இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் திட்டமில்லை என புதிதாக நியமனம் செயய்ப்பட்ட ஹோண்டா தலைமைச் செயல் அதிகாரி டகுயா சுமரா தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் கார் சந்தை போட்டி நிறைந்ததாக மாறிவருகிறது. ஏற்கெனவே ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்டு ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் அடுத்து வெளியேறப்போகும் நிறுவனம் ஹோண்டா என்பதே ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் அந்த துறை பத்திரிகையாளர்களின் கணிப்பாக இருந்தது.
2015-ம் ஆண்டு மொத்த கார் விற்பனையில் 7 சதவீதத்துக்கும் மேல் ஹோண்டாவின் பங்கு இருந்தது. ஆனால் தற்போது 3 சதவீதத்துக்கு கீழ் குறைந்துவிட்டதால் அடுத்து இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு நொய்டாவில் உள்ள முக்கியமான ஆலையின் உற்பத்தியை நிறுத்தியது. தவிர, சிஆர்வி மற்றும் சிவிக் ஆகிய வாகனங்களின் தயாரிப்பை நிறுத்தியது. தற்போது சிட்டி, அமேஸ், ஜாஸ் உள்ளிட்ட முக்கியமான சில மாடல்கள் சந்தையில் விற்பனையாகின்றன. இதுபோன்ற பல காரணங்கள் இருந்ததால் அடுத்து வெளியேறும் நிறுவனம் ஹோண்டா என யூகிக்கப்பட்டது.
ஆனால், இந்தியா சந்தையில் இருந்து வெளியேறும் திட்டமில்லை என புதிதாக நியமனம் செயய்ப்பட்ட தலைமைச் செயல் அதிகாரி டகுயா சுமரா தெரிவித்திருக்கிறார்.
ஹூண்டாய், கியா உள்ளிட்ட நிறுவனங்களின் வெற்றிக்கு முக்கியமான காரணம் எஸ்.யுவி வாகனங்கள்தான். இந்த பிரிவை இதுவரை தவறவிட்டு வந்த ஹோண்டா அடுத்த ஆண்டு எஸ்.யூ.வி பிரிவில் களம் இறங்குகிறது. இந்தியா எங்களுக்கு முக்கியமான சந்தை. ஆட்டோமொபைல் துறைக்கு சர்வதேச அளவில் நான்காவது பெரிய சந்தை இந்தியா. இங்குள்ள பிரிவை வளர்ப்பதற்காகவே வந்திருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக எங்களுடைய செயல்பாட்டை குறைத்துக்கொண்டதால் தற்போது லாபத்துக்கு வந்திருக்கிறோம். மீண்டும் விரிவாக்கம் செய்யவே திட்டமிடுகிறோம் என ஹோண்டா தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் எங்களுக்கு பலமான அடித்தளம் இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு ஹோண்டா சிட்டி மாடலின் விற்பனை நன்றாகவே இருக்கிறது. அமேஸ் மாடலும் நன்றாக உள்ளது. எஸ்யுவி பிரிவில் காலதாமதமாக இறங்கினாலும் இந்த பிரிவு வளர்ந்து வரும் பிரிவு என்பதால் பெரிய வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.