வணிகம்

தீப்பிடிக்கும் சம்பவம் - 3,000 மின் ஸ்கூட்டர்களை சரிசெய்து தர ஒகினாவா நிறுவனம் முடிவு

தீப்பிடிக்கும் சம்பவம் - 3,000 மின் ஸ்கூட்டர்களை சரிசெய்து தர ஒகினாவா நிறுவனம் முடிவு

ஜா. ஜாக்சன் சிங்

ஒகினாவா நிறுவனம் தான் விற்பனை செய்த 3,000-க்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்று சரிசெய்து தர உள்ளதாக தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. வேலூர் அருகே இரு வாரங்களுக்கு முன் ஒகினாவா மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி தீப்பிடித்து தந்தையும் மகளும் இறந்தனர். இதையடுத்து, இந்நிகழ்வு குறித்து ஒகினாவா நிறுவனம் ஆய்வுகளை நடத்தியது. இதனைத்தொடர்ந்து, 3 ஆயிரத்து 215 ஸ்கூட்டர்களை திரும்பப் பெற்று சரி செய்து தரப் போவதாக ஒகினாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகனத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதை இலவசமாக சரிசெய்து தரப் போவதாக ஒகினாவா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக ஒகினாவா தெரிவித்துள்ளது. முன்னதாக, தீப்பிடித்த புகாருக்கு ஆளான மின்சார வாகனங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகுப்பில் உற்பத்தி செய்யப்பட்டவற்றை திரும்பப் பெற்று சரி செய்து தருமாறு நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.