இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.
உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!
தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!
வாசலில் ஒரு கார் வந்து நின்றது. காரை விட்டு இறங்காமலேயே அதன் டிரைவர் சீட்டிலிருந்த பெரியவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி கையைக் காண்பித்தார். தலை, மீசை, அடர்ந்த தாடி என அனைத்தும் முழு வெண்மையாக நரைத்திருந்தது. நானும் தயக்கத்தோடு கையைக் காண்பித்தேன். யாரென்று அடையாளம் தெரியவில்லை. டைல்ஸ் பார்க்க வந்தவராக இருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் இறங்கி உள்ளே வந்திருப்பார். இவர் யாராவது சொந்தக்காரராக இருக்கலாம். ஹாய் சொல்லுகிறார். அவர் அப்படியே கிளம்பாமல் நிற்பதைப் பார்த்தால் பக்கத்தில் போய் வணக்கம் வைத்து மரியாதை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? சரி, போய்ப்பார்ப்போம்! எழுந்து சென்றேன். அருகில் சென்றதும்தான் உணர்ந்தேன்.
வாய் நிறைய புன்னகையுடன்,
“என்னடா எப்படியிருக்கே?” என்றான்.
அது ராஜா. எனது பள்ளித்தோழன். இருவரும் இருவேறு துறைகள், இருவேறு நகரங்கள் என இடையே பல்லாண்டுகள் தொடர்பற்றுப் போயிருந்தாலும் அரிதிலும் அரிதாக சந்திப்பு, போன் உரையாடல் என நட்பு இன்றுவரை உயிர்ப்போடுதான் இருக்கிறது! அவனுக்கு முடி நரைத்துப் போய்விட்டது என்பதும் தெரியும், ஆனாலும் கடைசியாக பார்த்தபோது தாடியில்லை, இப்போது தாடியோடு முழுமையான நரைத்த தோற்றத்தில் அடையாளமே தெரியவில்லை. ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் சமாளித்தபடி,
“நல்லாருக்கேண்டா. உள்ள வர்றதுதானே?”
“வீட்டுக்குப் போயிட்டு அம்மாவைப் பார்த்துவிட்டு மதியம் வருகிறேன். இப்ப வந்தேன்னா உன்கிட்ட பேசிகிட்டு நேரம் போறதே தெரியாது, ஐ’வ் டு லீவ் டுநைட் இட்செல்ஃப்”
சென்னைவாசி. அம்மாவைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். மூன்று மாதத்துக்கு ஒருமுறை வருபவன்தான். மிக நீண்ட சேல்ஸ் அனுபவமுள்ளவன். மருத்துவ உபகரணங்கள் துறையில் பணி. எனது நண்பர்களுள் சேல்ஸ் துறையில் இத்தனை நீண்ட அனுபவமுள்ள, அத்துறையிலேயே பணியைத் தொடங்கி, அதிலேயே இருந்து பெரிய பதவிகளை அடைந்தவர்கள் வேறு யாருமில்லை. அவனிடம் ஒவ்வொருமுறை பேசும்போதும், எனக்குச் சில விஷயங்கள் கிடைக்கும்.
சொன்னபடி மதிய உணவுக்குப் பின்னர், மூன்று மணிக்கெல்லாம் வந்துவிட்டான். எனக்கு எதிராக போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்ததும் கேட்டேன்.
“அம்மா எப்படி இருக்காங்க?”
“நல்லாருக்காங்க!”
”என்ன தாடில்லாம்? தள்ளியிருந்து பார்க்கிறப்ப எனக்கே சட்டுனு அடையாளம் தெரியல!”
“சேல்ஸ்ல இருந்துகிட்டு எங்களுக்கு ஏன் தாடில்லாம்? ரொம்ப அதிசயமா கொஞ்ச நாளா ஆஃபீஸ்லயே ஒர்க்! இதோ இன்னும் ரெண்டு நாளில் டெல்லியில் ஒரு கிளையண்ட் மீட்டிங். நாளைக்கே எடுத்துடுவேன்”
“அதானே பார்த்தேன்!”
“பிசினஸ்லாம் எப்படிப் போயிகிட்டிருக்கு?!”
“ஏதோ போகுது. நெட் பிராஃபிட்டை பாக்கணுமே, ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்?! அதெல்லாம்தான் எந்த தூரத்துல இருக்குனே தெரியலை!”
இந்தப் புலம்பலைக் கொஞ்சம் குறைக்கணும். இவன் வேண்டியவன்தான், பரவாயில்லை!
“அட, அதுக்கெல்லாம் பொறுமை ரொம்ப வேணும். பிசினஸ்னா என்ன சும்மாவா?”
“இதையே எல்லாவனும் சொல்லுங்க, முட்டை போடுற கோழிக்குதானே தெரியும் வலியெல்லாம்!”
சிரித்தான். சின்னதாக ஜோக்கடித்தாலும் நன்றாக வாய்விட்டுச் சிரிப்பான்.
“வலியை விடு, சமயங்கள்ல போட்டியை பார்க்குறப்ப, சேல்ஸ் குறைகிறப்பவெல்லாம் ஒரு பயம் வரும் பாரு…”
மீண்டும் சிரித்தான்.
“அது நல்லதுதான். பயம் இருக்கணும். இங்கிலிஷ்ல ஒரு பிராவெர்ப் இருக்கு. -ஃபீல் தி ஃபியர், அண்ட் டு இட் எனிவே- (Feel the Fear, And do it Anyway - பயப்படு, ஆனாலும் செய்துவிடு) அதுதான் நம்மளை அலர்ட்டா வைச்சிருக்கும். சில ஜாப்பனீஸ் கான்செப்ட்ஸ்லாம் இருக்கு பிசினஸைப் பத்தி. சில புக்ஸ்லாம் சஜஸ்ட் பண்றேன். படி! இகிகாய்னு (Ikigai) ஒரு கான்செப்ட். தட் கிவ்ஸ் அஸ் அ ப்ரீஃப் ஐடியா அபவுட் தி வேல்யூ அண்ட் ஒர்த் ஆஃப் அவர் லைஃப்! (That gives a Brief Idea about the value and worth of our life)”
நீண்ட கால சேல்ஸ் அனுபவம் என்பதால், ராஜாவின் பேச்சில் நிறையவே ஆங்கிலம் இருக்கும். அவனையறியாமல் வந்துவிடும்.
“தெரியும், படிச்சிருக்கேன்… அதெல்லாம் இளைஞர்களுக்கு! வாழ்க்கையோ, தொழிலோ ஆரம்பிச்சு பாதியைக் கடந்து வந்தபிறகு என்னத்துக்கு அது?”
“அதென்னவோ சரிதான்…”
“ம்ம்ம்… அது மட்டுமில்ல, எஞ்சினியரிங் ஃபீல்டுக்குனே அவனுக எக்கச்சக்கமா கான்செப்ட் டெவலப் பண்ணி வைச்சிருக்கானுங்க. அதுல சிலது டம்மியா இருந்தாலும் சிலதுலாம் ஒர்த்துதான். ஃபேக்டரீஸ்ல அதெல்லாம் பாலோ பண்ணச்சொல்லி உசிரை வாங்குவானுங்க. கெய்ஸன், போகேயோகே, 5எஸ், லீன் மேனுபாக்சரிங். எல்லாம் படிச்சிருக்கேன். சிலது ஃபாலோவும் பண்ணிருக்கோம்”
“ஆங், நீ கோர் புரடக்ஷன் ஆளில்ல, அதான் இதெல்லாம் தெரிஞ்சிருக்கும். கெய்ஸன்லாம் ஒரு எக்ஸ்லண்ட் கான்செப்ட்”
“நிச்சயமா. எனக்கு லீனோட அடிப்படை நோக்கம் ரொம்பப் பிடிக்கும்”
”அவ்வளவு தூரம் எதுக்கு போகணும்? திருக்குறள்லயே எக்கச்சக்கமா கான்செப்ட்ஸ் இருக்குது, நமக்குதான் தெரியறதில்ல”
“உனக்குனு சொல்லு” சிரிக்காமல் சொன்னேன்.
திரும்பவும், சத்தமாக சிரித்தான்.
“அப்கோர்ஸ் எஸ்! உனக்குதான் தமிழலயும் ரொம்ப ஆர்வமுண்டுல்ல, மறந்துட்டேன், ஐ அக்ரீ! நான்லாம் இப்பதான்ப்பா குறள் படிக்கிறேன். ஒரு குறள் இருக்கு இவனே...
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்!”
உதாரணமும் மெடிகல் துறை சார்ந்தே வருகிறது. ஸ்கேன் கருவியை விற்பதற்காக எத்தனை டாக்டரிடம் இந்தக் குறளை சொல்லியிருப்பானோ! மனப்பாடமாக வருகிறது.
“அதுக்கு அர்த்தம்… ஒரு நோயாளியோட நோயின் தன்மை, வயது, அதைப்போக்க… உனக்குப் போய் சொல்றேன் பாரு!”
“பரவால்ல சொல்லு. குறளுக்கெல்லாம் ஆளாளுக்கு சின்னச்சின்னதா இண்டர்ப்ரட்டேஷன் வேறுபடும். கேட்டுக்குறது நல்லதுதான்”
“யா, நோயின் தன்மை, நோயாளியின் வயது, அதைக் குணமாக்கும் காலம் எல்லாத்தையும் கன்சிடர் பண்ணித்தான் ஒரு டாக்டர், கற்றான்… நல்லாயிருக்குல்ல இந்த வார்த்தை ’கற்றான்’, அந்தக் கற்றான் அவனுக்கு ட்ரீமெண்ட் கொடுக்கணும்கிறார். இட்ஸ் நாட் ஒன்லி ஃபார் மெடிகல் ஃபீல்டு. உன் பிரச்சினையைச் சொன்னதும் எனக்கு ஏன் இது ஞாபகம் வந்துச்சு? உன் பிசினஸ் பூம் ஆகுறதுக்கு தேவைப்படுற காலம், அது ஆரம்பித்து எவ்வளவு நாட்களாகிறது, உன் பிரச்சினையின் தன்மை, அதாவது சேல்ஸுல நீ எதிர்பார்க்கிறது என்ன? நடக்கிறது என்ன? இதெல்லாத்தையும் கன்சிடர் பண்ணித்தான் நீ செயல்படணும். பொருந்துதில்ல?”
“சரிதான்!”
“குறிப்பா, பிணியளவும் காலமும்… அதுக்குதான் சொல்ல வந்தேன், அந்தக் காத்திருக்கும் காலமும் ரொம்ப முக்கியம்!”
“அதுசரி, ஆனா அந்தக் காலத்தை, எவ்வளவு காலம்னு யாரு டிஃபைன் பண்ணுறது? இப்ப நாலு வருஷமாச்சு. அது ரெண்டு வருஷமாயிருந்து, நான் அதைத் தாண்டியும் நொண்டியடிச்சிகிட்டு இருக்கிறனானு எப்படித் தெரியும்?”
சும்மா போட்டு வாங்குறதுக்காகக் கேட்டேன். அதுக்கும் சத்தமாக சிரித்தான்.
“அதுக்குதான், பர்ஃபாமென்ஸ் அனலிஸிஸ் பண்ணிப் பார்க்கணும்ங்கிறது. எந்த மார்க்கெட்? எந்த பொருள்? எங்க ஆரம்பிச்சே? எப்படி இருக்கு டிரெண்ட்? இப்ப எங்க இருக்கே? என்ன இனிஷியல் பிளான்? ஸோஃபார் என்ன அச்சீவ்மெண்ட்? இதையெல்லாம் வைச்சித்தான் அதை நாம முடிவு பண்ணமுடியும்! ஆம் ஐ கரெக்ட்?”
“குட்!”
“உன்னை மாதிரி ஆளுங்களை பிசினஸ்ல பார்க்குறப்ப, நல்லாயிருக்குடா. எனக்கும் ஆசைதான் ஏதாவது ஓனா பண்ணனும்னு. ஆனா முடியல. இங்க லோக்கல் மார்க்கெட்ல எல்லாம் டிரடிஷனல் ஆளுங்கதானே இருப்பாங்க. உன்னை மாதிரி படிச்ச ஆளுங்க உள்ள வர்றப்பதான் மார்க்கெட்டோட கலரே மாறும். கஸ்டமர்ஸ் வுட் கெட் குட் காம்பெடிடிவ் அண்ட் நைஸ் பிசினஸ் எக்ஸ்பீரியன்ஸ்!”
இவன் இப்படித்தான். பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென ஏதாவது காரணம் கண்டுபிடித்து புகழ ஆரம்பித்துவிடுவான். இது கூட அவனது பணியனுபவத்தால் பழக்கப்பட்டதாக இருக்கலாம்! இத்தனை ஆண்டுகளாக எத்தனைக் கஸ்டமர்களோடு பேசியிருப்பான்? அதுவும் லட்சக்கணக்கான மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள். அதை விற்க வேண்டுமானால் எத்தனை டாக்டர்களிடம், மருத்துவமனை உரிமையாளர்களிடம் எத்தனை முறை பேச வேண்டியிருந்திருக்கும்? டெக்னிகலாக, கமர்ஷியலாக பேசிக்கொண்டிருக்கும்போதே, போரடிக்காமலிருக்க எவ்வளவு ஐஸ் வைக்க வேண்டியது வந்திருக்கும்?
“ம்க்கும்!”
“ஏண்டா சலிச்சிக்குற? இப்பல்லாம் சேல்ஸ் அண்ட் சர்வீஸ்ல கன்ஸ்யூமரை எங்க மதிக்குறானுக? போன வாரம் ஏஸி ரிப்பேர்னு சர்வீஸ்னு புக் பண்ணினேன். இரண்டு வாட்டி வந்துட்டுப் போயிட்டானுக. ஆனா, இன்னும் பிரச்சினை சரியாகல! சிட்டியிலயே அப்படி படுத்துறானுகன்னா இங்க வில்லேஜ்லல்லாம் எந்தளவுக்கு இருக்கும்?
போன வாட்டி வந்தப்ப எங்கம்மா ஒரு கம்ப்ளைண்ட் சொன்னாங்க, ஹால்ல இருக்குற ஃபேன் ஓடலைன்னு. இத்தனைக்கும் அடுத்தாளு கூட இல்ல, எலக்ட்ரீஷியன் எங்க சொந்தக்காரன்தான். நேர்ல வரவைச்சி பார்க்கச் சொன்னேன். இந்தா சரி பண்ணிக் குடுத்துடுறேன்த்தான்னான். மூணு மாசமாச்சு, இன்னும் அந்த ஃபேன் அப்படியேதான் கிடக்குது. ஒருவேளை நீ அந்த சர்வீஸ் பண்ணினா இப்படிப் பண்ணுவியா என்ன? மாட்டல்ல! அது மாதிரி கேர்தானே இந்தத் தொழில்லயும் உன்னோட கஸ்டமர்ஸுக்குக் குடுப்பே? கொஞ்சமாச்சும் சைண்டிஃபிக் அண்ட் மாடர்ன் அப்ரோச் இருக்கும்ல?”
“நிச்சயமா!”
“யா, தட் வில் மேக் யூ சம்திங் டிஃபரண்ட் ஃபிரம் அதர்ஸ் (That will make you something different from others) ! காரணமில்லாம பாராட்டல!”
பாராட்டைக்கூட ஐஸ் வைக்கிறதுக்காக சொல்லவில்லை என்றும் நிரூபித்துவிட்டான்.
“சரி, அது கிடக்கட்டும், எனக்கு ஏதாவது சேல்ஸ் டிப்ஸ் கொடு. நானே உன்னை போன்ல கூப்பிட்டுக் கேட்கணும்னு நினைச்சிகிட்டிருந்தேன். இங்க எனக்கு வேற எந்தப் பிரச்சினையுமில்லை, சேல்ஸைத் தவிர ! சேல்ஸ்தான் பிக்கப்பே ஆகமாட்டேங்குது!”
“நாலு வருஷமாப் பண்ற உனக்கு என்னத்தை நான் சொல்றது? உன்னோட பிராடக்டப் பத்தி வேற எனக்கு ஒண்ணும் தெரியாது. சரி பொதுவான விஷயங்களை சொல்றேன்.”
அப்புறம் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டான். குறிப்பாக அவன் பேசிய விஷயங்கள் பிராடக்ட் பற்றிய அறிவு, கன்ஸ்யூமருடைய உரிமை இந்த இரண்டையும் பற்றித்தான் சுற்றிச்சுற்றி வந்தது.
“முதல்ல எக்ஸ்டர்னல் பேக்டர்ஸ்! விளம்பரம், ஆஃபர்ஸ், காம்பெடிடிவ் பிரைஸ், கமிஷன்ஸ், பிராடக்ட் வெரைட்டீஸ்!! இதெல்லாமே ஏற்கனவே நீ பண்ணிகிட்டுதான் இருப்பே, ஆனாலும், அதில் எந்த மாதிரி பர்ஃபக்ஷனை பாலோ பண்ணனும்னு நீதான் முடிவு பண்ணிக்கணும். அதுல சரி, தப்புனு எதுவுமில்லை!”
நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான்.
“இரண்டாவது எதிகல் ஃபேக்டர்ஸ்! இதுதான் ரொம்ப முக்கியமானது. கன்ஸ்யூமரின் உரிமையை முழுதுமாக புரிந்துகொள்வதும், மதிப்பதும்தான் ஒரு விற்பனையாளனின் முதல் தேவை. ரைட் குவாலிடி பிராடக்ட்ஸ் (Right Quality Practice), வேல்யூ ஃபார் மணி (Value for money), ரைட் கமிட்மெண்ட்ஸ் (Right Commitments), ரெஸ்பெக்ட் தி கஸ்டமர் நீட்ஸ் (Respect for the customer needs) ! இதெல்லாமே இருக்கணும். பிசினஸ் எதிக்ஸ் இஸ் ஆல்! வாய்ஜாலத்தால் பொய்யான தகவல்களைச் சொல்லி, தவறான கமிட்மெண்டுகளைக் கொடுத்து, ஒரு தரமற்ற சேவையை, பொருளை, அதிக விலைக்கு விற்றுவிடமுடியும்தான். ஆனால், அட் ஒன் பாயிண்ட் ஆஃப் டைம், வி வில்பி த்ரோன் அவுட் ஆஃப் தி மார்க்கெட் அஸ் அ பீஸ் ஆஃப் கார்பேஜ்! (At One point of time, We will thrown out of the market as a piece of Garbage - ஒருகட்டத்தில் நாம் இந்த சந்தையைவிட்டு ஒரு குப்பையை போல எறிந்துவிடப்படுவோம்) எதிக்ஸ்! அதென்னது எதிக்ஸுக்கு தமிழ்ல, நெறி… நெறிமுறைகளா?”
“ஆங், அறம்! சேல்ஸை அதிகரிக்கவும் அதுதான் வழி!”
சிரித்தான்!
அறம்! அறத்தோடு நடந்துகொள்ளவில்லை எனில் கடவுள் நம்மை தண்டிப்பார், நமக்கு நரகம் வாய்க்கும் என்பது போன்ற நம்பிக்கையல்ல, நாம் வலியுறுத்துவது. இந்த உலகமே ரொம்பச் சின்னது. அதில், நமது சந்தை ஒரு துளிதான். ஒரு வாடிக்கையாளருக்கு நாம் விலையிலோ, தரத்திலோ, சேவையிலோ தவறிழைத்தால், நமது சிறப்பம்சங்கள் கூட அந்த அளவு வேகத்தில் பரவாது, ஆனால் தவறுகள் சந்தை முழுதும் ஒரு நெருப்பைப் போல பக்கென பற்றிக்கொள்ளும். நமது சோலி முடிஞ்ச்! உங்கள் கருத்தைக் கூறுங்கள். அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கிறேன்.