வந்து பாருங்க!”

என்று அவரை அழைத்தார். நான்,

“சார், பாத்ரூம் தவிர கிச்சன், ஹால், பெட்ரூம், முன்முகப்பு எல்லாம் பார்த்துட்டாங்க. பாத்ரூமுக்கு மட்டும் ஒரு கிரீன் கலர் பார்த்திருக்காங்க, நீங்களும் ஒரு வாட்டி பார்த்துட்டீங்கனா நல்லாருக்கும்!”

அட்லீஸ்ட், பாத்ரூமைத் தவறவிட்டாலும், மற்றதை உறுதி செய்யவேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைக்க, நான் இவற்றை அழுத்தமாகச் சொன்னேன். நல்லவேளையாக, ‘இந்த ஒரு ஐட்டத்துக்காக திருநெல்வேலிக்கு போய் ஏறி இறங்கச்சொல்றியா? இது நல்லாத்தான இருக்கு’ என்பது போல அவரை, அவரது கணவர் சமாளித்துவிட்டார்.

அளவுகள் சொல்லப்பட, எஸ்டிமேஷன் போடப்பட்டது. சற்றே பெரிய சேல்தான். மகிழ்ச்சி. இப்போது இறுதிக்கட்டம், பேரம் பேச அந்த மூன்றாவது நபர் வாயைத் திறந்தார்.

“சார், என்னை ஞாபகமிருக்கா?”

விழித்தேன்.

”அஞ்சாறு மாசத்துக்கு முன்னால என் வீட்டுக்கு டைல்ஸ் எடுக்க வந்தேனே?”

ம்ஹூம், ஞாபகமில்லை. எத்தனையோ பேர் வருகிறார்கள். சொல்லப்போனால், எனது ஞாபகசக்தி சற்றே குறைவுள்ளதுதான். சமயங்களில் எனது ரிப்பீட்டட் கஸ்டமர்களான காண்ட்ராக்டர்களின் முகங்களையும், பெயர்களையுமே மறந்துவிடுவதுண்டு. ஆளு காண்ட்ராக்டர்னு தெரியுது, எந்த ஊரு, என்ன பேருனுதான் தெரியல என்று விழிப்பதுண்டு. சமயங்களில் நைஸாக முத்துவின் காதைக் கடித்து அறிந்துகொள்வேன். அவர்கள் வந்து கூட இரண்டு மாதங்களாகியிருந்தால், அவனும் விழிப்பான். கடைசியில் எப்படியோ சமாளிப்போம்.

”சார், எம்பேரு ரவி, எனக்கு இடைகால், பத்தாயிரம் கொடுத்துட்டு நாப்பதாயிரத்துக்கு டைல்ஸ் வாங்கிட்டுப் போனேனே…”

பளிச்சென ஞாபகம் வந்துவிட்டது.

“சார், நீங்களா? சாரி சார் மறந்துட்டேன். அதான் முதல்லயே உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கேனு யோசிச்சேன். எப்படி சார் இருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன்!”

எழுந்து உண்மையான அன்போடு கைகுலுக்கினேன்.

ரவி ஆறு மாதங்களுக்கு முன்னால் டைல்ஸ் எடுக்க கடைக்கு வந்தபோது, ஆர்வமாகச் சில சந்தேகங்களைக் கேட்க, நானும் தெரிந்தவரை பதில் தந்ததில், அவருக்கு என்னைப் பிடித்துவிட்டது போல! அப்போது, தான் பார்த்துவிட்டுப் போகத்தான் வந்ததாகவும், ஒன்றாம் தேதி வருவதாகவும் சொல்லிவிட்டு, தனது போன் நம்பரைக் கொடுத்து, என்னுடையதை வாங்கிக்கொண்டு கிளம்பினார். யோசனையுடனே சென்றவர், பைக் வரை சென்று விட்டு மீண்டும் வந்து மிகுந்த தயக்கத்துடன் கேட்டார்.

‘இப்போது பணமில்லாமல் வேலை நிற்கிறது, உங்களுக்கு ஓகேன்னா இப்போதே டைல்ஸ் எடுத்துப் போய் வேலையைத் தொடர முடியும். இன்னும் பத்தே நாள்தான். பணத்தை, 1ம் தேதி சம்பளம் வந்தவுடன், அன்று மாலையே நேரில் வந்து தந்துவிடுவேன்’. பொதுவாக, ‘சாரி சார்’ என்று சொல்லிவிடுபவன், அன்று சொல்லவில்லை. தயங்கி நின்றேன். அவரது குரலில் உண்மை இருந்ததாகப் பட்டது. மேற்கொண்டு அவர் வற்புறுத்தவுமில்லை. தயங்கி நின்றவன் சட்டென தலையாட்டினேன். இடைகால் வீட்டு முகவரியைத் தந்துவிட்டு, டைல்களை எடுத்துக்கொண்டு போனார்.

வழக்கமாக கடன் வாங்கிச் சென்றவர்களுக்கு, சொன்ன தேதி தாண்டியவுடன்தான் போன் செய்வேன். கொடுத்த கடன்கள் சொன்ன தேதியிலிருந்து சில வாரங்கள், பல வாரங்கள், சில மாதங்கள், பல மாதங்கள் கழித்துத்தான் வந்திருக்கின்றன. ஒன்றாம் தேதி காலை பத்து மணிக்கெல்லாம் வந்துவிட்டார் ரவி.

பணத்தைக் கொடுத்துவிட்டு சிரித்தபடி நன்றி சொன்னார். ’சிங்கப்பூரிலிருந்து என் தம்பி இந்த வாரம் குடும்பத்தோட வர்றான், அவன் வர்றப்பவே கிரஹப்பிரவேசம் பண்ணிடணும்னு நினைச்சிகிட்டிருந்தேன். அதான் அன்னிக்கு கிரெடிட்டுக்கு கேட்டேன், இல்லைனா கேட்டிருக்கவே மாட்டேன். நீங்க மட்டும் தரலைன்னா வேலை முடிஞ்சிருக்காது. இப்ப முடிச்சி பால்காய்ச்சுக்கு நாளும் பார்த்தாச்சு, ரொம்ப நன்றி’ என்றார். அந்த நன்றிதான், இன்று இன்னொரு விற்பனையாக மலர்ந்திருக்கிறது. நல்ல வாடிக்கையாளர்கள்தான் நமது விளம்பரத் தூதர்கள் என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது.

இப்போது ரவி, அருகிலிருப்பவரைக் காட்டிச் சொன்னார்.

“சார், என் பிரண்டுதான், பக்கத்து வீடு. திருநெல்வேலிக்குப் போலாம்னு சொன்னவரை நான்தான் நம்ப கடையைப் பத்தி சொல்லி இங்க இழுத்துகிட்டு வந்தேன்”

அந்த ஜோடியும் தலையசைத்தது.

“ரொம்ப நன்றி சார், உங்களை மாதிரி ஆட்களாலதான் கடை இன்னமும் நடக்குது”

“இதிலென்ன இருக்கு சார், நீங்க ஒழுங்கான பொருளை, ஒழுங்கான விலைக்கு விற்குறீங்க! நல்ல பேர் கிடைக்குது, அவ்வளவுதான்!”

ஒரு சின்ன நிறைவு உள்ளுக்குள். அவர் கேட்பதற்கு முன்னாலேயே எஸ்டிமேஷன் ஸ்லிப்பை எடுத்து, ரெகுலர் வாடிக்கையாளர்களுக்குரிய 2% தள்ளுபடியை எழுதி மாற்றிக்கொடுத்தேன்.

“இந்தாங்க சார்!”

அந்த நண்பர், ரவியின் முகத்தைப் பார்த்தார்.

“நான் சொல்லலை, பேரமே பேச வேண்டாம். நல்ல தரமான பொருள், அவரே சரியான ரேட் போட்டுருவார், நம்பிக்கையா வாங்கலாம்!”

அவ்வளவுதான். வேறு பேச்சில்லை, பணம் கைமாறியது. பில்லைப் போடச்சொல்லிவிட்டு, வண்டிக்குப் போன் செய்யத் தொடங்கிவிட்டார்.

*

கடன் கொடுப்பதால்தான் நல்ல நட்பு கிடைக்குமென்பதில்லை. ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்படும் மதிப்பும், நம்பிக்கையும் அவற்றை ஏற்படுத்தும். தவிர்க்க இயலாத சமயங்களில் தரப்படும் கடன், அவர்களுக்கு நாம் செய்யும் உதவியாகக் கூட இருக்கலாம்! ரவியைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

மெனக்கெட்டு தனது நண்பரை கன்வின்ஸ் செய்து நம் கடைக்கு வரவைத்ததும் அல்லாமல், கையோடு அவரும் கடைக்கு வந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முன்னதாக பெண் வாடிக்கையாளர்களை பற்றிய என் எண்ணத்துக்கு உங்கள் கருத்தென்ன? பதில் தாருங்கள். இன்னொரு அத்தியாயத்தில் சந்திப்போம்!