ஒரு வணிகனின் கதை 16 facebook
வணிகம்

ஒரு வணிகனின் கதை 16 | ரகசியம் | தொழிலில் தரவுகளின் முக்கியத்துவம் என்ன?

ஒரு வணிகனின் கதை தொடரின் 16வது அத்தியாயமான இதில், தொழிலில் தரவுகளை சேகரித்து வைத்தல் எவ்வளவு முக்கியத்துவம் என்பது குறித்த விழிப்புணர்வை எடுத்துரைக்கிறது.

ஆதிமூலகிருஷ்ணன்

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 16 - தரவு

விவேக், போன் செய்திருந்தார். நான் அகவுண்ட் வைத்திருக்கும் வங்கியின்மேலாளர்.

“சார், கடந்த வருஷத்துக்கான பர்ச்சேஸ் பில்ஸ், சேல் ரிப்போர்ட், பி&எல், ஜிஎஸ்டி சப்மிஷன்ஸ், அப்புறம் ஐடி ரிட்டர்ன் பேப்பர்ஸ், அடுத்த வருஷத்துக்கான ப்ரொபோஸல், நீங்க ப்ளெட்ஜ் பண்ணியிருக்கிற இடத்துக்கான பஞ்சாயத்து ரசீது எல்லாத்தையும் எடுத்துகிட்டு வாங்க!”

“என்ன சார், மேற்கொண்டு ஏதாச்சும் லோன் தரப்போறீங்களா?” பொதுவாக நெருங்கிய வட்டம் தவிர்த்து இப்படி யாரிடமும் ஜோக்கடிப்பதில்லை என்றாலும், விவேக் சற்றே இயல்பானவர் என்பதால் கொஞ்சம் உரிமையிருந்தது. லேசாக சிரித்துவிட்டு.

”தந்துட்டாப் போச்சு!! அதுக்கு முன்னால போன வருசம் பண்ணின லோன் அகவுண்டை ரின்யூவல் பண்ணனுமா வேண்டாமா?”

“ரின்யூவலா?”

“ஆமா சார், வருஷா வருஷம் ரின்யூவல் பண்ணனும்!”

“இது வேறயா?”

“எப்ப வர்றீங்க?”

“இன்னும் இரண்டு நாட்களில் வர்றேன் சார்!”

அதற்குள்ளாக ஒரு வருடம் ஓடிப்போய்விட்டதா? அவர் கேட்டுக்கொண்ட அறிக்கைகள், தகவல்களில் எதெல்லாம் தயாராக இருக்கிறது, எவற்றைத் தயார் செய்ய வேண்டும் என்பதை ஆராய ஆரம்பித்தேன். இன்றைக்கு வேலை இதோடுதான் போகப்போகிறதா?

ஃபைல்களை எடுத்து மேஜை மீது வைத்துக்கொண்டிருந்த போதுதான் விஜி தனது பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே வந்தான். கையிலே சாரு.

“வா வா தம்பி! சித்தி எப்படி இருக்காங்க?” என்றபடியே சாரு பாப்பாவைக் கையில் வாங்கினேன்.

”எல்லாரும் நல்லாருக்காங்கண்ணே!”

“என்ன பாப்பாவை மட்டும் தனியா கூட்டிகிட்டு வந்திருக்கே? சுந்தரை எங்க?

ஒய்ஃபை கூட்டிகிட்டு வரலையா?”

“மகேஷ் கூட ராணியும், சுந்தரும் கார்ல போயிட்டாங்க. இது என்கூட

பைக்குலதான் வருவேன்னு அடம் புடிச்சுது. அதான் நாங்க ரெண்டு பேரும் பைக்ல வர்றோம்”

“உங்களுக்கு பைக்குலதான் வரணுமோ? கார்ல போக வேண்டியதுதானே?” என்று சாருவோடு பொய்க்கோபத்தோடு சண்டைக்குப் போகவும், கெக்கெபிக்கேவென சிரித்தாள்.

“ஆமா, அன்னிக்கு வீட்டுக்கு வந்து புள்ளைய சத்தம் போட்டீங்களாமே, பாப்பா சொன்னாளே, அடிச்சிப்புடுவேன்னு சொன்னீங்களாமே…”

“ஐய்யய்யோ சொல்லிட்டாளா?” என்று பயந்ததுக்கும் சாரு சிரித்தாள்.

“ஆமா, பிங்க் ஷர்ட் போட்டுட்டு வந்து பிள்ளைய திட்டியிருக்கீங்க?”

“அதென்ன பிங்க் ஷர்ட்?”

“ஆமா, மற்ற ஷர்ட் போட்டுட்டு வந்தப்போ எல்லாம் திட்டாம, அவ கூட விளையாடியிருக்கீங்களாம், பிங்க் ஷர்ட் போட்டு வந்த அன்னிக்குதான் திட்டினீங்களாம், கரெக்டா சொன்னாளே?”

“இனிமே பிங்க் ஷர்ட் போட்டு வரக்கூடாது!” கையிலிருந்த சாரு மெதுவாகச் சொன்னாள் மழலை மாறாத குரலில்!

“அடேங்கப்பா, சரி தங்கம்!” என்று கொஞ்சிவிட்டு இறக்கிவிட்டேன்.

மேஜை மீது கிடந்த ஃபைலைப் பார்த்தபடியே விஜி கேட்டான்.

“என்னண்ணே பண்ணிகிட்டிருக்கீங்க?”

“பேங்க்ல லோன் பேப்பர்ஸ் எல்லாம் சப்மிட் பண்ணனும். அதுக்குள்ள ஒரு வருஷமாச்சு, ரின்யூவல் பண்ணனுமாம்! அதான் ரெடி பண்ணிகிட்டிருந்தேன்”

ஃபைலைப் புரட்டியபடியே, “இதெல்லாம் நீங்கதானே பண்றீங்க?”

“ரெண்டாவது வருஷம் நீ சொல்லிக் கொடுத்ததிலிருந்து நான்தான்டா பண்ணிகிட்டிருக்கேன். அவங்க தேவையே இல்லாம டேட்டாவை குக்கப் பண்றாங்க, அதுக்கு நம்மோட நிஜ டேட்டாவே பெட்டரா இருக்குது. உனக்கே தெரியுமே!”

“ஜிஎஸ்டி?”

”அதுவும் நான்தான் பண்றேன்.”

“அதுல ஒண்ணும் இஷ்யூ இல்லையே?”

”ஒண்ணுமில்ல, போர்டலை முன்னைவிட இப்ப ரொம்ப சிம்பிளாக்கிட்டாங்க.”

விஜி எனது சித்தி பையன். எம்காம் படித்தவன். திருநெல்வேலியிலுள்ள ஒரு பேப்பர் மில்லின் தலைமை அலுவலகத்தில் அக்கவுண்டிங் மேனேஜராக இருக்கிறான்.

“இதெல்லாம் பார்க்க ஆள் வேணுமா? வேணும்னா, சொல்லுங்க!”

“ஆமா, இருக்குற மூணு பேருக்கே சம்பளம் குடுக்க முடியல. இதுல அக்கவுண்டண்ட் ஒருத்தர்தான் எனக்குக் குறைச்சல்! நாம போடறதே மாசத்துக்கு பத்திருபது B2C (Business to Customers) பில்ஸ்தான். இதுக்கு தனியா ஒரு ஆள் வேறயா?”

சிரித்தபடி, “B2B (Business to Business) எதுவும் வர்றதில்லையா?”

“மூணு மாசத்துக்கு ஒரு தடவை உங்க மில்லுக்கு ஏதாச்சும் பார்க்கிங் டைல்ஸ், டாய்லெட் கோப்பைனு வருவாங்க, அது மட்டும்தான் B2B!”

”இல்ல, இங்க யாராச்சும் பெரிய காண்ட்ராக்டருக்குக் கூடவா பில்லு தேவைப்படாது?”

“யாராச்சும் ரேரா ஒண்ணு ரெண்டு பேர் கேப்பாங்க! அவ்வளவுதான். பில்லு வேணும்னா முதல்ல ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணியிருக்கணுமே?” சிரித்தான்.

”இப்பத்திக்கு மார்க்கெடிங், சேல்ஸுக்குத்தான் ஆள் வேணும். அதுக்கு யாராச்சும் ஆளிருந்தா சொல்லு. அக்கவுண்டெண்ட் எல்லாம் இன்னும் ரெண்டு, மூணு வருஷம் போகட்டும். B2B பில்ஸ், வேற வேற பிராடக்ட் ரேஞ்ச், பெரிய லெவல்ல சேல்ஸ் இதெல்லாம் பண்ணினப்பிறகு அகவுண்டண்ட் வைச்சிக்கலாம்!”

“கரெக்ட்தான்! நாங்க, எங்க சப்ளையர்ஸோட படுற பாட்டுனாலத்தான் கேட்டேன். ஒருத்தனும் ஒழுங்கா, ஆடிட்டிங் ஒர்க்ஸ், ஜிஎஸ்டி ஃபைலிங், ஐடி ஃபைலிங் இதெல்லாம் பண்றானுகளானே தெரியல. எதைக் கேட்டாலும் உழப்புறானுங்க. ஆடிட்டரை கேக்கணும்பான் ஒருத்தன். ஆள் அனுப்பி வைக்கிறேன்பான் ஒருத்தன். இந்த மேஜரான வேலையையே ஒழுங்கா பார்க்க மாட்டேங்கிறாங்களே, ஒரு கம்பெனி, ஒரு டிரேடிங்னா இன்னும் எவ்வளவு வேலை இருக்கும்? டேட்டா எண்ட்ரி, சேல் அனாலிசிஸ், எக்ஸ்பென்ஸஸ் மேனேஜ்மெண்ட், கேஷ்ஃப்ளோனு எவ்வளவு விஷயங்கள் பார்க்க வேண்டியிருக்கும். அதெல்லாம் எப்படி பண்ணுவாங்க? அதெல்லாம் பண்ணாம எப்படி பிசினஸ் பண்றாங்கனு எனக்கு சில சமயங்கள்ல ஆச்சரியமா இருக்கும். டேட்டா பேஸ்டு முடிவுகள் எடுக்கறது எவ்வளவுமுக்கியம் இல்லையா?”

“அதெல்லாம் ஓல்டுஸ்கூல் மாடல்ஸ்! இண்ட்யூஷன்லயே போவாங்க! பாதி சரியா வந்துடும்!”

“அதெல்லாம் அந்தக் காலத்துக்கு சரிண்ணே, இப்பவும் இண்ட்யூஷன்லயே தொழில் நடத்தமுடியுமா என்ன?”

“கஷ்டம்தான்! அதான் சில பழைய ஆட்களால இன்னிக்குத் தாக்குப் பிடிக்க முடியாம போறதுக்கு காரணம். போன வாட்டி யூனியன் மீட்டிங்ல ஒரு பெரியவரை பார்த்தேன். பக்கத்து சேர்ல போனை நோண்டிகிட்டு இருந்தப்போ, அவர் வயசுக்கு இன்னொருத்தர் கூட பேசிகிட்டிருந்ததைக் கேட்டேன். ஒரு பைசா கையில இல்லாம, ஒரு பாத்திரக்கடையில சேர்ந்து வேலை பார்த்து, பிறகு 1970ல அம்பாசமுத்திரத்துல சின்னதா தொழிலை ஆரம்பிச்சி வளர்ந்திருக்கார்.

லட்சங்கள்ல சம்பாதிக்கிற அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சிதான். அம்பை, சேர்மாதேவினு பல இடங்கள்ல இடம் வாங்கிப் போட்டிருக்கார். ஆனா 2000க்கு அப்புறம் தொழில் கொஞ்ச கொஞ்சமா டவுன் ஆகிட்டே வந்திருக்கு. அப்புறமா, பையன் நான் பார்த்துக்குறேனு சொல்லவும், வேற வழியில்லாம விருப்பமேயில்லாம அவன் கையில கொடுத்துருக்காரு. 20 வருஷத்துல அம்பை, கடையம், ஆலங்குளம், தென்காசி, பேட்டை, திருநெல்வேலினு 10 இடங்கள்ல பிராஞ்ச் ஓபன் பண்ணி பட்டையை கிளப்பிகிட்டிருக்கான் இன்னிக்கு.”

“பையனுக்கு தரமாட்டேனு அவரே பண்ணியிருந்தா என்னாயிருக்கும்?”

“கடை இன்னிக்கு இருந்திருக்குமாங்குறதே சந்தேகம்தான்! அதுக்கு அவன் எவ்வளவு வேலை பார்த்திருப்பான்? எவ்வளவு டேட்டா அனலைஸ் பண்ணியிருப்பான்? மாடர்ன் திங்கிங், ரிஸ்க் அனலிஸிஸ், தைரியமான அப்ரோச்னு எவ்வளவு விஷயங்கள் இருக்கு?”

“அதைத்தான் நானும் சொல்ல வர்றேன்! ஒரு சின்ன பெட்டிக்கடையாக இருந்தாலும், மார்க்கெட் ஸ்டடி பண்றதும், டேட்டா அனலைஸ் பண்றதும் ரொம்ப முக்கியம்!”

“இங்கனக்குள்ள எத்தனை கடை ஆரம்பிச்சி ஆறு மாசம், ஒரு வருஷத்துல மூடியிருப்பானுக தெரியுமா? அங்க பாரு, அந்த ஒர்க்‌ஷாப்புக்கு அடுத்த கடை தெரியுதா?”

“ம்ம்.. ஒரு ஸ்டிக்கர் கடை!”

“அதுல நம்ம கடை ஆரம்பிச்சி, இந்த நாலு வருஷத்துல எத்தனை கடைகள் வந்திருக்கும் தெரியுமா? புரோட்டா கடை மட்டுமே மூணு பேர் வைச்சிட்டுத் தூக்கியிருக்கான்! ஒருத்தன் போடுவான், ரெண்டு மாசத்துல ஓடுவான், பின்னாலயே இன்னொருத்தன் வந்து போடுவான். யாருக்குமே பிக்கப் ஆகலை”

அதற்குள்ளாகவே சாருவுக்குப் போரடித்துவிட்டது. அவனை நெருங்கி, ‘போலாம்ப்பா’ என்றாள்.

“போலாம், போலாம்!” என்றபடி கையில் தூக்கினான்.

“இல்லைண்ணே, இந்த மாதிரி வேலையெல்லாம் தனி ஆள்கிட்ட தள்ளிட்டா நீங்க கொஞ்சம் மார்க்கெட்டிங்ல கவனம் செலுத்தலாம்ல. அதுக்காகச் சொல்ல வந்தேன்”

“நீ சொல்றது சரிதான். ஆனா இந்த அக்கவுண்டிங், ஜிஎஸ்டி ஃபைலிங் வேலையெல்லாம் மாசத்துக்கு ஒரு நாள், அதிகபட்சம் ரெண்டு நாள் வேலைதான். மார்க்கெட்டிங் பண்றதா இருந்தாக்கூட அதிலும் இன்வெஸ்ட்மெண்ட், பணம் சார்ந்த பிரச்சினை இருக்கு. நமக்கு இருக்குற கெப்பாசிடிக்கு தகுந்த வேலைகளைப் பார்த்துகிட்டுதான் இருக்கேன். அதை மீறி பல நாளு என்ன வேலையிருக்கு எனக்கு? பாதி நாளு, யூட்யூப் பார்க்குறதா? ஓடிடி பார்க்குறதானுதான் போகுது”

“அப்ப சரி, நேரம் வரட்டும்! வேற ஏதாச்சும் சந்தேகம்னா போன் பண்ணுங்க!”

“சந்தேகம்ன உடனேதான்டா ஞாபகம் வருது… எக்ஸெல்ல ஒரு டவுட்டு. நேத்திக்கு போன்லேருந்து காண்டாக்ட்ஸ் எல்லாம் எக்ஸெல் ஷீட்ல டவுன்லோடு பண்ணினேன். அதுல பேரு, ஊர், நம்பர் எல்லாம் ஒரே காலம்ல வந்துடுச்சு. அதை பிரிக்கணும்னு டிரை பண்ணினேன். வெர்டிகல் லுக்கப்னு ஏதோ பண்ணுவாங்களே, நானும் பண்ணிருக்கேன், இப்ப மறந்துடுச்சு. இந்தா அது எப்படினு பண்ணிக்குடு!” என்றபடி லேப்டாப்பை ஆன் செய்து அவன் பக்கம் திருப்பினேன்.

கையில் சாருவை வைத்துக்கொண்டே ஒரு நிமிடத்தில் செய்து கொடுத்துவிட்டான்.

எனக்கும் பிடிபட்டுவிட்டது. “இது மாதிரி எக்ஸெல் பார்முலாஸ், ஷார்ட் கட்ஸ் எல்லாம் ஒரு ஃபைல்ல கிடக்குதுண்ணே, ஆபீஸ்க்குப் போய் அனுப்பறேன். வைச்சிக்குங்க. தேவைப்படும்!”

”சரிப்பா!”

“அப்ப, கிளம்பறேண்ணே, இன்னிக்கும் நாளைக்கும் இங்கதான் இருப்பேன். வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க, சுந்தர் தேடுவான்”

“நீ போ, பின்னாடியே வர்றேன்!”

ஒரு தொழிலை நடத்துவோருக்கு இருக்கவேண்டிய குறைந்த பட்சமான அக்கவுண்டிங் மற்றும் டேட்டா அனலிசிஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் குறைந்த பட்சமாகவேனும் இருக்க வேண்டிய கணினி அறிவு மற்றும் அனுபவம்- இதன் முக்கியத்துவத்துக்காகவே இந்தப் பகுதி! இதில்- பி&எல், டேட்டா அனாலிசிஸ், எக்ஸெல் ஷீட், ஐடி ஃபைலிங், கேஷ்ஃப்ளோ… இதெல்லாம் விளக்கப்படாமல் ஒரு அறிமுகமாக மட்டுமே விடப்பட்டிருப்பதற்குக் காரணம், அதன் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காண்பிப்பதற்காக மட்டுமே! பலருக்கும் இன்றைய சூழலில் இதுவொரு மிக எளிமையான விஷயமாகத்தான் இருக்கும், ஆனாலும் அதை உங்கள் செக்லிஸ்டில் உறுதி செய்துகொள்ளுங்கள்!

உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்,

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கிறேன்.